தென்மராட்சிக்கு ராஜா யார்?: தமிழ் அரசு கட்சிக்குள் மல்லுக்கட்டல்!

தென்மராட்சி பிரதேசத்தின் ஆதிக்கத்தை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதென்ற பனிப்போர் தமிழ் அரசு கட்சிக்குள் வலுப்பெற்றுள்ளது. சுமந்திரன் அணியும், சரவணபவன் அணியும் இந்த கோதாவில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

பல மாதங்களாகவே இந்த கோதா தீவிரம் பெற்றிருந்தாலும், தற்போது உச்சமடைந்துள்ளது.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசன இழப்பு நிச்சயமென கட்சிக்குள் ஒரு அப்பிராயம் உள்ளது. கடந்த தேர்தலில் மயிரிழையில் வெற்றிபெற்றவர் சரவணபவன். இம்முறை கூட்டமைப்பு ஆசனமொன்றை இழக்குமென்றால், அது நிச்சயம் சரவணபவனாகத்தான் இருக்குமென்றும் பரவலான அப்பிராயம் உள்ளது.

நிலவரத்தை கூட்டிக்கழித்து பார்த்த சரவணபவன் எம்.பி, அண்மைக்காலமாக அகலக்கால் வைத்து வருகிறார்.

தாயகம், சமஷ்டி, உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என என்னதான் நமது எம்.பிக்கள் வீராப்பாக பேசினாலும், இந்த தொகுதி சண்டைகள் எல்லாம் இரகசியமாக நடக்கும். அடுத்த தொகுதியில் எப்படி வாக்கை பெறலாமென ஒரு எம்.பி யோசிப்பார். எனது தொகுதிக்குள் அவர் எப்படி வரலாமென மற்றவர் யோசிப்பார். இருவரும் ஒரே கட்சிக்காரர்களாகத்தான் இருப்பார்கள். இதில் இன்னும் வேடிக்கை, இருவரும் சேர்ந்து இன்னொரு கட்சி எம்.பியின் தொகுதிக்குள் நுழைவார்கள். அதைவிட வேடிக்கை, அந்த தொகுதியும் கூட்டமைப்பு எம்.பியின் தொகுதியாக இருக்கும்.

சரவணபவனின் அகலக்கால் தமிழ் அரசு கட்சியின் மற்றைய எம்.பிக்களிற்கு பிடிக்கவில்லை. குறிப்பாக அவர் தென்மராட்சியில் கூடுதல் கவனம் செலுத்துகிறார். இதனால் சரவணபவன்- சயந்தன் மோதல் சில மாதத்தின் முன் பகிரங்கமாக நடந்தது. அப்போது, தென்மராட்சி பகுதி திட்டங்களையும் உள்ளடக்கி சரவணபவன் எம்.பி கொடுத்த கம்பெரலிய திட்டப் பரிந்துரையில் இருந்து,, தென்மராட்சி தொகுதி திட்டங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கூட்டமைப்பின் இன்னொரு எம்.பியே நேரில் சென்று, நிதியமைச்சில் பேசி, அந்த திட்டங்களை நிறுத்தச் செய்தார்.

இப்பொழுது கட்பெரலியவின் இரண்டாம் கட்ட பரிந்துரை மற்றும் அரசிற்கு ஆதரவளித்தமைக்காக வழங்கப்படும் விசேட ஒதுக்கீடுகளில் மீண்டும் மல்லுக்கட்டல் ஆரம்பித்துள்ளது.

இந்த நிதிகளிலும் தென்மராட்சியில் சரவணபவன் அகலக்கால் வைக்கிறார். தென்மராட்சியில் சகட்டுமேனிக்கு அடிக்கல்கள் நாட்டுகிறார். ஆனால் நிதி ஒதுக்கப்படாத திட்டங்களிற்கு எல்லாம் அடிக்கல் நாட்டுகிறார் என எதிர்த்தரப்பு குமுறுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சாவகச்சேரி பிரதேசசெயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் ஒரு மல்லுக்கட்டல் நடந்தது.

அந்தபகுதியில் 2 வீட்டுத்திட்டங்களிற்கு, அன்றைய தினமே சரவணபவன் எம்.பி அடிக்கல் நாட்டியிருந்தார். வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டம் அது. வீடமைப்பு அதிகாரசபை யாழின் பல்வேறு பிரதேசசெயலக பகுதிகளிற்கும் தலா 2 வீடமைப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில், எப்படியோ அமைச்சின் அதிகாரிகளை பிடித்து, பரிந்துரைகளை கொடுத்து இரண்டு கிராமங்களை திட்டத்திற்குள் உள்வாங்கி, அடிக்கல்லையும் நாட்டிவிட்டார் சரவணபவன் எம்.பி.

தென்மராட்சியில் வீட்டுத்திட்டம் தேவையென 18 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சரவணபவனின் அடிக்கல் நாட்டல் சயந்தன் தரப்பை கோபமடைய வைத்துள்ளது. இந்தநிலையில், நேற்று முன்தினம் நடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், சுமந்திரன் தனது ஆட்சேபணையை தெரிவித்தார். பிரதேசத்தில் 18 வீட்டுத்திட்டங்கள் தேவையென அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஒருங்கிணைப்புக்குழுவிற்கு தெரியாமல் எப்படி நீங்கள் 2 இடங்களை அடையாளம் காண்பீர்கள் என, சுமந்திரன் ஒரு சட்டப்பிடி பிடித்தார்.

ஒருங்கிணைப்புக்குழுவிற்கு தெரியாமல் வீட்டுத்திட்ட தெரிவு நடந்தது பிழையென சுமந்திரன் குறிப்பிட, சரவணபவன் அதை மறுத்தார். அது தான் அமைச்சிற்கு சென்று கதைத்து எடுத்து வந்த திட்டம் என்றார்.

“நல்லது. அதற்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எல்லா இடங்களிலும் அப்படி செய்யுங்கள். எம்.பிக்களின் கடமை அதுதான். ஆனால் இங்கு 18 வீட்டுத்திட்டம் தேவை. அதில் 2ஐ தெரிவு செய்வதென்றால் ஒருங்கிணைப்புக்குழுவுடன், பிரதேசசெயலகத்துடன் பேசி முன்னுரிமை அடிப்படையில் அல்லவா அதை செய்திருக்க வேண்டும்“ என்றார் சுமந்திரன்.

இப்படியே சிறிதுநேரம் இந்த விவகாரம் ஆராயப்பட்டது.

தென்மராட்சியின் சிற்றரசர் போட்டி எதிர்வரும் நாட்களில் இன்னும் தீவிரம் பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here