தமிழர்களிற்கு இப்போது கல்முனையை கொடுத்தால், நாளை ஜனாதிபதி, பிரதமர் பதவியையும் கேட்பார்கள்!

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று பல கோரிக்கைகளை முன்வைத்து ஆயுதமேந்திப் போராடியதை போன்று இன்று நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் கருணா ஆகியோர் உண்ணாவிரத போராட்டம் என்ற ரீதியில் போராடி பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றார்கள். இதற்கு ஒரு தலைப்பட்சமாக ஆதரவு வழங்கும் பௌத்த பிக்குகள் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் தூரநோக்குடன் ஆராய்ந்து பொறுப்புடன் செயற்படுதல் அவசியமாகும் என முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் மொஹமட் மில்ஹான் தெரிவித்தார்.

ஏப்ரல் குண்டுத்தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உள்ளடக்கிய 10 கோரிக்கைகளை முன்வைத்து முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் நேற்று செவ்வாய்க்கிழமை புதுக்கடை நீதிமன்றத்தின் அருகில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே மில்ஹான் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏப்ரல் 21ம் திகதி அடிப்படைவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் குண்டு தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத் தாக்குதல்தாரிகள் இறந்ததன் பின்னர் கூட அவர்கள் நல்நிலையினை அடையாத வகையில் முஸ்லிம் மக்கள் கடுமையாக செயற்பட்டனர். மையவாடிகளில் கூட தாக்குதல்தாரிகளின் உடல்களை அடக்கம் செய்ய விடவில்லை.

குண்டுத்தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்கள் உளவியல்ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் உள்ளனர். கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை தரமுயர்த்துமாறு கோர வியாழேந்திரன், கருணா போராட்டத்தை முன்னெடுப்பது எதிர்காலத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று ஆயுதமேந்தி போராடியதன் விளைவு பாரதூரைமாக அமைந்தது. இன்று அதன் தொடர்ச்சியாக தமிழ் அரசியல்வாதிகள், பௌத்த பிக்குகளுடன் இணைந்து போராட்டத்தை தொடர்கிறார்கள். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய தற்போது தரமுயர்த்தினால், தமிழர்கள் நாளை நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கிய பதவிகளை கேட்டு போராடுவார்கள். இவற்றை நிறைவேற்ற நாட்டு மக்கள் ஒத்துழைப்பார்களா?“ என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here