எழுத்துமூல உத்தரவாதம் கேட்பது முட்டாள்த்தனம்; சம்பந்தன், சுமந்திரன், மாவை பதவிவிலக வேண்டும்: சங்கரி ‘சரவெடி’!

ஐனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முடிவெடுத்து விட்டனர். ஆனாலும் அவர்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே தாம் இன்னும் முடிவு எதனையும் எடுக்கவில்லை எனக் கூறி மக்களை ஏமாற்றி வருவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தமது சுயநலன்களுக்காக மக்களை ஏமாற்றி வருகின்ற கூட்டமைப்பின் சம்மந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றவர்கள் இனியும் மக்களை ஏமாற்றாது அரசியிலில் இருந்த விலகி வழிவிட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்ட ஆனந்தசங்கரி, இந்த ஐனாதிபதித் தேர்தலில் ஒருவர் இன்னொருவரைப் புகழ்வதும் மற்றொருவர் இன்னொருவரை ஏசுவதுமாக காமெடிகளும் அரங்கேற்றப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.கே.கே.எஸ். வீதியின் நாச்சிமார் கோவிலிற்கு அருகிலுள்ள தனது கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தல் குறித்து பல கட்சிகளும் தமது நிலைப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இதில் தமிழ்த் தரப்புக்கள் ஆழமாகச் சிந்தித்து ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கின்றது. அவ்வாறு எடுக்கின்ற முடிவை பகிரங்கப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. அதனடிப்படையில் நாம் எமது பிரச்சனைகள் தேவைகள் தொடர்பில் பேசி ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

ஏனெனில் தேர்தலைப் புறக்கணிப்பது ஆரோக்கயமானதல்ல. இவ்வாறு தேர்தலைப் புறக்கணிப்பதால் பாதிப்புக்களே ஏற்படும். கடந்த 2005 ஆம் ஆண்டு ஐனாதிபதி தேர்தலில் கூட இன்றைய பிரதமராக இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க சமஷ்டி முறையிலான ஆட்சியை முன்வைத்தே தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு மக்கள் ஆதரவளித்தனர். ஆனாலும் ஒரு இலட்சம் வாக்குகளால் அவர் தோல்விடைந்திருந்தார்.

ஆக நாம் வாக்களித்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார். அதன் பின்னர் அந்தத் தீர்வை அவர் வழங்கியிரப்பாரோ இல்லையோ என்பதற்கப்பால் சமஸ்டி முறையிலான ஆட்சியை சிங்கள மக்களும் ஏற்றுக் கொண்டதாக இருந்திருக்கும். ஆனால் துரதிஸ்டவசமாக அது நடக்கவில்லை. ஆகவே இனியும் தேர்தல்களைப் புறக்கணிப்பதென்பது தேவையில்லாத வேலை.

ஆகவே தேர்தலில் நாம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதற்கமைய எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்காக எழுத்து மூல அறிக்கைகளைப் கேட்பது ஆரோக்கியமானதல்ல. அது முட்டாள்த்தனம். ஏனெனில் அதனை அவர்கள் தரப் போவதில்லை. அவ்வாறு தந்தாலும் அதனை வைத்து எதிராளிகள் எதிராகப் பிரச்சாரம் செய்து வெற்றிபெற முனைவார்கள்.

ஆகையினால் உரியமுறையில் பேசி சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஏனெனில் மனிதனுக்கு வார்த்தைதான் முக்கியம். ஆகவே அரசியலில் இருக்கின்றவர்கள் அந்த வார்த்தை தவறினால் அதிலிருந்து விலக வேண்டும். இந்த நிலைப்பாட்டிற்கமைய எமது அயல் நாடான இந்தியாவில் உள்ள ஆட்சிமுறை போன்று வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை நாம் முன்வைக்கலாம்.

அதற்கமைய இந்தியாவின் தமிழ் நாட்டில் இருக்கின்ற ஆட்சிமுறை போன்று அத்தகைய சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது இந்திய மாநிலங்களுக்கு கொடுத்த அதிகாரங்கள் இலங்கையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு கொடுப்பதாக இருந்தால் நாங்களும் வரவேற்போம். அதேபோன்று உலகத்திலுள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியடைவார்கள்.

இத்தகைய தீர்வு விடயம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த, இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் உள்ளிட்ட தலைவர்களுடன் நான் பேசியிருக்கின்றேன். அவர்களும் இந்த விடயத்தில் அக்கறை கொண்டுள்ளனர். இவ்வாறு இந்திய முறையிலான ஆட்சியை வழங்குவதற்கு கூட தெற்கிலுள்ளவர்கள் தயாராக இருக்கின்றனர்.

