வைத்திய(ர்) அரசியலும் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களும் 2

மதுசுதன்

(நேற்றைய தொடர்ச்சி)

எழுதப்பட்ட கடிதங்கள்

மத்திய சுகாதார அமைச்சின் ராஜாங்கச் செயலாளார் 17.04.2019 அன்று வைத்தியர் சத்தியமூர்த்திக்கு யாழப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியை தற்காலிக அடிப்படையில் உடனடியாகப் பொறுப்பேற்குமாறு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்தார். இக்கடிதத்தின் பிரதிகள் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ஆகியோருக்குப் பிரதியிடப்பட்டிருந்தன.

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் இந்த நியமனத்திற்கு ஆட்சேபம் வெளியிட்டு ஆளுநருக்கு அறிக்கை இட்டதனை அடுத்து ஆளுனரது செயலாளர் 25.04.2019 அன்று மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் மேற்படி இருவரது ஆட்சேபனைகளையும் குறிப்பிட்டு “ஆளுனர் அவர்கள் பணித்ததற்கு அமைய வைத்தியர் சத்தியமூர்த்தியின் தற்காலிக நியமனத்தை நிறுத்திவைத்து மருத்துவ சேவையும் அனைத்து இலங்கைச் சேவை என்ற வகையில் பொதுச்சேவை ஆணைக்குழுவின் நடைமுறைகளின் பிரகாரம் மாகாண ஆளுனரது சம்மதத்துடன் நிரந்தரமாக தகுதிவாய்ந்த ஒரு மருத்துவ அதிகாரியை யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்குமாறு வேண்டுகிறேன்” எனக் கேட்டிருந்தார்.

அதே திகதியில் மேற்சொன்ன அதே உள்ளடக்கத்துடன் வடமாகாண ஆளுனரும் மத்திய சுகாதார அமைச்சருக்கு ஒரு கடிதத்தினை அனுப்பியிருந்தார்.

இவ்வாறு கடிதப்போர் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் வைத்தியர் சத்தியமூர்த்தி யாழப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் முழுவீச்சில் தமது கடமைகளை ஆற்றத் தொடங்கியிருந்தார்.

தாம் மத்திக்கு அனுப்பிய கடிதங்களுக்குப் பதில் கிடைக்காத நிலையில் யாழ் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தரப்பினரால் வழங்கப்படும் அழுத்தங்கள் அதிகரித்த நிலையில் 27.05.2019 அன்று மாகாண சுகாதாரப் பணிமனையில் வடக்கின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கான கலந்துரையாடலின் இறுதியில் ‘பஞ்சாயத்துப் பாணியில்’ (இதனையே மின்னஞ்சல் மூலம் அனுப்பிய அறிக்கையில் வைத்தியர் சத்தியமூர்த்தி ஆளுனர் மிரட்டியதாகக் குறிப்பிட்டிருக்கவேண்டும்) ஆளுனர் ஒரு கலந்துரையாடலை நடத்தி அதன் முடிவில் வைத்தியர் சத்தியமூர்த்தியை யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதிவியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு வாய்மூல உத்திரவினை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வழங்கியிருந்தாராம்.

வாய்மூல உத்தரவிற்கு நடவடிக்கை எடுத்து ‘உத்தரிக்க’ விரும்பாத மாகாணப் பணிப்பாளர் வாய்மூடியிருக்க,அதிரடியாக 31.05.2019ம் திகதி ஆளுனரது செயலாளர் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு ஒரு கடிதத்தினை அனுப்பிவைத்தார். அதில் ‘13ம் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்ட நிர்வாக அதிகாரம் மற்றும் மாகாண சபைகள் சட்டமூலத்தின் ஆளுனருக்கு வழங்கப்பட்ட தத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் வடமாகாண ஆளுனர் வைத்தியர் சத்தியமூர்த்தியை யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதிவியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார். இதன்பிரகாரம் உடனடியாக பதவியிலிருந்து விடுவிக்கும் கடிதத்தை வைத்தியர் சத்தியமூர்த்திக்கு வழங்குவதுடன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரது நிர்வாகக் கடமைகளை முன்னர் இருந்த ஏற்பாடுகளுக்கேற்ப ஒழுங்கமைக்கவும்’ எனக் கட்டளையிடப்பட்டிருந்தது.

