கூட்டமைப்பிற்கு மாற்று சக்தி உருவாகவில்லை: த.சித்தார்த்தன்!

தமிழ் சமூகத்தில் தாய் மாமனுக்கு ஒரு அந்தஸ்து உள்ளது. அந்த அர்த்தத்தில்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு மாமா வேலை பார்க்கிறது என முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறினாரா என கேள்வி எழுப்பியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், அதற்கு வேறு அர்த்தங்கள் உள்ளதா என்பது தொடர்பாக தனக்கு தெரியவில்லை எனவும் கூறியிருக்கின்றார்.

சுன்னாகம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்தேசிய கூட்டமைப்பு மாமா வேலை செய்கிறது என முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியிருக்கின்றார். தமிழ் சமூகத்தில் மாமா என்ற உறவுக்கு ஒரு அந்தஸ்து இருக்கின்றது. மரியாதை இருக்கின்றது. அதைசுட்டித்தான் கூறினாரா? அல்லது வேறு அர்த்தத்தில் கூறினாரா? என்பது தொடா்பாக எனக்கு தெரியவில்லை.

உண்மையில் மாமா வேலை என்ற கருத்தையே சரியாக என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் எங்களை பொறுத்தளவில் நாங்கள் மக்களுடைய பிரச்சினைகளுக்காக அரசாங்கத்துடன் பேசுகிறோம். ஒரு அரசியல் தரப்பாக, மக்களுடைய ஆணையை பெற்ற தரப்பாக எங்களுக்கு அந்த பொறுப்பும் கடமையும் இருக்கின்றது.

அந்தவகையில் நாங்கள் பேசுகிறோம், பேசிக் கொண்டே இருக்கிறோம். அவ்வாறு பேசாமல் இருக்க முடியாது. அந்த பேச்சுக்களில் அரசு கூறும் விடயங்களை நாங்கள் மக்களுக்கு கூறுகிறோம். இதனை எந்த அரசியல் தரப்பும், மக்கள் ஆணையை பெற்ற எந்த தரப்பும் செய்யும், செய்யவேண்டும்.

எந்த அரசியல் கட்சிகளும் மக்களைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற போது மக்கiளுடைய பிரச்சனைகளை எடுத்துக் கூற வேண்டியது, அதற்காக அழுத்தங்களைக் கொடுக்க வேண்டியது, போராட்டங்களை நடாத்த வேண்டியது அந்தக் கட்சிகளினுடைய கடமை. அதனையே நாங்கள் செய்கின்றோம். ஆகவே அதற்கு மேல் மாமா வேலை என்ன என்பது எனக்கு தெரியவில்லை என்றார்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று அணியொன்று உருவாகுமா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்தபோது,

“மாற்று அமைப்பு ஒன்று உருவாகுவதற்கான சாத்தியக் கூறுகளைக் காணவில்லை. ஏனென்றால் இன்று கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கக்கூடிய கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இல்லை. அவர்களில் ஒருவரை ஒருவர் பேசுவதும், ஒருவரை மற்றவர் றோ என்றும் அதற்காக வேலை செய்கிறார் என்பதும், இவர்தான் சீனாவிற்காக வேலை செய்கிறார் என்று கூறிக்கொண்டிருக்கும் நிலைமை இருக்கிறது. இப்படியான நிலைப்பாடு இருக்கிற பொது சரியான மாற்றுக்கூட்டு ஒன்று எப்படி சாத்தியம்?.

இப்போதைய நிலையில் ஒரு மாற்றை என்னால் பார்க்க முடியாமல் இருக்கிறது. ஆனால் கூட்டமைப்பிற்குள் பிழை இல்லாமல் இல்லை. கூட்டமைப்பை பொறுத்தமட்டில் பல பிழைகள் இருக்கின்றன. ஆனாலும் இருப்பதை உடைத்துக் கொண்டு போகிற போது சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அப்படியான சரியான நிலைப்பாட்டை எடுக்கக் கூடிய வகையில் ஒரு மாற்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை“ என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here