கிளிக் பண்ணுங்க… காசை எண்ணுங்க!

©தமிழ்பக்கம்

அழகு என்பது எங்கும் நிறைந்திருக்கின்றது. அந்த அழகை யாரும் ரசிக்கலாம். ஆனால் எல்லோராலும் அதனை அழகாக விவரிக்க முடியாது. அப்படியே அச்சொட்டாக விவரிக்க முடியும் என்றால் அது நிச்சயம் புகைப்படத்தால்தான் முடியும். கண்களுக்குள் விரியும் காட்சியை கமராவுக்குள் கிளிக்கி விடுகின்ற இந்த போட்டோகிராபிதான் இப்போது இளைஞர்கள் பலராலும் வெறித்தனமாக விரும்பப்படுகின்ற வேகமாக வளர்ந்து வருகின்றது.

சின்ன வயதில் பேப்பரில் கமரா செய்து விளையாடிய காலம் போல் இல்லாமல் சின்னஞ் சிறுசுகளே செல்போனில் புகைப்படம் எடுக்கும் காலத்திற்கு வந்து விட்டோம். சிறுவர்களுக்கு மட்டுமல்ல ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் விதவிதமாகப் புகைப்படம் எடுப்பது மிகவும் பிடித்த விடயமே.

போட்டோகிராபி நல்ல வருமானத்தையும், ஆத்ம திருப்தியையும் கொடுக்கக் கூடிய ஒரு கலை. சாதாரணமாக புகைப்படம் எடுப்பதில் என்ன கலை இருக்கப் போகின்றது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் சிறந்த புகைப்படம் ஒன்றை எடுக்க வேண்டுமெனில் பத்து விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வெளிச்சத்தின் அளவு, கமராவின் நகர்வு, புகைப்படம் எடுக்க வேண்டிய பொருளின் அமைவிடம் உள்ளிட்டவற்றை சரியாக அறிந்திருந்தாலே நல்ல படமொன்றை எடுக்க முடியும்.

சாதாரணமாக வெடிங் போட்டோகிராபியை (திருமண புகைப்படகலை) அதிகளவில் பார்த்துப் பழக்கப்பட்டுவிட்டவர்கள் நம்மவர்கள். அது தவிர Bird photography, Nature photography, Kids photography, Action photography, Wild life photography, Commercial photography, Documentry photography என்று பல பிரிவுகள் இதிலுண்டு. நம் ஊரில் மலிந்திருக்கும் வெடிங் போட்டோகிராபியிலேயே ஒரு அல்பத்திற்கு ஒரு லட்சம் வரைக்கும் வருமானம் பெறுகின்றார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதை விடவும் Commercial photographyயின் (விளம்பரப் பலகைகளுக்கான புகைப்படங்களை எடுப்பது) மூலம் ஒரு புகைப்படத்திற்கு 50000ற்கும் மேல் வருமானம் பெறலாம். சினிமாவின் தாக்கத்தினால் நம்மவர்களின் ரசனையில் ஏற்பட்ட மாற்றம் போட்டோகிராபியிலும் வெளிப்படத்தான் செய்கின்றது. சினிமாக் காட்சிகள் போலவே வெளிப்புறப் படப்பிடிப்புக்களை மேற்கொள்வது இப்போது நம்மவர்களுக்கும் பிடித்த விடயமாகி விட்டது.

போட்டோகிராபி என்ற கலைக்குள்தான் Photo journalism உம் அடங்குகின்றது. ஆயிரம் வார்த்தைகளால் சொல்லக்கூடிய விடயத்தை ஒரு புகைப்படம் மூலம் சொல்லிவிடுகிறது. சிரியாவிலிருந்து அகதியாக வெளியேறிய சிறுவனின் சடலம் கரையொதுங்கிய புகைப்படம் உலகத்தை உலுப்பியதை பார்த்திருப்பீர்கள்.

வடக்கில் புகைப்படக்கலையை கற்க விரும்புபவர்களிற்கு யாழ்ப்பாணத்தில் வாய்ப்பு உள்ளது. American corner இதற்கான கற்கைநெறி உள்ளது. அதேபோன்று கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட MIBM கல்லூரியும் யாழ்ப்பாணத்தில் வழங்கி வருகின்றது.

சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியும், ஆதிக்கமும் இந்தத் துறையை வளர்த்துச் செல்வதில் பங்களிப்புச் செலுத்துகின்றன. 500Px என்று ஒரு வலைத்தளம் புகைப்படக் கலைப் பிரியர்களின் ரசனைக்குத் தீனி போடுவதற்கென்றே உருவாக்கப்பட்டிருக்கின்றது. புகைப்படப் பிரியர்கள் தமது கமராவில் கிளிக் செய்த புகைப்படங்களை இதில் பதிவேற்றலாம். பதிவேற்றப்படுவதில் சிறந்த படங்களை புகைப்பட முகவர்கள் நல்ல விலைக்கு வாங்குகிறார்கள். சிறந்த புகைப்படம் ஒன்று ஆகக் குறைந்தது 2000 இலங்கை ரூபாய்க்கு விற்க முடியும். 500Pxஐப் போலவே Alamy, Shutterstock, Fotolia, Smugmug, 123RF, iStockphoto என்று ஒரு வலைத்தளப் பட்டாளமே உங்களின் சிறந்த புகைப்படங்களை வாங்கவும், விற்கவும் தயாராய் இருக்கின்றன.

அழகிய இந்த பூமியின் ஒவ்வொரு அழகுத்துளியையும் உங்கள் கமராவிற்குள் அடக்கினாலும் பணம்தான்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here