சாதி மாறி திருமணம் செய்த வாலிபர் கவுரவக்கொலை: அண்ணன் வெறிச்செயல்!

மேட்டுப்பாளையத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த காதலியை திருமணம் செய்ய முயன்ற தம்பியை அண்ணன் வெட்டி கொலை செய்தார். படுகாயம் அடைந்த காதலிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (45), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பூவாத்தாள். இவர்களுடைய மகன்கள் வினோத் (25), கனகராஜ் (22), கார்த்திக் (19). இவர்கள் 3 பேரும் பாரம் தூக்கும் தொழிலாளர்கள்.

கனகராஜ், வெள்ளிப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் வேறு சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். இவர்களுடைய காதல் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இந்த காதலுக்கு கனகராஜின் தந்தை கருப்பசாமி மற்றும் சகோதரர்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கனகராஜை திருமணம் செய்து கொள்வதற்காக அந்த இளம்பெண் வீட்டைவிட்டு வெளியேறி கனகராஜின் வீட்டுக்கு வந்தார். இதற்கு கனகராஜின் சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த இளம்பெண் திரும்பிச்சென்றார்.

இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண் மீண்டும் காதலன் வீட்டுக்கு வந்தார். இதனால் கனகராஜின் குடும்பத்தில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடைய தந்தை கருப்பசாமி, தன்னுடைய மகன் கனகராஜிடம், காதலியை வாடகைக்கு வீடு பார்த்து குடியேறுமாறும், பிரச்சினை தீர்ந்த பின்னர் திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் கனகராஜ், காதலியை அழைத்துக்கொண்டு அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டுக்கு சென்று விட்டார். இது கனகராஜின் அண்ணன் வினோத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று மாலை 5.20 மணியளவில் வினோத், கனகராஜின் வீட்டுக்கு சென்றார். அப்போது அண்ணன்-தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த வினோத் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கனகராஜை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் அவர் அலறித்துடித்தார். அவரது சத்தம் கேட்டு காதலி ஓடி வந்து தடுக்க முயன்றார். இதனால் அந்த இளம்பெண்ணின் தலை மற்றும் முகத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத வினோத், கனகராஜை அரிவாளால் வெட்டினார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உடனே வினோத் அந்த வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து கனகராஜின் காதலியை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த படுகொலை பற்றிய தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால், தம்பியை அண்ணனே வெட்டி கவுரவக்கொலை செய்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here