மேற்படி கடிதம் 31.05.2019 திகதியிடப்பட்டாலும் 01.05.2019 அன்றே மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டு அன்றே வைத்தியர் சத்தியமூர்த்தியை விடுவிக்கும் கடிதத்தினை வார இறுதி விடுமுறை காரணமாக மூடியிருக்கும் மாகாண சுகாதார அலுவலகத்தைத் திறந்து, தட்டச்சுச் செய்து அனுப்பி வைக்குமாறு ஆளுனரது செயலாளர் அழுத்தம் வழங்கினார் எனக் குற்றம் சாட்டப்படுகிறது (இதுவே ஆளுனரது செயலர் மாகாணப் பணிப்பாளரை மிரட்டினார் என வைத்தியர் சத்தியமூர்த்தியின் மின்னஞ்சல் அறிக்கை குறிப்பிடக் காரணமான சம்பவமாக இருத்தல் வேண்டும்). இவ்வாறு ஆளுனரது செயலாளர் அழுத்தம் வழங்கக் காரணம் மறுநாள் 02.06.2019 பிரதமரும் சுகாதார அமைச்சரும் யாழுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தமையால் அவர்கள்‘நேரடியாகத் தலையிட்டு உறுதியான முடிவெடுத்து வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்ந்தும் யாழ் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளராகத் தொடரக்கூடும்’ என்ற அனுமானத்தில் அவ்வாறு நடைபெறாது முன்னரே தடுக்கும் எண்ணத்துடன் செய்யப்பட்ட செயலாகவே பார்க்கத் தோன்றுகிறது. இதிலிருந்து இந்த விடயத்தில் ஆளுனரைக் காட்டிலும் அவரது செயலாளர்‘நட்புக்கு இலக்கணம் வகுக்க விளைவது’ பட்டவர்த்தனமாகவே புலப்படுகிறது.

இது இவ்வாறிருக்கையில் 01.06.2019 அன்று இரவு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த அமைச்சரைச் சந்தித்த வடமாகாண மருத்துவர் மன்றத்தினர் மாகாணப் பணிப்பாளருக்கு எதிராக முறைப்பாட்டுப் பத்திரம் வாசித்ததுடன் வைத்தியர் சத்தியமூர்த்தி யாழ் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளராகத் தொடரவேண்டும் என்று ஒருபிடியாய் நின்றுகொண்டனர். இவர்கள் தமது தரப்பு நியாயத்தினை எடுத்துச் சொல்வதற்கு வைத்தியர் தேவனேசனது தன்னிச்சையான நிர்வாக முடிவுகளால் பாதிக்கப்பட்ட சில வைத்தியர்களையும் தம்முடன் கூட்டிச் சென்றிருந்தனராம். தப்பும் வகையறியாத அமைச்சரோ மறுநாள் யாழ் போதனா வைத்தியசாலையில் தம்மை வந்து சந்திக்குமாறு மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டாராம்.

02.06.2019 தம்மை வந்து சந்தித்த மாகாண சுகாதாரப் பணிப்பாளரிடம் விபரங்களைக் கேட்டறிந்த அமைச்சர் ஆளுனரது செயலாளரினால் 31.05.2019 திகதியிடப்பட்டு அனுப்பப்பட்ட கடிதத்தினை அதுகுறித்து ஆலோசனை வழங்குமாறு கேட்டு சுகாதார அமைச்சிற்கு அனுப்பி வைக்குமாறு பரிந்துரைத்தார்.

அமைச்சரது பரிந்துரையின்படி 03.06.2019 அன்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆளுனரது செயலாளரது கடிதம் குறித்து என்ன நடவடிக்கை எடுப்பது என ஆலோசனை மற்றும் வழிகாட்டல் கோரி ஒரு கடிதத்தினை அனுப்பி வைத்தார்.

இக்கடிதத்திற்கு 04.06.2019 அனறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் 13வது திருத்தச்சட்டம் மற்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் நியதிச் சட்டம் ஆகியனவற்றினை மேற்கோள்காட்டி மத்திய சுகாதார அமைச்சிற்கே வைத்தியர்களை நியமிக்கும் தத்துவம் உண்டெனப் பதில் வழங்கப்பட்டதாம்.

