சுயஇன்ப பழக்கத்தால் திருமண வாழ்க்கை பாதிக்குமா?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

எம்.மயூரன் (29)
தாண்டிக்குளம்

வளரிளம் பருவத்தில் அதிகமாக உற்பத்தியாகும் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன், இயற்கையாகவே 25 வயதைத் தாண்டும்போது படிப்படியாகக் குறையத் தொடங்கும் என கடந்தவாரம் சொல்லியிருந்தேன். இதனால் ஏற்படும் விரைப்புத்தன்மை குறைபாடு (Erectile Dysfunction), விந்து முந்துதல் (Premature Ejaculation). தாம்பத்யத்தில் முழு திருப்தியடைய, துணையைத் திருப்திப்படுத்த மேற்சொன்ன இரு குறைகளும் இருக்கவே கூடாது.

டாக்டர் ஞானப்பழம்: டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் சுரக்கும் அளவு, அதன் தன்மையைப் பொறுத்தே ஆண்மைத் தன்மை அமையும். எனவே, அதன் உற்பத்தியை அதிகரிக்கும் பயிற்சிகளைச் செய்வதால் வலிமையான விரைப்புத் தன்மை, சோர்வடையாத உடல் அமைப்பைப் பெற முடியும்.

இதற்காக வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகள் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.

கீகல் (Kegel Exercise)

மல்லாந்து படுத்துக்கொண்டு, கால்கள் இரண்டையும் மடித்து, இடுப்புக்கு அருகே தரையில் வைக்க வேண்டும். இரு கைகளையும் பக்கவாட்டில் தரையில் வைத்து அல்லது மார்பின் மேலே வைத்து இடுப்பை மட்டும் மேலே உயர்த்த வேண்டும். இடுப்பை முடிந்தவரை மேலே உயர்த்தியும், இரு முழங்கால்களிலும் பாண்ட் ஒன்றைக் கட்டிகொண்டு, இடுப்பை உயர்த்தும்போது, முட்டிகளை விரித்தும், தரையில் வைக்கும்போது மடக்கியும் என இந்தப் பயிற்சியையே மேலும் இரு முறைகளில் செய்யலாம்.

இடுப்புப் பயிற்சி (Hip Exercise)

தரையில் முட்டிபோட்டு, குதிகால் மீது அமர்ந்து, பின் எழ வேண்டும். எழும்போது, இடுப்பை முடிந்தவரை முன்னால் தள்ள வேண்டும். கைகளைத் தொங்கவிட்டுக்கொண்டோ, முட்டிவரை மடித்தோ வைத்துக்கொள்ளலாம். உடலுறவின்போது மற்ற பாகங்களைவிட, அடி வயிறு மற்றும் பின்பகுதி அதிகம் இயங்க வேண்டியிருக்கும். அவற்றை உறுதிப்படுத்த, மல்லாந்து படுத்துக்கொண்டு, இரு கால்களையும் மேலே உயர்த்தி, இடுப்பை முன்பக்கமாக உயர்த்தி வளைத்து (`V’ வடிவத்தில்), கால் விரல்களைத் தொட முயல வேண்டும்.

தண்டால் (Push Up)

தண்டால் எடுப்பது சிறந்த பயிற்சி. இதை வேறொரு முறையிலும் செய்யலாம். தண்டால் எடுக்கையில், இடுப்பை நன்றாக மேலே உயர்த்தி, தலைகீழ் `V’ வடிவத்தில் வைக்க வேண்டும். இந்தப் பயிற்சி உடல் வலிமையைக் கூட்டும்; தசைகளையும் வலுப்படுத்தும்; தாம்பத்யத்தின்போது, விரைவில் சோர்வடையாமல் காக்கும்; ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்; டெஸ்டோஸ்டீரான் உற்பத்தியைப் பெருக்கும்.

பளு தூக்குதல்

வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை பளு தூக்கும் பயிற்சி செய்வது டெஸ்டோஸ்டீரான் உற்பத்தியை அதிகரிக்கும். ஆனால், இதை அதிகபட்சம் ஒரு மணி நேரம்தான் செய்ய வேண்டும். கீழ்க்கண்ட பயிற்சிகளை வீட்டில் செய்ய முடியாது. ஜிம்மில் தகுந்த உடற்பயிற்சியாளர் வழிகாட்டுதலுடன் செய்யலாம்.

