யாழ் பல்கலைகழகத்தில் அரசியல் செல்வாக்கில் வேலைவாய்ப்பு: ரெலோ கடும் கண்டனம்!

யாழ் பல்கலைகழகத்தின் கல்விசாரா ஊழியர் நியமனம், அரசியல் சிபாரிசின் அடிப்படையில் இடம்பெறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டையடுத்து, ரெலோவின் யாழ் மாவட்ட நிர்வாகம் இதை வன்மையாக கண்டித்துள்ளது.

வடக்கிற்கு வெளியில் வாழும் முஸ்லிம்களிற்கு அதிகளவான வேலைவாய்ப்பை வழங்கும் இந்த அரசியல் நியமனத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ரெலோவின் யாழ் மாவட்ட கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

யாழ்.பல்கலைக்கழக ஊழியர்களின் வெற்றிடத்தைப் பூர்த்திசெய்ய உயர் கல்வி அமைச்சால் ஏற்கனவே விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது வடமாகாணத்திலிருந்து பல ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் தங்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கான அனுமதி அட்டை வருமென காத்திருந்த வேளை நூற்றுக்கு 90 வீதமானவர்களுக்கு எந்தவிதமான அறிப்புக்களும் கிடைக்கவில்லை.

இவ்வாறான நிலையில் கல்விசாரா ஊழியர்களாக முந்நூற்று ஐம்பத்து நான்கு பேர் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் எண்ணிக்கையில் நூற்று முப்பத்தேழு பேர் முஸ்லிம் இனத்தைச் சார்ந்தவர்களாக உள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இவர்களுள் பெரும்பாலானவர்கள் வடக்கு மாகாணத்திற்கு வெளியே வாழ்பவர்கள் எனவும் கூறப்படுகின்றது.

உண்மையில் வடக்கு மாகாணத்தில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள், யுவதிகள் தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் பல்வேறு துன்பங்களை வாழ்க்கைச் சுமைகளினால் வாழ்வின் விரக்திநிலைக்குச் சென்றுகொண்டிருக்கும் பொழுது சொந்த மாகாணத்திலோ மாவட்டத்திலோ வேலை இல்லாவிட்டாலும் வெளி மாகாணத்தில் கூட அவர்களுக்கு எந்தவித தொழில் வாய்ப்புக்களும் வழங்கப்படுவதில்லை. அதற்கான சந்தர்ப்பங்களை அரசாங்கம் இதுவரை கொடுக்கவில்லை. அவ்வாறிருக்கையில் யாழ். பல்கலைக்கழக ஊழியர்களின் நியமனத்தில் அரசியல் தலையீடுகள் இல்லாமல் நேர்மையான முறையில் விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்களை அடிப்படையாகக் கொண்டு நேர்முகப் பரீட்சையை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கு அவர்களின் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதே ஆரோக்கியமான செயல்.

அரசாங்க நியமன தொழில்வாய்ப்புக்கள் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை யாழ். பல்கலைக்கழக ஊழியர் நியமனம் மட்டுமல்ல கடந்த காலங்களில் நீதிமன்ற ஊழியர்கள், மின்சாரசபை, தேசிய வைத்தியசாலை, மாவட்டச் செயலக சாரதிகள், மதுவரித் திணைக்கள ஊழியர்கள், சுற்றுலாத்துறை, புகையிரதச் சேவை போன்ற பல திணைக்களங்களில் வடக்கு மாகாணத்தைச் சாராத ஊழியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே யாழ். பல்கலைக்கழக ஊழியர் நியமனத்தில் வடக்கு மாகாணம் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட அமைச்சு கட்டாயம் கவனத்தில் கொள்வதுடன் தற்போது நடாத்தவுள்ள நேர்முகத் தேர்வை முற்றாக இரத்துசெய்ய வேண்டுமென நாம் கோருகின்றோம். அத்துடன் இவ்விவகாரத்தில் வடக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமையை செய்யத் தவறக் கூடாது என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here