புதிய கூட்டணி முயற்சிகள் நடக்கின்றன; விரைவில் ஒன்று சேருவோம்: பகிரங்கப்படுத்தினார் இராதாகிருஷ்ணன்!

தமிழினத்தின் தேவைகளையும், தேசியப் பிரச்சனைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வோடு, தமிழினத்தின் கட்சிகள் ஒன்று சேர இருக்கிறோம் என விஷேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வே.இராதாகிருஸ்ணன் கூட்டணி தாவவுள்ளார், ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான கூட்டணிக்குள் நுழையும் பேச்சில் ஈடுபடுகிறார் என்பதை தமிழ்பக்கம் முதன்முதலில் வெளிச்சமிட்டிருந்தது. அதை இப்பொழுது இராதாகிருஷ்ணனே பகிரங்கமாக ஏற்றுள்ளார்.

புதிய கூட்டணிக்கான இறுதிவடிவம் இன்னும் ஓரிரு வாரங்களில் கிடைத்துவிடும் எனவும் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் கட்சிகளும், அதனூடான மக்கள் பிரதிநிதிகளும் மக்களுடைய தேவைகளை இனம் கண்டு, அவைகளைத் தீர்த்துவைக்க வேண்டிய பாரியதொரு கடப்பாட்டை கொண்டிருக்கின்றன. ஆகையால் அவைகளை தீர்த்து வைக்க வேண்டிய உபாயங்களை நாமே உருவாக்க வேண்டும்.

இப்போது தமிழ்மக்கள், வடக்கு, கிழக்கு, மகாணங்களிலும், மலையகத்திலும் செறிந்தும், மற்றைய இடங்களில் பரவலாகவும் வாழ்கிறார்கள். தமிழர்கள் இந்த நாட்டில் ஒரு தேசிய இனம். அவர்களுடைய பாரிய பிரச்சனைகள் தீர்த்துவைக்கப்படாமல் இருக்கின்றபோது, புதிதுபுதிதாக பிரச்சனைகள் முளைத்த வண்ணம் இருக்கின்றன.

இந்த அரசோ பிரச்சினைகளை தீர்பதற்கு பதிலாக அவைகளை சாட்டுப் போக்குச் சொல்லி காலத்தை நீடித்து தனது சிம்மாசனத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது ஒரு பிரதேசத்தின் நிர்வாக அலகான பிரதேச செயலகத்திற்கு அந்தஸ்த்தை வழங்க 30 வருடகாலம் கடந்தும் முடிந்த பாடில்லை. இதனை நாம் தமிழர்களுடைய தேசியப்பிரச்சினையாக பார்க்கிறோம்.

மலைநாட்டு மக்களுடைய அதிகரிக்கப்பட்ட சம்பளம் நாளொன்றுக்கு 50 ரூபா வீதம் இன்னும் வழங்கப்படாதிருக்கின்றது. இத்தனைக்கும் இந்த அரசின் இருப்பை தக்கவைத்தவர்கள் தமிழ்ப்பிரதிநிதிகள். எங்கேயோ தவறிருக்கிறது. சரியான உபாயம் தேவைப்படுகிறது. இதுவே உண்மை.

சில வேளைகளில் எம்மிடையேயுள்ள அரியல் பிரச்சினைகளை மையமாக வைத்து இன்னொரு தரப்பினா் எமக்குள்ளே மூக்கை நுழைத்துவிடுகிறார்கள். இது ஒரு நல்ல சகுனமல்ல.

தேர்தல்காலம் வரும்போது மட்டும் நமது பிரதி நிதிகளைத் தெரிவு செய்ய நமது அரசியல் கட்சிகளை பயன்படுத்துவோம். அதற்கு அப்பால் உள்ள தேசியப்பிரச்சினைக்கு தமிழக்கட்சிகள் யாவும் ஒன்றணைந்து குரல் கொடுப்போம். இதற்கான பேச்சுவார்த்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இடம்பெற்று இறுதிவடிவத்தை அடைந்துவிட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here