
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தட்டான்குளம் கிராமத்தில் மக்களுக்கு வழங்குவதாக பிரதேச செயலாளரால் வாக்குறுதி வழங்கப்பட்ட அரச வயல் காணியை தனியார் ஒருவருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
நாட்டில் நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக பல்வேறு பகுதிகளிலிருந்து அகதிகளாக வந்த மக்கள் வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர் அந்தவகையில், 2006 ஆம் ஆண்டு தட்டான்குளத்தில் 52 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்காக குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் வயல் காணி அரசாங்கத்தினால் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த அரச வயல்காணியை கிரம மக்களுக்கு சொந்தமாக வழங்க வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது தனிநபர் ஒருவருக்கு காணியின் ஒரு பகுதியை கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தட்டான்குளம் கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் வழங்கியுள்ளதாகவும் ஆளுநர் தங்களுக்கு நல்ல ஒரு தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