இக்கட்டுரை எழுதப்படும் தினத்தில் உள்ள நிலவரங்களின்படி ஆளுனர் அலுவலகம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வழங்கிய பதிலினை ஏற்காது தாம் அனுப்பிய கடிதங்களுக்கான பதிலை மத்திய சுகாதார அமைச்சு வழங்கவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்பதாகத் தகவல்.

தொடரும் இழுபறியும் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்போரும்

இவ்வாறு கடிதங்கள் அங்கும் இங்கும் பறந்துகொண்டிருக்க 08.06.2019 அன்று ஜனாதிபதி முல்லைத்தீவுக்கு வரும் ஆரவாரங்கள் ஆரம்பமாகின. 07.06.2019 அன்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரைத் தொடர்புகொண்ட ஆளுனரது செயலாளர்,‘வைத்தியர் சத்தியமூர்த்தியை யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியிலிருந்து விடுவிக்கும் கடிதத்தினை ஏன் வழங்கவில்லை?’ என வினவினாராம். அதற்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் தமக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் குறிப்பட்டதும்‘நீங்கள் மாகாணத்தில் எங்களின்கீழ் பணியாற்றுகிறீர்களா அல்லது மத்திய சுகாதார அமைச்சின்கீழ் பணியாற்றுகிறீர்களா?’ எனச் சீறிச் சினந்த ஆளுனரது செயலாளர் ‘இப்போது உடனடியாகவே வைத்தியர் சத்தியமூர்த்தியை விடுவியுங்கள். இல்லையேல் நாளை (மறுநாள் 08.06.2019)நீங்கள்முல்லைத்தீவில் ஜனாதிபதியிடம் முறையாக வாங்கிக்கட்ட வேண்டி வரும்’ என்று உளவியல் அழுத்தம் ஒன்றையும் பிரயோகித்தாராம். பதறிப்போன மாகாணப் பணிப்பாளர் விடயத்தை வைத்தியர் சத்தியமூர்த்திக்குத் தெரிவிக்க உணர்ச்சி வசப்பட்ட வைத்தியர் சத்தியமூர்த்தி மின்னஞ்சல் வழியாக நியாயம் கோரி ஒரு ஊடக அறிக்கையினை அனுப்பி வைத்தார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியர் சத்தியமூர்த்தியின் மின்னஞ்சல் வெளியானதும் ஏற்பட்ட அழுத்தத்தினால் ஆளுனரது செயலாளர் சத்தியமூர்த்தியைத் தொடர்புகொண்டு “எமக்கிடையே தனிப்பட்ட பிரச்சினைகள் ஏதுமில்லையே. நீங்கள் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வர விரும்புகிறீர்களா? ஆம் எனில் சொல்லுங்கள். உடனடியாக அதைச் செய்யமுடியும்” என்ற ஆசை வார்த்தைகளைப் பேசினார் எனவும் அதற்கு சத்தியமூர்த்தி சம்மதிக்கவில்லை எனவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையானால் ஆளுனரது செயலாளர் எவ்வளவுதூரம் யாழ் பிரதி சுகாதாரப் பணிப்பாளரது பதவியைக் காப்பாற்றப் போராடுகிறார் என்பது நிரூபணமாகிறது.