ஆகவே ஆக்கபூர்வமான தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமானது. அதனை விடுத்து ஒரு தீர்மானத்தை ஏற்கனவே எடுத்துவிட்டு இப்போது தீர்மானம் எடுக்கவில்லை என்று மக்களை ஏமாற்றுவது அயோக்கியத்தனம். குறிப்பாக கூட்டமைப்பினரைப் பொறுத்தவரையில் தமிழரசின் தலைவர் மாவை சேனாதிராசா, தாம் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என்றும் மக்களுடன் பேசி தீர்மானம் எடுக்கப்படுமென்றும் கூறுகின்றார்.

ஏனெனில் அவ்வாறு முடிவெடுக்க முடியதவராகவும் எடுத்த முடிவை வெளிப்படுத்த இயலாதவராகவும் மாவை சேனதிராசா இருக்கின்றார். ஆனால் அவர் கட்சியிலுள்ள ஒருவர் இவர்கள் சார்பில் ஏற்கனவே முடிவெடுத்து விட்டார். ஆகவே நீங்கள் மக்களை ஏமாற்றாதீர்கள். ஐனநாயக முறையில் ஐனநாயக அரசியல் செய்ய முடியாவிட்டால் அரசியலிருந்து ஒதுங்கி வழி விடுங்கள். தொடர்ந்தும் மக்களை ஏமாற்றாமல் அதனைச் செய்வதே சிறந்தது.

புலிகளின் பெயரால் அரசியலுக்கு வந்து புலிகளை வைத்து அரசியல் செய்து நீங்கள் மக்களுக்கு என்னத்தைப் பெற்றுக் கொடுத்தீர்கள். மக்களுக்கு எதுவும் செய்யாமல் உங்கள் பெட்டிகளையே நிரப்பியிருக்கின்றீர்கள். இப்ப கூட நீங்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டு முடிவு எடுக்கவில்லை எனக் கூறுவதும் உங்கள் சுயநலன்களைப் பெறுவதற்காகத் தான். எனவே சம்மந்தன், சுமந்திரன், சேனாதிராசா போன்றவர்கள் உடன் பதவிவிலக வேண்டும்.

இவ்வாறான அரசியல் வாதிகளே தமிழ் மக்களின் அழிவுக்கும் காரணமாக இருக்கின்றனர். இவ்வாறு தாம் தமது சுயநலன்களுக்காக தவறான முடிவுகளை எடுத்து மக்களையும் தவறாக வழிநடத்த முயல்கின்றனர். மக்கள் நலனுக்காகச் செயற்பட்ட எனக்கு துரோகிப் பட்டம் கட்டிய நீங்கள் எல்லோரும் உண்மையிலையே மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு இன்றைக்கும் துரோகம் இழைத்து வருவதால் நீங்கள் பதவிகளை விலக்கிக் கொள்ள வேண்டும்.

இதேவேளை பொதுவேட்பாளர் தொடர்பில் சிவாஜிலிங்கம் என்னுடன் பேசியிருந்தார். இப்போது அவர் போட்டியிடுகின்றார். தமிழ் மக்கள் நலன்சார்ந்து தீவிரவமாகச் செயற்படுபவர் சிவாஜிலிங்கம். அவர் தேர்தலில் போட்டியிடுவது சரியோ பிழையோ என்பதற்கப்பால், உண்மையில் அவர் போட்டியிடுவதை நான் விரும்பவில்லை. மேலும் பல்கலைகழகமாணவர்கள் அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்குவதை விடுத்து மற்றவர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வதே சிறந்தது.

அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த தலைவர்களான தந்தை செல்வநாயகம் மற்றும் ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகியோர் தமிழினத்தின் விடிவிற்காக ஓரணியில் திரண்டு வளர்த்த தமிழர் விடுதலைக் கூட்டணியை தமது நலன்களுக்காகவும் தலைமைப் பதவிகளுக்காகவும் சம்நமந்தன் மற்றும் சேனாதிராச போன்றவர்களே அழித்தனர். இந்தக் கட்சியை அழித்ததற்கு அவர்களே முழுப் பொறுப்பும். ஆனாலும் எமது கட்சி யாரையும் நம்பி இல்லை. நாம் விலைபோகாமல் கட்சி அல்லது தலைமைப் பதவிகளுக்கு அடிபணியாது மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here