ஸ்கிரிப்ட் படி நடிக்கிறாரா அபிராமி?

அதெப்படி வந்த முதல் நாளே காதல் வரும்? அந்தக் காதலையும் உடனடியாக எப்படித் தன் தோழிகளிடம் சொல்ல முடியும்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அபிராமியின் செயல்களைக் கண்டு ரசிகர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் இவை.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.

இந்நிலையில் மொடலும் நடிகையுமான அபிராமி, நடிகர் கவின் மீதான தனது விருப்பத்தைத் தெரிவிக்கும் சம்பவம் முதல் நாள் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. நடிகை ஷெரினிடம் அபிராமி பேசிக்கொண்டிருந்தபோது, கவின் மீது தனக்கு கிரஷ் உள்ளதாகத் தெரிவித்தார். அபிராமி, ஷெரின், சாக்‌ஷி அகர்வால் ஆகிய மூவரும் இந்த விஷயம் குறித்துப் பேசும் காட்சிகள் ஒளிபரப்பாயின.

இந்த விஷயம் 2ம் நாளும் தொடர்ந்தது. கவின் தன்னுடைய காதலைப் புரிந்துகொள்ளவில்லை என்று அபிராமி அங்கலாய்ப்பது போன்ற சம்பவங்கள் நேற்று முன்தினம் நடைபெற்றன. ஒருகட்டத்தில் அபிராமியின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட கவின், இன்னும் 30 நாள் கழித்து என்னைப் பற்றி முடிவு செய் என்று கூறினார்.

அதேபோல நேற்று முன்தினம், புதிய போட்டியாளராக நடிகையும் மொடலுமான மீரா மிதுன் உள்ளே நுழைந்தார். இருவரும் மொடல்கள் என்பதாலும் இருவருக்கும் முன்பகை இருப்பதாலும் உடனடியாக மீரா மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்தினார் அபிராமி. இதனால் அவருடைய தோழிகளான சாக்‌ஷி அகர்வால், ஷெரின் ஆகிய இருவருமே மீராவை வேறு விதமாக நடத்தினார்கள்.

நிகழ்ச்சி ஆரம்பித்து மூன்று நாள்கள் தான் ஆகியுள்ளன. ஆனால் இந்த மூன்று நாள்களிலேயே அபிராமியின் நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்கள் ரசிகர்கள். நாலு பக்கமும் கமரா இருக்கிறது என்று தெரிந்தும் அபிராமி எப்படி தன்னுடைய உணர்வுகளை இந்தளவுக்கு வெளிப்படுத்துகிறார், அதுவும் வந்த முதல் நாளிலிருந்தே என்பது அவர்களுடைய சந்தேகம். போலியாக நடந்துகொள்கிறார், ஸ்கிரிப்டின்படி அவருடைய நடவடிக்கைகள் உள்ளனவா போன்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பியுள்ளார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியே ஸ்கிரிப்டின் படி தான் நடக்கிறது என்கிற கருத்து பலருக்கும் உண்டு. பல்வேறு மொழிகளில் வெளியாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரே மாதிரியான சில சம்பவங்கள் நடைபெற்றத்தையே பலரும் உதாரணமாகக் கூறுகிறார்கள். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலமுறை இதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ளார் கமல். ஸ்கிரிப்ட் படி இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாது, அனைவரும் இயல்பாக நடந்துகொள்வதையே நிகழ்ச்சியில் ஒளிபரப்புகிறோம் என்று கூறியுள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்டின்படி அமைவதில்லை என்று விளக்கமளித்துள்ளார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here