பளு இழுவைப் பயிற்சி (Cable Pull Through)

உடற்பயிற்சிக்கூடங்களில் ‘கேபிள் புல்’ என்ற எந்திரம் இருக்கும். அதற்கு பின்புறமாகத் திரும்பி நின்று, அதிலுள்ள இழுவைக் கயிற்றை இரு தொடைகளுக்கு நடுவே வைத்து, இடுப்புக்கு நேராக அல்லது அதற்கும் சற்று மேல் உயர்த்தி, பின் குனிந்து அதைக் கால்களுக்குப் பின்னால் செல்லும்படிவிட வேண்டும்.

இடுப்புப் பயிற்சி 2 (Barbell Hip Thrust)

இரு கால்களையும் மடக்கி, பின்புறம் சாய்ந்து அமர்ந்து, பளு தூக்கியை இடுப்பின் நடுவே வைத்து, இடுப்பை மேலாக உயர்த்தி, பிறகு தாழ்த்த வேண்டும். சரியான உபகரணத்தின் உதவியோடு இதைச் செய்ய வேண்டும். இவற்றைத் தொடர்ந்து செய்தால், சில நாள்களிலேயே நல்ல மாற்றத்தைக் காணலாம். அதேபோல எந்தெந்தப் பயிற்சிகளைச் செய்யக் கூடாது என்பதிலும் கவனம் வேண்டும். எனவே, மருத்துவர் ஆலோசனைப்படி எந்த உடற்பயிற்சியையும் மேற்கொள்வது சிறந்தது.

சிறிகஜன் (26)
நல்லூர்

எனக்கு சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் இருக்கிறது. இப்பொழுது வீட்டில் பெண் பார்த்துள்ளனர். தொடர்ந்து சுய இன்பம் செய்வதால் ஆண்மைக் குறைபாடு வந்துள்ளதாக கருதுகிறேன். சில மாதங்களின் முன் ஒரு பெண்ணுடன் படுக்கை வரை போயிருக்கிறேன். ஆனால் ஒன்றும் செய்யாமல் திரும்பி வந்து விட்டேன். திருமணம் வேண்டாம் என வீட்டில் சொல்ல முடியாமல் இருக்கிறது. திருமணம் செய்த பின்னர் எப்படியும் எங்கள் குடும்பத்திற்குள் பிரச்சனை வரத்தானே போகிறது? எப்படி இந்த பிரச்சனையை சமாளிக்கலாம்?

டாக்டர் ஞானப்பழம்:  தம்பி உங்கள் நீண்ட கடிதம் பார்த்தேன். விரைவில் விந்து வெளியேறுதல், இரவில் சரியான தூக்கமின்மை, ஞாபகமறதி, உடல் நடுக்கம் முதலிய விசயங்களை சொல்லி, நரம்பு தளர்ச்சி வந்து விட்டதோ என்றும் பயந்திருந்தீர்கள்.

தம்பி… நான் உங்களிற்கு சொல்லக்கூடியது ஒன்றுதான்.

நீங்கள் சொன்ன எந்தப்பிரச்சனையும் உங்களிற்கு கிடையாது. இதெல்லாம் உங்கள் கற்பனை. பாலியல் கற்கையில் உங்களை போன்றவர்களின் பிரச்சனை ஒரு தனி அத்தியாயம். நாங்கள் படித்த பாடத்தை இதில் ரீவைண்ட் செய்ய முடியாது. நீங்கள் நேரில் சந்தித்தால், உங்களின் மனப்பிரமையை புரிய வைக்கலாம்.

