27 வருட வரலாற்றை மாற்ற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து: பணியுமா அவுஸ்திரேலியா?

இன்று கிரிக்கெட் உலக யுத்தம் நடக்கவிருக்கிறது. உலகக்கிண்ண கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிக்கு இன்னும் நாளிருந்தாலும், அதேபோன்ற பரபரப்பை ஏற்படுத்தும் அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

உலகக் கிண்ணப் போட்டியில் 27ஆண்டுகளாக அவுஸ்திரேலிய அணியை வீழ்த்த முடியாமல் போராடிவரும் இங்கிலாந்து அணி இன்று லண்டனில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால், கடந்த 1992ம் ஆண்டில் இருந்து அவுஸ்திரேலிய அணியை வீழ்த்த முடியவில்லை என்ற வேதனையை ஆற்றிக்கொள்ளும்.

இந்த போட்டி லண்டன் லோட்ஸ் மைதானத்தில் மாலை 3. மணிக்கு நடக்கிறது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை இதுவரை 6 போட்டிகளில் மோதி 4 வெற்றிகள், 2 தோல்விகள் என மொத்தம் 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது.

அரையிறுதிக்குள் செல்வதற்கு இங்கிலாந்து அணிக்கு மீதமிருக்கும் 3 ஆட்டங்களையும் வெல்வது கட்டயமாகும்.

ஆனால், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தியா ஆகிய 3 அணிகளையும் இங்கிலாந்து அணி வெல்வது சாதாரண விஷயமல்ல. இந்த 3 அணிகளையும் இங்கிலாந்து அணி உலகக் கிண்ணப் போட்டியில் வீழ்த்தி 27 ஆண்டுகள் ஆகிறது என்பதால், கால்நாற்றாண்டு வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய நிர்பந்தத்தில் இங்கிலாந்து இருக்கிறது.

இங்கிலாந்து அணிக்கு இது கரணம் தப்பினால் மரணம் என்ற கதைதான். ஒரு போட்டியில் தோற்றால்கூட, அடுத்துள்ள அணிகளின் தோல்விகளை எதிர்பார்த்து இருக்க வேண்டி வரும். இதனால் இந்த 3 அணிகளையும், வீழ்த்தித்தான் ஆக வேண்டிய நிலையில் இங்கிலாந்து இருக்கிறது.

இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் வென்றாலும், பாகிஸ்தானிடம் 14 ரன்களில் தோற்றதும், இலங்கையிடம் 212 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வி அடைந்ததையும் நம்பர் வன் அணியின் கப்டன் மோர்கனால் ஜீரனித்துக்கொள்ள முடியாது. மிகக் கடுமையான அழுத்தத்தோடுதான் இங்கிலாந்து களமிறங்கும்.

இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோ, ரூட், மோர்கன், பட்லர், பென் ஸ்டோக்ஸ் என 4 வீரர்களும் அருமையாக துடுப்பெடுத்தாடி வருகிறார்கள். உலகக் கிண்ண ரன் குவிப்பில் இந்த பட்லரைத் தவிர்த்து 3 பேரும் ரொப் 10 வரிசையில் இருக்கின்றனர்.

ஜேஸன் ரோய் காயத்தால் இந்த ஆட்டத்தில் விளையாடதது பின்னடைவுதான். ஜேம்ஸ் வின்ஸ் வந்தாலும், ரோய் இடத்தை நிரப்பவில்லை.

மேலும், நடுவரிசையில் வோக்ஸ், மொயின் அலி, ஆர்ச்சர் ஆகியோர் கடந்த போட்டிகளில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. இன்று துடுப்பாட்டத்தில் ஜொலிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.

பந்துவீச்சிலும் மார்க் உட், ஆர்ச்சர், வோக்ஸ், ஸ்டோக்ஸ், பிளங்கெட் என துல்லியமாக வீசக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். சுழற்பந்துவீச்சுக்கு அடில் ரஷித், மொயின் அலியைத் தவிர யாருமில்லை. அவுஸ்திரேலிய அதிரடி வீரர்களுக்கு சவால் விடுக்கும் அளவுக்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர்களும் இருப்பதால், போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.

கடந்த காலத்தைப் பார்ததால், கடைசியாக அவுஸ்திரேலியாவுடன் விளையாடிய 10 போட்டிகளில் 9 போட்டிகளில் இங்கிலாந்து வென்றுள்ளது. கடந்த 12 மாதங்களுக்கு முன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டிரன்ட் பிரிட்ஜ் ஆடுகளத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்களை இங்கிலாந்து குவித்தது. இதுபோன்ற சாதகமான விஷயங்களை வைத்துத்தான் இங்கிலாந்து தன்னம்பிக்கையுடன் களமிறங்க வேண்டும்.

தென்னாபிரிக்க அணியும், இங்கிலாந்து அணியும் ஏறக்குறைய ஒரேமாதிரி குணாதிசயங்கள் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ஏனென்றால், அணியில் நெருக்கடி என வரும்போது, பதற்றம் அடைந்து வெற்றியின் அருகே இருந்தாலும் அதை தவறவிடுகிறார்கள். ஆதலால், போட்டியில் இங்கிலாந்து அணி தங்களை சோக்கர்ஸ் என்று அழைக்கவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

அவுஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை கடந்த 1992ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்து அணியை உலகக் கிண்ணப் போட்டியில் வீழ்த்தி வருவதே மிகப்பெரிய ஊக்கமாக அமையும்.

உலகக் கிண்ணப் போட்டியில் அனைத்து அணிகளுக்கும் சவால் விடும் வகையில் பந்துவீச்சு, துடுப்பாட்டம் சிறப்பாக இருந்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பிஞ்ச், வோர்னர் மிரட்டலான ஃபோர்மில் இருந்துவருகிறார்கள். அதன்பின் ஸ்மித், மக்ஸ்வெல், கேரி என வரிசை வலுவாக இருக்கிறது. காயத்தில் இருந்து மார்க் ஸ்டோய்னிஸ் அணிக்குள் வந்திருப்பது மேலும் வலுசேர்க்கும்.

பந்துவீச்சில் மிட்ஷெல் ஸ்டார்க் உலகக் கிண்ணப் போட்டியில் அதிகமான விக்கெட்டுகளை எடுத்த வரிசையில் இருந்து வருகிறார். இங்கிலாந்து என்றாலே அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு இயல்பாக உற்சாகம் தொற்றிக் கொள்ளும். ஆதலால், இன்று ஸ்டார்க்கின் பந்துவீச்சில் அனல் பறக்கும்.

இங்கிலாந்தின் ஆர்ச்சர், ஸ்டார்க் இடையே கடும்போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் இக்கட்டான தருணத்தில் ஸ்டார்க்கின் விக்கெட் வீழத்தும் திறன் முத்தாய்ப்பாகும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here