இந்த அமளிக்குள் வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஒரு ஊடக அறிக்கையினை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்தார். அதில் 13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைகள் சட்டம் குறித்த வியாக்கியானங்களுடன் ‘நான் சொல்லி மாகாண சபையினர் கேளாததால்’ இப்போது அனுபவிக்கிறோம் என்ற சாரப்பட பச்சதாபமும் கலந்து காணப்பட்டது. இந்த அறிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த மருத்துவத்துறையினர் ‘நடைமுறையில் எவ்வாறு குறிப்பிட்;ட விடயதானம் செயற்படுத்தப்பட்டு வருகிறது என்பது 25.04.2019 அன்று ஆளுனரது செயலாளர் அனுப்பி வைத்த கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்ஆளுனர் என்பவர் மாகாணத்திற்கு உரியவர் அல்லர். அவர் ஜனாதிபதியின் (மத்தியின்) பிரதிநிதி. எனவே மத்திய சுகாதார அமைச்சிற்கும் மாகாண ஆளுனருக்கும் எதுவித வித்தியாசமும் இல்லை. எனவே மாகாண ஆளுனருக்கு நியமன அதிகாரம் உள்ளது என்பது மறைமுகாக மத்திக்கு உரிய அதிகாரமே. இந்நிலையில் இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவது குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முற்படுவது போன்றது’ எனக் காட்டமாகக் குறிப்பிட்டனர். மேலும் இவரது அறிக்கையில் குறிப்பிட்ட‘மாகாண சபையின் எதிர்ப்புக் காரணமாக வைத்தியர் திலீபனுக்கு மத்திய சுகாதார அமைச்சு வழங்கிய முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனத்தை மீளப்பெற்றுக்கொண்டது’என்ற தகவல் முற்றிலும் தவறானதாகும் என மாகாண சுகாதாரத் திணைக்கள வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

சுகாதார அமைச்சர் கொழும்பில் தேவனேசனை மிரட்டினாரா?

வைத்திய அரசியல் ஒரு மெகா சீரியல் படம் போல நீண்டு செல்கையில் திடீர் திடீரென புதிய திருப்பங்கள் ஒவ்வொரு எப்பிசோட்டிலும் வந்து கொண்டேயிருக்கின்றன. ‘கொழும்பில் நடந்த கலந்துரையாடலில் அமைச்சர் ராஜித யாழ் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரை கடும் தொனியில் உத்தரவிட்டு எச்சரித்தார்’ என்ற செய்தியும் அவ்வகையில் திடீரெனக் கிளம்பிய ஒரு விடயம்தான்.

கொழும்பில் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்தது போல முகநூல் பதிவுகளும் வலைத்தளச் செய்திகளும் பரபரப்பிற்குப் பஞ்சம் வைக்காமல் கதை பரப்பிக்கொண்டிருக்கின்றன.

உண்மையில் சுகாதார அமைச்சில் நடந்த கலந்துரையாடலில் நடந்தது என்ன என்பதை அதில் கலந்து கொண்ட வடக்கின் உயரதிகாரிகள் பலரிடம் கேட்டறிந்ததில் நாம் தெரிந்து கொண்ட பொதுவான விடயங்கள் இவைதான்.

வடக்கின் சுகாதாரத்துறை அபிவிருத்தி மற்றும் தேவைகள் குறித்த விசேட கலந்துரையாடல் 14.06.2019 பிற்பகல் 2 மணியளவில் கொழும்பு சுகாதார அமைச்சரது ஆலோசனை மண்டபத்தில் நடைபெற்றிருக்கிறது. இந்தக் கலந்துரையாடல்களில் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் சத்தியலிங்கம், வடக்கின் சுகாதார அமைச்சுச் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருடன் ஐந்து மாவட்டங்களினதும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் நான்கு பிரதான வைத்தியசாலைகளது பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள் எனத் தெரியவருகிறது. இக்கலந்துரையாடலில் வைத்தியர் சத்தியமூர்த்தி கலந்து கொண்டிருக்கவில்லை என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது (பல செய்திமூலங்கள் சத்தியமூர்த்தியும் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றியதாக தகவல் வெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது).

கலந்துரையாடல் ஆரம்பித்து சிறிது நேரம் கழித்தே இந்தக் கலந்துரையாடலில் இணைந்துகொண்ட அமைச்சர் ராஜித “எங்களுடைய மாகாணப் பணிப்பாளர் கடுமையான அச்சத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டோம். மாகாண அதிகாரிகள் அவரைப் போட்டு மிரட்டுகிறார்களாம். அப்படியா? எனப்‘பம்பலாக’ கேட்டபடி தனது உரையாடலைத் தொடங்கி ‘யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடயமாக…’ என்று ஆரம்பிக்க, மாகாணப் பணிப்பாளர் அவசரமாக வைத்தியர் தேவனேசனைச் சுட்டிக்காட்டி ‘இவர்தான் தேவனேசன். யாழ் பிரதி சுகாதாரப் பணிப்பாளர்’ என அறிமுகம் செய்து வைத்தாராம்