இது, ஆண்களில் பலருக்கு இருக்கும் பிரச்னை. “வளரிளம் பருவம்“ எனப்படும் டீன் ஏஜில் தொடங்கும் சுய இன்பப் பழக்கம், பல்வேறு தவறான புரிந்துணர்வுகளை வளர்த்து வைத்திருக்கிறது. அதற்கு நாம் வாழும் சமூகமும் ஒரு வகையில் காரணம். “உங்களுக்கு சுய இன்பப் பழக்கம் இருக்கிறதா… அதனால் ஆண்மைக் குறைபாடு வந்துவிட்டதா… நரம்புத் தளர்ச்சி, விந்து குறைதல், நீர்த்துப் போதல் பிரச்னைகளா? அத்தனைக்கும் எங்களிடம் தீர்வு உண்டு“ என்று கூவிக் கூவி அழைக்கும் மஞ்சள் விளம்பரங்கள் அனேக பத்திரிகைகளில் வருகிறது.

சுய இன்பம் அனுபவித்தல் குறித்த விழிப்புஉணர்வு நம்மிடம் பெரிதாக இல்லை; அதைப் பற்றிக் கற்றுத் தரவும் ஆளில்லை. இணையத்தில் தேடினால், “சுய இன்பம் தவறானது“ என்றே தகவல் கிடைக்கிறது. சுய இன்பத்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து, ஆண்மைக் குறைபாடு வந்துவிடும் என்றால், திருமணத்துக்குப் பின்னர் மனைவியுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது மட்டும், விந்தணுக்களின் எண்ணிக்கை குறையாதா? அப்படியென்றால், யாரும் திருமணமே செய்துகொள்ள மாட்டார்களே!

உண்மையில், சுய இன்பம் ஆரோக்கியமான செயல்பாடே. இதன் காரணமாக, நல்ல ஹார்மோன்கள் உற்பத்தியாகின்றன. ஒவ்வொரு முறை இதயம் துடிக்கும்போதும், 1,000 உயிரணுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே, தொடர்ச்சியான சுய இன்பத்தால் விந்தணுக்கள் குறைந்து, ஆண்மைக் குறைபாடு வந்துவிடும் என்பதில் உண்மையில்லை. இதை உறுதிப்படுத்தும் எந்த ஆய்வும் இல்லை.

சுய இன்பம் அனுபவிக்காதவருக்குத்தான் உறக்கத்தில் விந்து வெளியேறும். உடலில் ரத்தம் உற்பத்தியாவதுபோலத்தான் விந்தணுக்கள் உற்பத்தியும். ரத்தத்தை, உடலுக்குள்ளேயே பணிசெய்ய பணித்துவைத்திருக்கிறது இயற்கை. எனவே, அது வெளியாவதற்கு வேலை இல்லை. விந்தணுக்கள் வெளியேறவேண்டிய நிர்பந்தம் இருப்பதே, உயிர்ப் பெருக்கத்துக்கு ஆதாரம். ஆகவே, நாம் வெளியேற்றாதபோது, தானாக வெளியேறி விரகம் தீர்த்துக்கொள்கிறது உடல். கண்ணால் கண்ட காட்சி, படித்த புத்தகம், பிடித்த பெண், ஆழ்மன ஏக்கம்… எல்லாமுமாகச் சேர்ந்து, கனவாகி விந்து வெளியேற்றம் காண்கிறது. தொடர்ந்து மனஅழுத்தம் (Stress), உறக்கமின்மையால் (Insomnia) அவதிப்படுவோருக்குத் தீர்வு சுய இன்பத்திலிருக்கிறது. அப்போது உற்பத்தியாகும் ஹார்மோன்களால், நல்ல உணர்வும் மன அமைதியும் நிச்சயம் கிடைக்கும். ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்குச் சற்றும் குறைவில்லாத இன்பத்தைத் தரும் இந்தப் பழக்கம்.

“தொட்டனைத்தூறும் மணற்கேணி…“ என்றார் வள்ளுவர். கேணியில் மணல் தூர்வாரும் அளவுக்கு ஏற்ப அதில் தண்ணீர் ஊறும். கல்விக்கு உவமையாகத் திருவள்ளுவர் இந்த உவமானத்தைச் சொல்லியிருந்தாலும், கலவிக்கும் இது அப்படியே பொருந்தும். அள்ள அள்ளப் பெருக்கெடுக்கும் ஊற்றுபோலத்தான் உயிரணுக்களும். எனவே, சுய இன்பம் பயப்படவேண்டிய ஒன்றல்ல.

முந்தைய பகுதி: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 03

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here