‘பாலியல் பலாத்காரத்திற்கு முயன்றபோது குழந்தை கத்தியதால் கொன்றேன்’: தாய்மாமன் வாக்குமூலம்!

கோவையில், 2½ வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது சத்தம் போட்டதால் கிணற்றில் வீசி கொன்றேன்என்று தாய் மாமன் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

கோவையை அடுத்த அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்தவர் கனகராஜ் (38). இவரது மனைவி காஞ்சனா (21). இவர்களுக்கு அரும்பதா (2½) என்ற பெண் குழந்தை இருந்தது. கடந்த 23-ந் தேதி அதிகாலை குழந்தை அரும்பதா அந்த பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பிணமாக கிடந்தாள். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த அன்று இரவு குழந்தையின் தந்தை கனகராஜ் பெற்றோரை பார்க்க அன்னூர் சென்றிருந்தார்.

குழந்தை பிணமாக கிடந்த பாழடைந்த கிணற்றை சுற்றிலும் புதர்கள் மண்டி கிடந்ததால் குழந்தை தவறி விழ வாய்ப்பில்லை என்றும் இது கொலை என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். மேலும் குழந்தையின் நுரையீரலில் தண்ணீர் இருந்ததால் அதை யாரோ உயிருடன் கிணற்றில் வீசி கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. எனவே குழந்தையை யார் கொலை செய்தது. எதற்காக கொலை செய்தார்கள் என்ற கேள்வி தான் போலீசாரின் முன்பு இருந்தது. எனவே சம்பவம் நடந்த போது அந்த வீட்டில் இருந்த அரும்பதாவின் தாயார் காஞ்சனா, காஞ்சனாவின் தந்தை குப்புசாமி, காஞ்சனாவின் தாயார் பேச்சியம்மாள், தங்கை மகன் பூபதி, குப்புசாமியின் முதல் மனைவியின் மகள் கற்பக விஷ்ணு, மகன் ரகுநாதன் ஆகியோரிடம் கடந்த 3 நாட்களாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்களில் குடிப்பழக்கம் யாருக்கு உள்ளது என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதற்கு காரணம் குழந்தை வீசப்பட்ட கிணறு அருகே ஒரு லுங்கியும் மதுபாட்டிலும் கிடந்தது. எனவே மது அருந்தி விட்டு குழந்தையை கொலை செய்து இருக்கலாம் என்ற நோக்கத்தில் தாய் மாமன் ரகுநாதனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அரும்பதாவை கொலை செய்ததை ரகுநாதன் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் டிப்ளமோ படித்துள்ளேன். கடந்த 3 ஆண்டாக கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறோம். நான் மாடுகளை வளர்த்து வருகிறேன். பாலை கறந்து வீடு வீடாக சென்று ஊற்றி வருகிறேன். கடந்த 23-ந் தேதியன்று இரவு வீட்டுக்கு அருகில் உள்ள பழனியப்பன் தோட்டத்தில் அமர்ந்து மது குடித்தேன். போதை ஏறிய நிலையில் நான் வீட்டுக்கு வந்தேன். அப்போது வீட்டில் காஞ்சனா குழந்தையுடன் இருந்தார். போதையில் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. இரவு அனைவரும் தூங்க சென்றனர். நான் வீட்டின் வெளியே படுத்திருந்தேன்.

அதிகாலை 3 மணியளவில் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது காஞ்சனாவின் அருகில் படுத்திருந்த குழந்தை அரும்பதாவை தூக்கிக் கொண்டு வெளியே வந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றேன். உடனே அரும்பதா சத்தம் போட்டு அழத்தொடங்கினாள். இதனால் மற்றவர்களுக்கு சத்தம் கேட்காமல் இருக்க குழந்தையின் வாயை பொத்தினேன். குழந்தையை மீண்டும் உள்ளே தூக்கி சென்று படுக்க வைத்தால் நான் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை மற்றவர்களிடம் சொல்லி விடுவாள் என்பதால் அவளை கொல்ல திட்டமிட்டேன். அப்போது தான் அருகில் இருந்த பாழடைந்த கிணறு பற்றி நினைவுக்கு வந்தது. அந்த குழந்தையை அந்த கிணற்றில் போட்டு விட்டால் யாருக்கும் சந்தேகம் வராது என்பதால் உடனே குழந்தையை தூக்கிச்சென்று அந்த பாழடைந்த கிணற்றில் போட்டு விட்டு ஒன்றும் தெரியாதவன் போல் வந்து படுத்துக்கொண்டேன். இதை யாரும் பார்க்கவில்லை. அதிகாலை 4.30 மணிக்கு காஞ்சனா எழுந்தவுடன் குழந்தையை காணவில்லை என்று கூறி அனைவரும் தேடியபோது நானும் அவர்களோடு சேர்ந்து தேடினேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here