வைத்தியர் தேவனேசனைப் புன்முறுவலுடன் பார்த்த அமைச்சர் “ஓ நீங்கள்தான் அந்தத் தேவனேசனா? நீங்கள் தனிப்பட்ட முறையில் உங்களின் கீழ் பணியாற்றும் அலுவலர்களை பழிவாங்குவதாக எனக்கு முறைப்பாடுகள் வந்தனவே” என கேட்க அதனை அவசரமாக மறுத்த தேவனேசன் “அவ்வாறில்லை. நான் அப்படி யாரையும் பழிவாங்குவதில்லை” என்று அவசரமாக மறுத்திருக்கிறார்.

புன்னகை மாறாத அமைச்சர் “ இல்லையில்லை. நீங்கள் ஒரு அலுவரது உத்தியோகபூர்வ வாகனத்தினை அவரிடமிருந்து அபகரித்து வேறு ஒருவருக்குக் கொடுத்திருக்கிறீர்கள். அமைச்சரான நான் கூட அவ்வாறு செய்ததில்லை. நாங்கள் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அதனை துஸ்பிரயோகம் செய்யமுடியாது. அது நல்லதல்ல. பிற அலுவலர்களுக்கு உதவுவதற்காகக் கூட அந்த அதிகாரங்களை நாங்கள் பயன்படுத்தக்கூடாது. எமது அதிகாரங்கள் மற்றும் இயலுமைகளை மக்களுக்கு உதவுவதற்காவே நாங்கள் பயன்படுத்த வேண்டும்.நீங்கள் எல்லோரும் பொதுச் சேவை அலுவலர்கள். யாரும் யாரையும் பழிவாங்கக் கூடாது. உங்கள் மீது எழுந்த பல குற்றச்சாட்டுகளை அடுத்தே நாங்கள் யாழ்ப்பாணத்திற்கு தற்காலிகமாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக யாரை நியமிப்பதென தேடத் தொடங்கினோம். அவ்வாறு நியமிப்பதற்கென இரண்டு மூத்த வைத்திய நிர்வாகத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டோம்.எங்களுக்கு இந்த வைத்தியர்தான் வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை … அந்த வைத்தியரின் பெயர் என்ன?” என பணிப்பாளர் நாயகத்திடம் அமைச்சர் வினவ, பணிப்பாளர் நாயகம் ‘ சத்தியமூர்த்தி’ எனக் குறிப்பிட்டதும் தனது கலந்துரையாடலைத் தொடர்ந்த அமைச்சர் “ ஆம் சத்தியமூர்த்தி. நாம் அவரிடம் கேட்பதற்கு முன்னர் மற்றவர்களைத் தான் கேட்டோம். அவர்கள் அனைவரும் மறுத்து விட்டனர். சத்தியா ஒருவர் மட்டும்தான் எமது வேண்டுகோளுக்குச் சம்மதித்தார். அவரும்கூட முழு மனத்துடன் ஆம் எனச் சொல்லவில்லை. ஏனெனில் அவருக்கு யாழ் போதனா வைத்தியசாலையிலேயே ஏராளமான முக்கிய வேலைகள் பல உள்ளன. இருப்பினும் நாம் கேட்டுக்கொண்டதற்காக அவர் சம்மதித்தார்.” என்றாராம்.

மேலும் அமைச்சர் “எமக்கு அந்த அதிகாரம் அதாவது வைத்தியர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளதா என வடக்கில் சிலர் கேட்கிறார்களாம். கடந்தவாரம் ஆளுனர்களது கலந்துரையாடல் கொழும்பில் நடந்தபோது உங்களது ஆளுனர் அங்கு பிரசன்னமாயிருக்கவில்லை. அவரது செயலாளர்தான் வந்திருந்தார். அந்தக் கலந்துரையாடலில் இந்த நியமன விடயத்தினை நாங்கள் சகல ஆளுனர்களுடனும் கலந்துரையாடினோம். அனைத்து ஆளுனர்களும் மருத்துவ சேவை ஆளணியினரை (வைத்தியர்கள் மற்றும் பணிப்பாளர்கள் நியமனங்கள் உள்ளிட்ட) தொடர்ந்தும் மத்தியே கையாள்வதற்குப் பூரண சம்மதம் தெரிவித்தனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

