ஏன் விலகிச் செல்கிறார் சிறிநேசன் எம்.பி?


மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மாவட்டத்திலுள்ள அரச அதிகாரிகளுடன் வில்லங்கத்தனமாக நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் வலுத்து வருகின்றன.

ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் அதிகாரிகளுடன் மல்லுக்கட்டுவது மட்டுமல்லாமல், ஊடகங்கள் முன்பாகவும் அதிகாரிகள் தொடர்பாக குற்றச்சாட்டுக்களை கூறி, புதிய- மோசமான கலாசாரம் ஒன்றை உருவாக்கி வருகிறார் என்ற விமர்சனங்கள் வலுத்துள்ளன.

முறைகேடு, துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அதிகாரிகள் மீது சிறிநேசன் இப்படியான விமர்சனங்களை வைத்தால் அதை சகித்துக் கொள்ளலாம், ஆனால், தனது அரசியல் செயற்பாட்டிற்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது அபாண்டமாக பொதுவெளியில் குற்றம்சாட்டுகிறார், இது அதிகாரிகளை உளவியல் ரீதியாக பாதிக்கிறது என்ற குற்றச்சாட்டு அதிகாரிகள் மத்தியில் வலுத்து வருகிறது.

மறுவளமாக, ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது அவரது, நெற்றிக்கண் திறக்கவில்லை. தனது அரசியல் செயற்பாட்டிற்கு ஒத்து வராதவர்கள் மீது ஊழல், துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்துவதும், அப்படியான செயற்பாட்டில் ஈடுபடும் அதிகாரிகள் தொடர்பில் கண்டும் காணாமலும் இருப்பதுமென்ற சிறிநேசனின் மோசமான அணுகுமுறை காரணமாக, மாவட்டத்தில் கணிசமான அரச அதிகாரிகளினதும், உத்தியோகத்தர்களினதும் ஆதரவை அவர் சார்ந்த கட்சி இழந்து வருகிறது.

கடந்தவாரம் பிரதமருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டபோது, மாவட்டத்திலுள்ள அதிகாரிகள் சிலர் மீது கடும் நடவடிக்கையெடுக்க வலியுறுத்தியதாக அவர் பகிரங்கமாக ஊடகங்கள் முன் தெரிவித்தார். எனினும், அவர் யார் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தினேன் என்பதை சொல்லவில்லை. உண்மையில், இனிவரும் சந்திப்புக்களில் யார் மீது நடவடிக்கையெடுக்க கோரினேன், என்ன காரணத்தினடிப்படையில் நடவடிக்கையெடுக்க கோரினேன் என்பதை அவர் மக்கள் முன் பகிரங்கப்படுத்த வேண்டும்.

அப்படி செய்தால், அவர் எவ்வளவு மோசமாக செயற்படுகிறார் என்பது தெரிய வரும்.

சிறிநேசன் அதிகாரிகளுடன் முரண்பட்ட பட்டியல் பெரியது. பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளராக இருந்த திருமதி. பிள்ளைநாயகத்துடன் முரண்பட்டு, அவரை தனது அரசியல் செல்வாக்கால் கல்முனை கல்வி வலயத்திற்கு மாற்றினார். ஆனால் அவர் மீண்டும் இடமாற்றத்தில் பட்டிருப்பிற்கே வந்தார். கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டபோது, தகுதியினடிப்படையில் அவர் நியமிக்கப்பட வாய்ப்பிருந்தது. எனினும், மன்சூர் நியமிக்கப்பட்டார். தனது நியமனம் இரத்தானத்திற்கு சிறிநேசனே காரணமென, பிள்ளைநாயகம் பகிரங்கமாக கூறியிருந்தார்.

மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப் பணிப்பாளர் சிறிதரன் இடமாற்றப்பட்டதன் பின்னணியிலும் சிறிநேசன் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தனது ஆதரவாளர் ஒருவர் அந்த பதவிக்கு வருவதாக அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. எனினும், தனது இடமாற்றத்திற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டு, அவர் மீண்டும் அந்த வலயத்திற்கு கல்விப்பணிப்பாளர் ஆனார்.

அன்றிலிருந்து இன்று வரை, அந்த வலயக்கல்வி செயற்பாடுகளை பற்றி பொது மேடைகளில் குற்றம்சாட்டுவதே சிறிநேசனின் வேலையாகி விட்டது. ஊழல் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினார். ஆனால், அது எதையும் பகிரங்கப்படுத்தவோ, சட்டரீதியாக நிரூபிக்கவோ அவரால் முடியவில்லை.

