கல்முனை களேபரம்: தொலைபேசியில் வழிநடத்திய அந்த ‘அம்மான்’ யார்?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்த உண்ணாவிரத போராட்டத்தில், அரசின் பிரதிநிதிகளாக சென்ற அமைச்சர்களும், தமிழ் அரசுகட்சி எம்.பி சுமந்திரனும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அதிகபட்சமாக சுமந்திரன் மீது தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டது. அவற்றிலிருந்து, அவரது பாதுகாவலர்களும், உதவியாளர்களும் காப்பாற்றினர். அவரை நோக்கி வீசப்பட்ட பொருட்களிலிருந்தும் காப்பாற்றினர்.

திடீரென ஏன் இந்த சம்பவம் நடந்தது?

இது குறித்து போராட்ட களத்திலுள்ள தமிழ்பக்கத்தின் செய்தியாளர்கள் பல தகவல்களை திரட்டியுள்ளனர். அவற்றை வாசகர்களிற்காக தருகிறோம்.

அதற்கு முன்னர் சில விடயங்களை குறிப்பிட வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள் மீது முன்னெழுப்பொழுதுமில்லாதளவு விமர்சனம் இந்த காலத்தில்தான் எழுந்துள்ளது. தமிழர்களின் அரசியல், அபிவிருத்திகளில் முன்னேற்றமில்லை, அதுகுறித்த வாக்குறுதிகளுடன் கண்மூடித்தனமாக ரணில் அரசு ஆதரவு வழங்கப்பட்டும் எதுவும் நடக்கவில்லை, மறுவளமாக பிற இனங்களிலிருந்தும் நில, நிர்வாகரீதியான நெருக்கடிகள் அதிகரிக்கிறது போன்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கிழக்கில் தமிழ்- முஸ்லிம் உறவு மிக சீர்கெட்டுள்ளது. முஸ்லிம்கள் நிர்வாக அதிகாரத்தை கையில் வைத்தபடி, கிழக்கில் காணி சுவீகரிக்கில் அரசு ரீதியாகவும், நூதனதாகவும் மிக வேகமாக இயங்கி வருகிறார்கள், கூட்டமைப்பு இதில் கையாளாகாத தனமாக இருக்கிறது என்ற விமர்சனம் உச்சபட்சமாக உள்ளது. எல்லா விமர்சனங்களிற்கும் அப்பால், தமிழ் பகுதி காணிகளை பாதுகாத்ததில் பிள்ளையான் அணிதான் ஆக்கபூர்வமாக செயற்பட்டது என்ற சாதக அபிப்பிராயம் தற்போது மேலோங்கி வர, கூட்டமைப்பின் இயலாமைதான் காரணம். இப்படி பல்வேறு அதிருப்திகளுடன் இருந்த கூட்டமைப்பின் பிரதிநிதியாக சுமந்திரன் கல்முனைக்கு வந்தார்.

கல்முனையில் போராட்டம் நடத்தும் விகாராதிபதி மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர் எனப்படுகிறது. அது மஹிந்த அணியின் பின்னணியிலோ, அல்லது முஸ்லிம்களிற்கு எதிரான மனநிலையிலோ- எதற்காகவோ நடக்கிறது. ஆனால் அது கூட்டமைப்பின் இயலாமையின் மீது நின்று நடக்கும் போராட்டம். கல்முனையை தரமுயர்த்துவதை விட, ரணிலை பாதுகாப்பதே முக்கியமானது என கூட்டமைப்பு கருதி வந்த விளைவின் மீது நடக்கும் போராட்டம்.

கூட்டமைப்பிற்கு எதிர்முகாமில் உள்ள சக்திகள் எல்லாம் அந்த மேடையை பயன்படுத்தினார்கள். அதற்காக அந்த போராட்டத்தை கொச்சைப்படுத்த முடியாது. உண்மையில் விமர்சிக்கப்பட வேண்டியது, இப்படியான போராட்டங்களிற்கு காரணமான- கூட்டமைப்பின் இயலாமைதான்.

எதிர்த்தரப்புக்களின் அரசியல் மேடை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இயலாமை மீது நடக்கும் போராட்டத்தில், இயல்பாகவே கூட்டமைப்பு மீது விமர்சனமும், கோபமும் நிலவுவது சாதாரணம்தான். அதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பை இலக்கு வைக்க வேண்டுமென ஒரு சாரர் எக்ஸ்ட்ராவாக திட்டமிட, களேபரத்தில் முடிந்துள்ளது.

கல்முனை போராட்டத்தில் எல்லா தரப்பும் உள்ளது. அதில் சில தரப்புக்கள் சுமந்திரனை இலக்கு வைத்தார்கள் என்பதே உண்மை.

