இராணுவ நலன்புரி வர்த்தக நிலையத்தில் மதுபானம் விற்பனை: வலி.வடக்கு தவிசாளரும் உடந்தையா என சந்தேகம்!

வலிகாமம் வடக்கு பிரதேசபைக்குட்பட்ட காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தின் நலன்புரி விற்பனை நிலையத்தில் பொதுமக்களிற்கு மதுபான விற்பனை நடைபெற்று வருவதாக வலிவடக்கு பிரதேசசபை கூட்டங்களில் நீண்டகாலமாக உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். பொதுமக்களிற்கு மதுபானம் விற்பதற்கான எந்த சட்டபூர்வ- நிர்வாகரீதியான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படாமல் இந்த விற்பனை நடந்து வருவதாக பிரதேசசபை உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வலிவடக்கில் எந்த மதுச்சாலைக்கும் இதுவரை அனுமதி வழங்கப்பட்டிருக்காத நிலையில், இராணுவத்தின் நலன்புரி விற்பனை நிலையத்தில் மாத்திரம் மதுபான விற்பனை இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பில் வலிவடக்கு பிரதேசசபையில் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரதேசசபை உறுப்பினர் ச.சஜீவன் ஒரு பிரேரணையும் சில மாதங்களின் முன் சமர்ப்பித்திருந்தார். இது குறித்து நடவடிக்கையெடுப்பதாக தவிசாளர் சோ.சுகிர்தன் அப்போது கூறி சமாளித்திருந்தார்.

எனினும், பிரதேசசபை தவிசாளர் இது குறித்து நடவடிக்கையெடுக்கவில்லையென பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள். பல மாதங்களின் முன்னரே தவிசாளரின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு வரப்பட்டும், பொதுமக்களிற்கான மதுபான விற்பனை தொடர்வது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதேவேளை, அண்மையில் பிரதேசசபை அமர்வில், இந்த விடயத்தை உறுப்பினர் ச.சஜீவன் மீள எழுப்பியிருந்தார். முறையற்ற விற்பனையை நிறுத்துமாறு இராணுவத்திற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாக தவிசாளர் இதன்போதுதெரிவித்திருந்தார். எனினும், அவரது பதிலை நம்பாத உறுப்பினர்கள், இராணுவத்திற்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை சபைக்கு சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதமாக சபையின் ஒவ்வொரு அமர்விலும் உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்து வருகிறார்கள். எனினும் தவிசாளர் அந்த விபரத்தை வழங்காமல் இழுத்தடித்து வருகிறார்.

இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

வலி வடக்கு தவிசாளர் சே.சுகிர்தன், தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் தனிப்பட்ட உதவியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here