வெல்லாவெளி பிரதேச செயலர் இராகுலநாயகி, முந்தைய மாவட்ட நிர்வாகத்தின் மோசடிகளை துணிச்சலாக எதிர்த்த, மாவட்டத்தின் வரைமுறையற்ற காணி அபகரிப்பை தடுத்த விரல்விட்டு எண்ணத்தக்க அதிகாரிகளில் முதன்மையானவர். அரசியல்ரீதியாக தன்னுடன் ஒத்துழைக்கவில்லையென்பதற்காக அவர் மீதும் கூட்டங்களில் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.

அண்மையில் களுவாஞ்சிக்குடியில் வீதி திறப்பு நிகழ்வில், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக அதிகாரிகளை பெயர் குறிப்பிடாமல் குற்றம்சாட்டினார்.

இறுதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பிரதேச செயலர் தயாபரனுடன் மல்லுக்கட்டினார்.

கடந்த வாரம் பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில், அதிகாரிகளை பற்றி குற்றம்சாட்டியதாக குறிப்பிட்டது, இந்த அதிகாரிகளை பற்றியதாகவே இருக்கும். சிறிநேசனின் இந்த மோதல்கள் எல்லாமே தனிப்பட்ட காரணங்களிற்கானவை.

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து, ஹிஸ்புல்லாஹ் காணி அபகரித்தார், ஆதாரமிருக்கிறது என பரபரப்பை கிளப்பினார். அவ்வளவுதான். அந்த ஆதாரத்தை வெளியிடவுமில்லை. முறைப்பாடு பதிவு செய்யவுமில்லை. வாயில் வந்ததை சும்மா அடித்து விட்டிருக்கிறார். அதேபோலத்தான், அதிகாரிகள் விடயத்திலும் நடக்கிறது.

மறுவளமாக, முன்னாள் மாவட்ட செயலர் திருமதி சார்ள்ஸின் மோசடிகளிற்கான ஆதாரங்கள் ஊடகங்களில் கூட பகிரங்கமாக வெளியானது. அரசியல் செல்வாக்கால் விசாரணைகள் மந்தகதியில் நடந்தாலும், கோப் குழுவிலும் அந்த மோசடி விசாரணைகள் நடந்து வருகிறது. அவர் மீதான மோசடி குற்றச்சாட்டுக்கள் அதிகரிக்க, சார்ள்ஸை இடமாற்றம் செய்ய அரசு முயன்றது.

அப்போது, அந்த இடமாற்றத்தை- சார்ள்ஸின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு கூட்டமைப்பின் ஊடாக தடுத்ததாக பின்னர், பொதுமக்கள் சார்ள்ஸிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல, வாகரை பிரதேசசெயலராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள கரன், ஊழல் குற்றச்சாட்டுக்களின் பின், மாவட்ட செயலகத்தில் கடமை வழங்கப்படாமல் இணைப்பில் இருந்தவர். அவரது காணி மோசடி தொடர்பாக ஆதாரங்களுடன் தமிழ்பக்கமும் வெளியிட்டிருந்தது. ஆனால், அவரை மீளவும் வாகரை பிரதேசசெயலராக்கியது மட்டக்களப்பின் கூட்டமைப்பு எம்.பியொருவர். அப்போது சிறிநேசனின் சம்மதமும் கோரப்பட, அவர் அந்த நியமனத்தை ஆமோதித்திருந்தார்.

ஊழல், மோசடிகளில் ஈடுபடுபவர்களை உண்மையாக கண்டிக்க வேண்டுமென சிறிநேசனிற்கு அக்கறையிருந்தால், அவர் எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும்? தான் ஆதரித்தவர்களை எதிர்த்திருக்க வேண்டும். இப்போது எதிர்ப்பவர்களை கடமைக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது. இப்படியே செயற்பட்டால், சிறிநேசனால் குற்றம்சாட்டப்பட்டவர் என்றால், அந்த அதிகாரி எந்த தவறும் இழைத்திருக்கமாட்டார் என்று கருதும் நிலைமை ஏற்பட்டு விடும்.

இப்படியே சிறிநேசன் செயற்பட்டால், மாவட்டத்தின் அரச அதிகாரிகளை கூட்டமைப்பிலிருந்து தள்ளிச் செல்லும் நிலைமைதான் உருவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here