இம்முறை உலகக்கிண்ணம் பாகிஸ்தானிற்கே: கற்பூரம் அடித்து சத்தியம் செய்வதற்கு காரணங்கள் இவைதான்!

இம்முறை உலகக்கிண்ணம் தமக்குத்தான் என கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக, பாகிஸ்தான் நெட்டிசன்கள் சொல்கிறார்கள். வாயில் வந்ததை சும்மா அடித்து விட்டு, இதை அவர்கள் சொல்லவில்லை. அதற்கு திகிலூட்டும் புள்ளிவிபரங்களையெல்லாம் அவர்கள் வைத்திருக்கிறார்கள்.

பாகிஸ்தான் உலக்கிண்ணத்தை வென்றது 1992 இல். இன்றைய பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானிற்கு உலகக்கிண்ணத்தை பெற்றுக்கொடுத்தது.

கப் இம்முறை நமக்குத்தான் என பாகிஸ்தானியர்கள், அபிநந்தன் விவகாரத்தையெல்லாம் வைத்து விளம்பரம் செய்து, துணிச்சலாக வெளியிடுவதற்கு காரணம், 1992இல் நடந்ததெல்லாம் இம்முறையும் நடக்கிறதாம். அச்சொட்டாக அப்போது நடந்ததெல்லாம் இப்போதும் நடப்பதால், உலகக்கிண்ணம் நமக்குத்தான் என பாகிஸ்தானியர்கள் நம்புகிறார்கள்.

1992 உலகக்கிண்ணத்தில் 9 அணிகள் விளையாடின. ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் தலா ஒவ்வொரு முறை மோதி, முதல் 4 அணிகளும் அரையிறுக்குள் நுழைந்தன.

இம்முறை 10 அணிகள். மற்றைய அணியுடன் தலா ஒவ்வொரு முறை மோதி, 4 அணிகள் அரையிறுக்கு செல்லவுள்ளன. போட்டி முறை, முதலாவது ஒற்றுமை.

1992இல் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் இரண்டு வெள்ளைப்பந்துகள் பாவிக்கப்பட்டன. இரண்டு முனைக்கும் இரண்டு பந்துகள் இருந்தன. பின்னர் நடந்த உலகக்கிண்ணங்களில் இந்த முறை பாவிக்கப்படவில்லை. இம்முறைதான் மீளவும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. இது இரண்டாவது ஒற்றுமை.

இதையெல்லாம் விட மிக முக்கியமான மூன்றாவது ஒற்றுமை- போட்டி முடிவுகள். 1992இல் எப்படியான போட்டி முடிவுகளை பெற்றதோ, அதே வரிசையில்தான் இம்முறையும் பாகிஸ்தான் முடிவுகளை பெற்று வருகிறது.

1992இலும் முதல் போட்டியில் பாகிஸ்தான் தோற்றது.இரண்டாவது வெற்றி. மூன்றாவது முடிவில்லை. நான்கு, ஐந்தாவது போட்டிகள் தோல்வி. ஆறாவது வெற்றி. 7வது வெற்றி.

இம்முறை முதல் ஆறு போட்டிகளிலும், 1992இல் வந்த அதே முடிவுதான் வந்திருக்கிறது. இன்றைய ஏழாவது போட்டியில் என்ன நடக்கிறது என்று தெரிந்தால், பாகிஸ்தான் உலகக்கிண்ணத்தை வெல்லுமா, இல்லையா என்பது தெரிந்து விடும்!

இரண்டு உலக்கிண்ணங்களிலும் பாகிஸ்தான் முதல் ஆட்டங்களில் மேற்கிந்தியத்தீவுகளிடமே தோல்வியடைந்தது.

1992இல் மார்ட்டின் குரே தலைமையிலான நியூசிலாந்தை வீழ்த்தியே, அரையிறுதியை உறுதிசெய்தது பாகிஸ்தான். இம்முறையும் இன்று நியூசிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழையலாம்.

பாகிஸ்தானியர்களிற்கு இந்த இடத்தில் ஒரு கவலையுள்ளது. 1992இல் நியூசிலாந்தை பாகிஸ்தான் எதிர்கொண்ட ஆட்டம், அந்த தொடரின் 34வது ஆட்டம். ஆனால் இன்றைய போட்டி, இந்த தொடரின் 33வது போட்டி.

1992இல் அணியில் இளம் வீரராக இன்சமாம் உல் ஹக் இருந்தார். இம்முறை இளம்வீரராக அவரது மருமகன் இமாம் உல் ஹக் இருக்கிறார்.

1992ஆம் ஆண்டு ஆறாவது போட்டியில், பாகிஸ்தானின் ஆறாம் இலக்க வீரராக களமிறங்கிய இடதுகை துடுப்பாட்ட வீரர் சோஹைல் அமிர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இம்முறையும் ஆறாவது போட்டியில், ஆறாம் இலக்கத்தில் இறங்கிய இடதுகை துடுப்பாட்ட வீரர் சோஹைல் ஹரீஸ் ஆட்டநாயகனானார்.

1992 உலகக்கிண்ணத்திற்கு முந்தைய இரண்டு உலக்கிண்ணங்களையும் இந்தியா, அவுஸ்திரேலியா வென்றன. இம்முறை உலகக்கிண்ணத்திற்கு முந்தையவற்றையும் இந்தியா, அவுஸ்திரேலியா வென்றன.

இதைவிட இன்னொரு மிரட்டல் ஒற்றுமையுள்ளது. 1992இல்  பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியும், மறைந்த பெனாசிர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி சிறையில் இருந்தார். 2019 ல் மீண்டும் ஆசிப் அலி சர்தாரி சிறையில் உள்ளார்.

இந்தளவு ஒற்றுமையிருக்கும்போது, பாகிஸ்தான் உலகக்கிண்ணத்தை வெல்லாமல் விடுமா என பாகிஸ்தான் ரசிகர்கள் கேட்பதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது!

ஆனால், 1992இல் இம்ரான் கான் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மைதானத்தில் கொட்டாவி விட்டாரா என்று மட்டும் யாரும் கேட்டு விடாதீர்கள்!

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here