நேற்று மதியத்திற்கு முன்னரே, சுமந்திரன் அங்கு வருவார் என்ற தகவல் போராட்டக்காரர்களிற்கு சென்றது. சுமந்திரன் அல்ல, எந்த கூட்டமைப்பு பிரமுகர் வந்தாலும் அந்த அணி குறிவைத்திருக்கும். கூட்டமைப்பு பிரமுகர்களிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதென நேற்று மதியமே முடிவெடுக்கப்பட்டதாக, போராட்டத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

பிரமுகர்கள் மீது வீசி எதிர்ப்பை வெளியிட, சில பொருட்களும் நேற்று மதியமே அங்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

இதேவேளை, உள்நாட்டலுவல்கள் அமைச்சு வழங்கும் வாக்குறுதி கடிதம், நேற்று காலையே இணையங்களில் பரவியது. அதில் கல்முனையை 3 மாதத்தில் தரமுயர்த்த நடவடிக்கையெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்திலிருந்து எதிர்ப்பு புள்ளியை கண்டுபிடிக்கும் கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்ப்பாளர்களிற்கு போதிய அவகாசம் இருந்தது.

விநாயகமூர்த்தி முரளிதரனின் கட்சி பிரமுகர் ஒருவர், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கடித பிரதியை மதியத்திற்கு முன்னதாக போராட்டக்காரர்களிடம் கொடுத்தார். உண்மையில் அந்த வாக்குறுதியை வெளியில் கசிய விடாமல், போராட்டக்காரர்களிற்கு மாத்திரமே முதன்முதலில் வெளிப்படுத்தியிருக்கலாம்.

யார் அந்த அம்மான்?

போராட்ட களத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒரு பகுதியினர் மதுபோதையில் இருந்தார்கள். போதாதற்கு, எதிர்ப்பை பின்னணியிலிருந்து தூண்டிய ஒருவரின் தொலைபேசி ஒலிப்பதிவையும் தமிழ்பக்கம் பெற்றது. அரசின் வாக்குறுதியுடன் பிரமுகர்கள் அங்கு வந்ததில் இருந்து, நிமிடத்திற்கு நிமிடம் “அம்மான் சொல்லுங்கோ“ என அவர் யாரிடமோ ஆலோசனை பெற்றுக்கொண்டிருந்தார். பிரமுகர்களிற்கான எதிர்ப்பை வடிவமைத்ததில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த சக்திகளின் களத்தில் கூட்டமைப்பு பிரமுகர்கள் செல்லும்போது, அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது எதிர்பார்க்க கூடியதுதான். கல்முனை விவகாரத்தில் கூட்டமைப்பின் அணுகுமுறையில் விமர்சனங்கள் இருக்கும்போது, கூட்டமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் எதிராளிகளிற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆனால் அதை அவர்கள் நாகரிகமாக வெளிப்படுத்தியிருக்க வேண்டும். தாக்குதல் முயற்சிகளில் ஈடுபட்டது அநாகரிகமானது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணா, அவரது சொந்த தொகுதியில் கூட போட்டியிட்டு வெற்றியீட்ட முடியாதவர். அவரது நடவடிக்கையில் கணிசமான மக்கள் அதிருப்தியடைந்திருந்தனர். எனினும், அதற்காக அவர்கள் எல்லைமீறி நடந்ததில்லை.

நேற்றையதினம் போராட்டத்தை முடித்து வைப்பதுதான் அமைச்சர் மனோ கணேசன் தரப்பின் எதிர்பார்ப்பாக இருந்தது. எனினும், கல்முனை ஒரு அரசியல் விவகாரமாக மாறிவிட்டதால், அதை எதிர்த்தரப்புக்கள் பாவிப்பதால், அந்த விவகாரத்தின் சிறிய “கிரெடிட்“கூட கூட்டமைப்பிற்கு செல்ல எதிர்த்தரப்புக்கள் விரும்பவில்லை. அதனால் நேற்று போராட்டத்தை முடிக்காமல், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அண்மைய கிழக்கு விவகாரங்கள், தமது அரசியல் மீளெழுச்சிக்கு உதவியாக அமைவதாக கூட்டமைப்பின் எதிர்தரப்புக்கள் கருதுகின்றன. கல்முனை சம்பவத்தை தனியே, “ஒட்டுக்குழுக்களின் நடவடிக்கை“ என கட்சி விசுவாசிகள் சொல்வதை போலவும் வகைப்படுத்த முடியாது. கூட்டமைப்பிற்கு கல்முனையில் எதிர்ப்பு தெரிவித்ததை, கிழக்கின் கட்சிசாராத பலர் “மகிழ்ச்சியாக“ சமூக ஊடகங்களில் பகிர்ந்ததையும் அவதானிக்க வேண்டும்.

இந்த விவகாரம் உள்ளிட்ட பல விடயங்களில் கூட்டமைப்பு தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய புள்ளி அது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here