
பயங்கரவாத சம்பவத்துக்கு சதொச நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சின் மேலதிக செயலாளரின் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும் பேதே அவர் இவ்வாறு கூறினார்.
அமைச்சின் கீழ் உள்ள எந்தவொரு நிறுவனங்களும் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு வைத்திருக்கவில்லை என்று கூறினார்.
அதேநேரம் சதொச நிறுவன கட்டிடத்தில் இரகசிய அறைகள் இருப்பதாக வெளியான குற்றச்சாட்டை நிராகரித்தார். தான் அறிந்தவரையில் அப்படியான அறைகள் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
வௌிநாட்டு முதலீட்டு வேலைத்திட்டம் ஒன்றுக்கு அரசாங்கம் என்ற வகையில் தாம் அலுவலகம் ஒன்றை வழங்க வேண்டி இருந்ததாகவும், அதன்படி தானே 09ம் மாடியில் அவ்வாறு அறை ஒன்றை தற்காலிகமாக வழங்கியிருந்ததாகவும் கூறினார்.
அதேநேரம் சதொச நிறுவனம் சீனி என்ற பெயரில் போதைப் பொருள் கொண்டு வருவதாக கூறப்படும் குறற்ச்சாட்டுக்கும் அவர் மறுப்புத் தெரிவித்தார்.
