தி.மு.க இளைஞரணி செயலாளராகிறார் உதயநிதி!

திமுக இளைஞரணிச் செயலாளர் பதவியை முன்னாள் அமைச்சரான வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் ராஜிநாமா செய்துள்ளார். அதைத் தொடர்ந்து திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.

திமுகவில் உள்ள அணிகளில் மிக முக்கியமான அணி இளைஞரணி. இதன் செயலாளராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக மு.க.ஸ்டாலின் இருந்து வந்தார்.

2017இல் கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல் போனதால், செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2017 ஜனவரி மாதம் இளைஞரணிச் செயலாளராக வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டார். இவர் 2006-11-ஆம் ஆண்டு கால திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர்.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசாரத்தில் எப்போதும் திமுகவுக்கு என்று தனி பாணி இருக்கும். அந்த வகையில் இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் சாதாரண மக்களைக் கவரும் வகையில், எளிய விஷயங்களைப் பேசி பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டதாக திமுக தலைமை கருதியது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 37 தொகுதிகளைக் கைப்பற்றி, மக்களவையில் 3ஆவது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து, நாமக்கல், திருச்சி, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் திமுகவின் கூட்டத்தில் உதயநிதியை இளைஞரணிச் செயலாளராக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

மக்களவைத் துணைத் தலைவராக உள்ள கனிமொழி தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில் 2017இல் இளைஞரணிச் செயலாளராக மு.பெ.சாமிநாதன் பதவியேற்றதில் இருந்து பெரிய அளவில் இளைஞரணிக் கூட்டங்களை நடத்தவில்லை என்றும், அவரது செயல்பாடு சரியில்லை என்றும் திமுக தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனால், உதயநிதிக்கு அந்தப் பதவியை அளிக்கும் முடிவுக்கு மு.க.ஸ்டாலின் வந்துள்ளார்.

இந்த நிலையில் வெள்ளக்கோவில் சாமிநாதன் தாமாகவே முன்வந்து இளைஞரணி செயலாளர் பதவியை ராஜிநாமா செய்யும் கடிதத்தை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார். அதை ஏற்றுக் கொண்டதாக மு.க.ஸ்டாலின் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

எனினும், அந்த ராஜிநாமா விரைவில் ஏற்கப்பட்டு, உதயநிதி இளைஞரணிச் செயலாளராக அறிவிக்கப்பட உள்ளார்.

இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை 40 ஆண்டுகளுக்கும் மேலாக வகித்து வந்த மு.க.ஸ்டாலின், அதை தலைவராகும் வரை விட்டுக் கொடுக்கவில்லை. இளைஞரணியில் இருப்பதற்கு குறிப்பிட்ட வயது வரம்பை நிர்ணயித்து பலரை அதில் இருந்து வேறு அணிக்கும் மாற்றிய நிலையிலும் கூட, ஸ்டாலின் தன்னுடைய 64 வயது வரை அந்தப் பதவியை விட்டுக் கொடுக்காமல் இருந்து வந்தார். தற்போது, அவரது மகனையே அந்தப் பதவிக்குக் கொண்டு வர உள்ளார்.

இளைஞரணிச் செயலாளர் பதவியை உதயநிதிக்காக மு.பெ.சாமிநாதன் விட்டுக் கொடுத்துள்ளதால், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

மாநிலங்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் திமுகவுக்கு 3 எம்.பி.க்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதில், ஒன்று மு.பெ.சாமிநாதனுக்கு கிடைக்கலாம் என்கிறனர். எனினும், அது உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே இருந்து வருகிறது. மு.பெ.சாமிநாதனுக்குக் கட்சி அளவில் வேறு பதவி ஏதாவது அளிக்கக்கூடும் எனத் தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here