மாலைதீவு தாக்குதலின் சூத்திரதாரி லுப்தி கொழும்பு தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்தார்!

1988ஆம் ஆண்டு மாலைதீவில் புளொட் அமைப்பு நடத்திய தாக்குதலின் பின்னணியில் இருந்த அப்துல்லா லுத்பி, கடந்த இரண்டு மாதங்களாக கொழும்பிலுள்ள மாலைதீவு தூதரகத்தில் தங்கியிருந்த தகவல் வெளியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து, இலங்கைக்குள் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்திய பாதுகாப்பு தரப்பினர் சோதனைகளை மேற்கொள்ள ஆரம்பித்ததை தொடர்ந்தே லுத்பி, கொழும்பிலுள்ள மாலைதீவு தூதரகத்தில் சரணடைந்துள்ளார்.

மே 1ம் திகதி அவர் சரணடைந்துள்ளார்.

முன்னாள் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் உமர் நஸீர் ருவிற்றரில் இந்த தகவலை வெளியிட்டதை தொடர்ந்து, அந்த நாட்டில் இந்த விவகாரம் பெரியளவில் விவாதத்திற்குரிய ஒன்றாக இருந்து வந்தது. எனினும், மாலைதீவு அரசோ, வெளியுறவுத்துறையோ, பொலிசாரோ இது பற்றி பகிரங்கமாக பேசவில்லை.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலைதீவு பொலிசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், லுத்பி கொழும்பில் சரணடைந்ததை உறுதிசெய்தனர். தற்போது லுத்பி பொலிசாரின் காவலில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புளொட் அமைப்பின் துணையுடன், மாலைதீவை இராணுவ நடவடிக்கையின் மூலம் கைப்பற்ற அவர் முயன்ற விவகாரத்தில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்தார். 2010 ஜனவரி 16ம் திகதி மருத்துவ சிகிச்சைக்காக இலங்கை செல்ல அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக இலங்கை வந்த லுத்பி தலைமறைவாகி விட்டார்.

2012இல் மாலைதீவு குற்றவியல் நீதிமன்றம், லுத்பியை கண்டுபிடித்து, கைது செய்ய உத்தரவிட்டிருந்தது. அதை தொடர்ந்து, இன்டர்போல் மூலமாக அவரை கைது செய்யும் சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. அப்போதைய உள்துறை அமைச்சர் உமர் நஸீர், லுத்பி பற்றிய தகவல்களை தருபவர்களிற்கு 10,000 அமெரிக்க டொலர் பரிசளிக்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், லுத்பி இலங்கைக்குள் இதுவரை தலைமறைவாக இருந்துள்ளார்.

மாலைதீவு மன்னர் பரம்பரையை சேர்ந்த அப்துல்லா லுத்பி, அந்த நாட்டில் தமது பிரதேசம் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்படுவதாக குறிப்பிட்டு, உள்ளூர் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தின் பின்னணியில் செயற்பட்டார். ஆயுதப்புரட்சியின் மூலம் நாட்டை மீட்க, புளொட் அமைப்பின் படையணிகளை உதவிக்கு கோரியிருந்தார். விடுதலை இயக்கங்களை இந்தியா அப்போது தனது நாட்டிலிருந்து வெளியேற்றி வந்தது. இந்த பின்னணியில், மாலைதீவில் பின்தளம் அமைக்கலாமென்ற ஏற்பாட்டில், லுத்பிக்கு புளொட் உதவியிருந்தது.

பிராந்தியத்தில் தனக்கு தெரியாமல் இப்படியொரு நடவடிக்கை நடந்ததால் அதிர்ச்சியடைந்த இந்தியா, விரைவாக அந்த நடவடிக்கையை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here