கள்ளக்காதலியை கொன்ற ஏறாவூர் முன்னாள் பிரதேச செயலாளரிற்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை!

ஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சதக்கத்துல்லாஹ் ஹில்மிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன். கள்ளக்காதலியை கொன்ற வழக்கு நீண்டகாலமாக இடம்பெற்று வந்த நிலையில், இன்று (25) தண்டனை அறிவிக்கப்பட்டது.

2006 ஓகஸ்ட் மாதம் 31ம் திகதி ஜெயச்சந்திரா ஜெயந்தா என்பவருக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 2018 ஜூன் மாதம் 11ம் திகதி குற்றப் பத்திரம்மொன்று மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சதக்கத்துல்லாஹ் ஹில்மிக்கு எதிராக வழங்கப்பட்ட சாட்சியங்களின் பிரகாரம் கொலைகுற்றச்சாட்டினை புரிந்துள்ளார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

பத்து வருட கடூழிய சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும், அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மூன்று மாத கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி கட்டளையிட்டார்.

மேலும் உயிரிழந்த பெண்ணின் மகனுக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும் அதனை வழங்காவிட்டால் ஒரு வருட கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்குமாறும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சதக்கத்துல்லாஹ் ஹில்மி திருகோணமலை பிராந்திய சுகாதார பணிமனையின் உதவி பணிப்பாளராக கடமையாற்றி கொண்டிருந்த வேளையில் உயிரிழந்த பெண்ணும் அதே அலுவலகத்தில் கடமையாற்றி கொண்டிருந்ததாகவும், அவர்களுக்கு இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டு அந்த காதல் தொடர்பினால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பின்னர் அவர் ஏறாவூர் பிரதேச செயலராக கடமையாற்றியபோது, கடமையிலிருந்து விலக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here