கள்ளக்காதலுக்கு இடையூறு: பெற்ற மகனையே நீரில் அமுக்கிக் கொன்ற தாய்!

பெற்ற மகனையே கள்ளக்காதலனுடன் சேர்ந்து தண்ணீரில் மூழ்கடித்து தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாலாஜா பாக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் காவியா (32). இவருக்கும், ராணிப்பேட்டை சிப்காட் வ.உ.சி. நகரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களது மகன் தருண் (4). கணவன் – மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் காவியா வாலாஜா பாக்குப்பேட்டையில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் தாய் வீட்டில் இருந்த காவியாவுக்கும், ராணிப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த தியாகு என்கிற தியாகராஜன் (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த தியாகராஜனின் தாயார், இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதனையடுத்து இருவரும் வாலாஜாவில் உள்ள பெல்லியப்பா நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். மகன் தருணையும் கள்ளக்காதலன் வீட்டில் வைத்து காவியா வளர்த்து வந்தார். இந்த நிலையில் தியாகராஜன், எவனோ பெற்ற பிள்ளையை நான் ஏன் வைத்து வளர்க்க வேண்டும் என்று கூறி அந்த குழந்தையை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி மகன் என்றும் பாராமல் தருணை கொலை செய்ய கள்ளக்காதலனுடன் சேர்ந்து காவியா முடிவு செய்தார்.

அதன்படி சிறுவன் தருணை கடந்த 13-ந் தேதி காவியாவும், தியாகராஜனும் சேர்ந்து தண்ணீர் நிறைந்த பிளாஸ்டிக் டிரம்மில் அமுக்கி கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து ஆற்காடு அருகே பாலாற்றில் உள்ள டெல்லி கேட் பகுதியில் யாருக்கும் தெரியாமல் சிறுவனின் உடலை புதைத்துவிட்டு சென்றுள்ளனர்.

சிறுவன் தருண் எங்கே என காவியாவிடம் உறவினர்கள் கேட்டதற்கு முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அதுபற்றி கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் அதியமான் கொடுத்த புகாரின் பேரில் காவியாவிடம் வாலாஜா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பெற்ற குழந்தை என்றும் பாராமல் தருணை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றதாக காவியா ஒப்பு கொண்டார். அதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

பின்னர் காவியா, மகன் புதைக்கப்பட்ட இடத்தை போலீசாருக்கு காட்டினார். அதைத் தொடர்ந்து நேற்று ஆற்காடு தாசில்தார் வத்சலா மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் முன்னிலையில் தடயவியல் நிபுணர் விஜய், வேலூர் அரசு மருத்துவமனையின் மருத்துவர் நாகேந்திர குமார் அடங்கிய குழுவினர் புதைக்கப்பட்ட சிறுவனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் உறவினர்களிடம் சிறுவனின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here