சென்னையில் போஸ்டர்களால் பரபரப்பு:தங்கதமிழ் செல்வனை சேர்க்க அ.தி.மு.க.வில் எதிர்ப்பு!

அ.தி.மு.க.வில் தங்கதமிழ் செல்வனை இணைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் பலம் வாய்ந்த சக்தியாக விளங்கியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பிறகு அ.தி.மு.கவில் வீசிய கடும் புயல் அக்கட்சியை 2 ஆக உடைத்தது. காலப்போக்கில், அ.தி.மு.க ஒன்றானபோதும், அக்கட்சியில் இருந்து விலக்கப்பட்ட டி.டி.வி. தினகரன், அ.தி.மு.கவுக்கு போட்டியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். அ.தி.மு.கவின் வாக்கு வங்கியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அசைத்து பார்க்கும் என்று கருதப்பட்டது.

அதேநேரத்தில், இரட்டை இலை சின்னம், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க மேல் முறையீடு வழக்குகளில் டி.டி.வி.தினகரன் அணிக்கு வெற்றி கிடைக்காத நிலையில், அக்கட்சிக்குள்ளே குழப்பம் ஏற்பட்டது. அ.மமு.கவில் இருந்து பலரும் விலகி அ.தி.மு.க மற்றும் தி.மு.கவில் இணைய தொடங்கினர். டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து, எம்.எல்.ஏ பதவியை இழந்த செந்தில் பாலாஜி தி.மு.கவில் இணைந்தார்.

இந்தசூழ்நிலையில் தான், தன்னுடைய செல்வாக்கை நிரூபித்து, அ.தி.மு.கவை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 21 தொகுதிகளுக்கான (4 தொகுதிகள் ஏற்கனவே காலியாக இருந்தது) இடைத்தேர்தலை டி.டி.வி.தினகரன் சந்தித்தார்.

இந்த தேர்தலில் அ.ம.மு.க போட்டியிட்ட எல்லா இடங்களில் தோல்வியை தழுவி, டெபாசிட்டை பறிகொடுத்தது.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தங்கதமிழ் செல்வன் படுதோல்வியை சந்தித்தார். நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் அ.ம.மு.கவில் புகைச்சல் ஏற்பட்டது. கட்சி தலைமைக்கு எதிராக தங்க தமிழ்செல்வன் விமர்சனங்களை வைக்க தொடங்கினார்.

தேர்தல் முடிவுகளால் சோர்ந்து போன தங்கதமிழ்செல்வன், அ.தி.மு.க மீதான தன்னுடைய எதிர்ப்பு மனநிலையை மாற்றிக்கொண்டு, அ.தி.மு.கவில் மீண்டும் இணைய விரும்புவதாக கூறப்படுகிறது. இதற்காக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசியதாகவும் தெரிகிறது. ஆனால் அவரின் இந்த முயற்சியை அ.தி.மு.க தலைமை விரும்பவில்லை. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தங்கதமிழ் செல்வனை சேர்க்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

இதற்கு வலுசேர்ப்பது போல, சென்னையில் பல இடங்களில் அ.தி.மு.க நிர்வாகிகள் என்ற பெயரில் தங்கதமிழ் செல்வனுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த போஸ்டரில், “கட்சிக்கு (அ.தி.மு.க) துரோகம் செய்த தங்கதமிழ் செல்வனை கட்சியில் இணைக்காதே, ஜெயலலிதாவின் ஆட்சியை அழிக்க நினைத்த தங்க தமிழ்செல்வனை கட்சியில் சேர்த்தால், ஜெயலலிதா ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது” போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.கவில் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், தி.மு.கவில் இணைய தங்கதமிழ் செல்வன் திட்டமிட்டுள்ளதாகவும் அவரை தி.மு.கவில் இணைக்க செந்தில் பாலாஜி, வி.பி.கலைராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

“தி.மு.கவில் இணைய இருக்கிறீர்களா?” என்று தங்கதமிழ்செல்வனிடம் நிருபர்கள் கேட்டபோது, “நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போது நான் ஓய்வில் இருக்கிறேன்” என்று முடித்துக் கொண்டார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here