பத்திரிகை செய்தியின் எதிரொலி: ஏழைகளிற்கு இலவசமாக உணவளித்த ஜனபோஷ திட்டம் நிறுத்தப்பட்டது!

வைத்தியசாலைகளுக்கு வரும் ஏழை மக்களுக்காக முஸ்லிம் தனவந்தரை ஒருவரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த ஜனபோஷ என்னும் பெயரிலான இலவச உணவு வழங்கும் திட்டத்தை நேற்று முதல் இடைநிறுத்தியுள்ளதாக ஜனபோஷ பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் வழங்கும் உணவில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்டு, பெண்களிற்கு வழங்கப்படுவதாக பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான காமினி லொக்குகே தெரிவித்ததாக திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, இந்த மனிதாபிமான திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலை, களுபோவில வைத்திய சாலை ஆகியவற்றுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மற்றும் அவர்களை பார்வையிட வரும் உறவினர்களில் வறுமை நிலையில் உள்ளவர்களிற்கு காலை மற்றும் பகல் உணவுகள் இந்த நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.

ஜனபோஷ என்னும் பெயரில் 2012 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த திட்டத்தினால் மூன்று வைத்தியசாலைகளிலும் தினம் சுமார் 1500 பொதுமக்கள் இலவசமாக உணவு நடைபெற்று வந்தனர். தரமான முறையில் சுகாதார ஒழுங்குகளைப் பேணி முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த திட்டத்திற்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றிருந்தது. சுகாதார பரிசோதகர்கள் அனுமதி வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் காமினி லொக்குகே தெரிவித்ததாகக் கூறி, சில தினங்களின் முன் திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை தொடர்ந்து அங்கு பணிபுரிபவர்கள் மீதும், நிறுவனத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தின் இத்திட்டத்தை நிற்றுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக ஜனபோஷ பவுண்டேசனின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனபோஷ பவுண்டேசனின் அறிக்கையில்,

“ஆழ்ந்த கவலையுடனும் கனத்த இதயத்துடனும் நேற்று முதல் (25) வைத்தியசாலைகளில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை இடைநிறுத்திக் கொள்கிறோம். 2012ஆம் ஆண்டு முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எமது சேவை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 2016 களுபோவில வைத்தியசாலையில்லும், 2017இல் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையிலும் சேவைகளை விஸ்தரித்தோம். இதன் மூலமாக இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் வருடாந்தம் சுமார் 5 இலட்சம் ஏழை மக்களுக்கு உணவு அளித்து வந்தோம். எனினும் ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உதவும் உன்னத நோக்கத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல் பரப்பப்படுவது பற்றி எமக்கு அறியக் கிடைத்துள்ளது. இந்நிலையில் வேறுவழியின்றி எமது சேவையை மூன்று வைத்தியசாலையிலும் இடைநிறுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான தம்மை அர்ப்பணித்து செயலாற்றி வந்த எமது பணியாளர்களின் பாதுகாப்பு பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தான் அவ்வாறானதொரு கருத்தையும் வெளியிடவில்லை என்றும், திவயின பத்திரிகை பொய்யான செய்தியை வெளியிட்டதாகவும் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள அவர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

அந்த அறிவித்தலில்,

“திவயின பத்திரிகையில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது குறித்து எனது நண்பரான முன்னாள் ஆளுநர் அலவி மௌலானாவின் மகன் என்னை தொடர்பு கொண்டு கேட்டார். அத்துடன் தற்போதைய மேல் மாகாண ஆளுநர் முஸமிலும் என்னுடன் உரையாடினார். நான் அவ்வாறான ஒரு கருத்தை பொது இடம் ஒன்றிலோ அல்லது தனிநபர்கள் எவரிடமும் கூறவில்லை. அந்த செய்தியில் குறிப்பிட்ட விடயங்களை நான் முற்றாக மறுக்கிறேன்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here