முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், தனியார் ஊடகங்களை வெளியேறுமாறு ஆளுனர் பணித்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சையின் உச்சத்தில் நான் வாய் திறக்க மாட்டேன் என ஆளுனர் கோபித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். பின்னர் கோபத்தை தணித்துக் கொண்டு, கூட்டத்தில் கலந்து கொண்டார்.

வடக்கு ஆளுனரின் முதலாவது ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று காலையில் இணைத்தலைவர்கள் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், முல்லைத்தீவு எம்.பி சிவமோகன் ஆகியோர் தலைமையில் நடந்தது.

கூட்டத்தின் ஆரம்பத்தில், தனியார் ஊடகங்களை கூட்டத்தில் நீண்டநேரம் தனியார் ஊடகங்களை அனுமதிக்க முடியாது என்றார். கூட்டம் ஆரம்பித்து 5 நிமிடங்கள் மட்டும் தனியார் ஊடகங்கள் செய்தி சேகரித்து விட்டு வெளியில் செல்ல வேண்டும், அரச ஊடகங்கள் மட்டும் செய்தி சேகரிக்கட்டும் என அதிரடி உத்தரவிட்டார்.

இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. சிவசக்தி ஆனந்தன் இதை எதிர்த்தார். “இதுவரைகாலமும் ஊடகங்களை வைத்துக்கொண்டுத்தான் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள் நடந்தது. அந்த வழக்கத்தை மாற்ற வேண்டாம். அரச ஊடகங்களை அனுமதித்து, தனியார் ஊடகங்களை வெளியேற்றுவது முறையல்ல“ என்றார்.

அப்படியானால் அனைத்து ஊடகங்களையும் வேளியேற்றுவோம் என ஆளுனர் தெரிவித்தார்.

இதை செல்வம் அடைக்கலநாதன், சாந்தி சிறிஸ்கந்தரசா எதிர்ப்பு தெரிவித்தனர். “ஊடகங்களிற்கு என் பயப்பிடுகிறீர்கள். அபிவிருத்திக்குழு கூட்டங்களில் நடப்பவற்றை மக்கள் அறியட்டும். நாங்கள் பேசுவதையும் மக்கள் அறியட்டும்“ என்றனர்.

“19வது திருத்தத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மக்களிற்கு தகவல் அறியும் உரிமையுள்ளது“- என்றார் சிவசக்தி ஆனந்தன்.

“19வது திருத்த சட்டம் பற்றி எனக்கும் தெரியும். ஒவ்வொரு கூட்டத்திலும் பேசப்படுபவற்றை அறிய வேண்டுமா?“ என ஆளுனர் கேட்டார்.

“ஆம். அவ்வாறு அறிய வேண்டும். நாங்கள் இராணுவ இரகசியமா பேசுகிறோம்?. மாவட்ட அபிவிருத்தியைப்பற்றித்தானே பேசுகிறோம். ஊடகங்கள் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும்“ என்றார்.

மாவட்டத்தின் எம்.பிக்கள் கடுமையான வலியுறுத்தியதால், திணறிப் போன ஆளுனர், அப்படியானால் நீங்களே கூட்டத்தை நடத்துங்கள். நான் எதுவும் பேசமாட்டேன் என மௌனமாக, கோபித்துக் கொண்டு இருந்து விட்டார். சுமார் 30 நிமிடங்கள் ஆளுனர் வாய் திறக்காமல் இருந்தார். மற்றொரு இணைத்தலைவராக சிவமோகன் எம்.பி தலைமையில் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

இதன்போது சிவசக்தி ஆனந்தன் மீண்டும் இடைமறித்து, “ஆளுனர் தனது முதலாவது ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு வந்துள்ளார். அவர் பேசட்டும். சில வேளைகளில் அவர் அவசரமாக போக வேண்டியிருக்கலாம். அதனால் பேசிவிட்டு போகட்டும்“ என்றார்.

இதன்பின்னரே ஆளுனர் பேசினார்.

வழக்கமாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அனைத்து திணைக்களங்களின் செயற்பாட்டு மதிப்பீட்டு விபரங்கள் காணொலியாக காட்சிப்படுத்தப்படும். இன்றும் காட்சிப்படுத்தப்பட்டபோது, ஆளுனர் குறுக்கிட்டார். “இப்படியெல்லாம் நேரத்தை செலவழிக்க முடியாது. முக்கியமான விடயங்களை மட்டுமே இங்கு பேச வேண்டும்“ என்றார். இதையடுத்து, முக்கியமானதென அடையாளப்படுத்தப்பட்ட விடயங்கள் பேசப்பட்டன.

முல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக ஆராயப்பட்டது. மீன்பிடி அமைச்சு அதிகாரிகள், ஆளுனர், மாவட்ட எம்.பிக்கள், அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்ட கூட்டமொன்று விரைவில் கூட்டப்பட்டு இதை ஆராய முடிவெடுக்கப்பட்டது.

அதேபோல ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்கள்- மகாவலி, தொல்லியல், வனத்திணைக்களத்தின் காணி சர்ச்சைகள் குறித்து ஆராய, சம்பந்தப்பட்ட திணை்க்களங்களுடன் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

அத்துடன் முல்லைத்தீவில் அடுத்த 6 மாதத்திற்குள் 10,000 பேருக்கு காணி உறுதி வழங்க வேண்டுமென ஆளுனர் உத்தரவிட்டார். எனினும், பிரதேச செயலகம், மாகாண காணி திணைக்களத்தில் இதை நடைமுறைப்படுத்த போதிய ஆளணி இல்லையென சொல்லப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை இணைத்து அதை செய்யும்படி ஆளுனர் உத்தரவிட்டார்.

மாகாணத்தில் நிலஅளவையாளர், வரி மதிப்பீட்டாளர் உள்ளிட்ட பல வெற்றிடங்கள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. பொருத்தமானவர்கள் இன்மையால், ஓய்வபெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் செயற்பட விண்ணப்பிக்குமாறு இரண்டு தடவை ஊடகங்கள் வாயிலாக தான் அறிவித்தும் யாரும் வரவில்லையென்றார் ஆளுனர்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ஆளணி பற்றாக்குறை பற்றியும் பேசப்பட்டது. அதை தீர்க்க ஓய்வுபெற்ற வைத்தியர்களை இணைப்பது குறித்து ஆராயப்பட்டது.

மாவட்டத்திலுள்ள காணி சர்ச்சைகள் குறித்து ஆராயப்பட்டது. இதன்போது, வடக்கு பிரதம செயலாளர், “நாடு முழுவதும் பொதுவான காணி சுற்று நிருபம் உள்ளது. போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் விசேட பிரச்சனைகள் உள்ளதால், சுற்று நிருபத்தில் சில திருத்தங்கள் அவசியம்“ என்றார். இந்த விடயமும் ஆராயப்படவுள்ளது.

கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, இன்னொரு நிகழ்ச்சிக்காக ஆளுனர் புறப்பட்டு சென்றார். அப்பொழுதும், “தனியார் ஊடகங்கள் அடுத்த கூட்டத்திற்கு வரக்கூடாது. அப்ப வந்தால் நான் எதுவும் பேசமாட்டேன்“ என்றார்.

இதேவேளை, அண்மையில் முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி விஜயம் செய்தபோது, அதற்கு முதல்நாள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஏற்பாட்டு கூட்டம் நடைபெற்றது. இதன்போதும், தனியார் ஊடகங்களை ஆளுனர் வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here