“தேவனேசன் யாழ் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக இருக்கும் வரை மற்றைய எந்த வைத்திய அதிகாரிகளும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியினை ஏற்க மறுக்கிறார்கள். தாம் அந்தப் பதவியை ஏற்பதானால் தேவனேசனை அங்கிருந்து அகற்றுங்கள் எனக் கேட்கிறார்கள்’என்பதையும் நான் அந்த ஆளுனர்கள் கலந்துரையாடலில் கூறினேன்.“அப்படியானால் நாங்கள் வைத்தியர் தேவனேசனை விலகச் சொல்கிறோம். அவர்களில் ஒருவரை பொறுப்பெடுக்கச் சொல்லுங்கள்” என வடக்கு ஆளுனரின் செயலாளர் எம்மிடம் தெரிவித்தார். அந்தக் கலந்துரையாடல் முடிந்து வெளியேறும்போதும் வடக்கு ஆளுனரின் செயலாளர் என்பின்னே தொடர்ந்து வாசல் வரை வந்து “தேவனேசனில் தவறு இருந்தால் நாம் அவரை உடனடியாக பதவி விலக்குகிறோம். நீங்கள் உரிய ஒரு மருத்துவ அதிகாரியை யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமியுங்கள்” எனத் திரும்பவும் கூறினார். “எங்களுக்கு அதில் ஆட்சேபனை இல்லை. எங்களுக்கு சத்திமூர்த்தியோ வேறு எந்த மூர்த்தியோ எவராகவும் இருக்கலாம். எமக்கு வேண்டியதெல்லாம் அந்தப் பிராந்தியத்தில் சுமுகமான நிர்வாகச் சூழலே”என்பதை நான் ஆளுனருக்குக் கூறுமாறு அவரது செயலாளரிடம் சொல்லியிருக்கிறேன்’ என்று மேலும் அமைச்சர் ராஜிதவால் தெரிவிக்கப்பட்டதாம்.

இந்த இடத்தில் குறுக்கிட்ட வைத்தியர் தேவனேசன் “வைத்தியர் நந்தகுமார் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டபோது அவரிடம் அக் கடமைகளை நான் ஒப்படைத்திருந்தேன். அவ்வாறே நான் இப்போதும் கடமைகளை ஒப்படைக்கத் தயாராகவே இருக்கிறேன்” எனத் தெரிவிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மிகவும் மென்மையாக தான் சொல்லும் கருத்தைச் செவிமடுக்குமாறு கூறிவிட்டு இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களை ஞாபகப்படுத்தியிருக்கிறார்.

“ உங்கள் மீது மிகப் பாரதூரமான ஒரு குற்றச்சாட்டு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரனால் சுமத்தப்பட்டது. அதாவது வைத்தியர் தேவனேசன் மாகாணப் பணிப்பாளரான தம்மை பல தடவைகள் அவதூறான வார்த்தைகளால் தூசித்தது, எச்சரித்தது மற்றும் மிரட்டியதாக தெரிவித்த அந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் ஒரு விசாரணை நடந்திருக்கிறது. அடுத்ததாக வைத்தியர் நந்தகுமாரன் நியமனம் செய்யப்பட்டபோது நீங்கள் அவரை வேலையைப் பாரமெடுக்க அனுமதிக்கவில்லை என்பது இன்னொரு குற்றச்சாட்டு. இதுபற்றியெல்லாம் இங்கு நான் குறிப்பிடுவதற்கு வருந்தினாலும் இந்த விடயங்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டியவன் என்ற வகையில் இவற்றினைக் ‘கம்பளத்தின் அடியில் இட்டு’ மறைக்க என்னால் முடியாது. இந்த இரண்டு உதாரணங்களுமே இவ்விடத்தில் உண்மையை வெளிப்படுத்தப் போதுமானது” என்றாராம் மத்திய சுகாதாரப் பணிப்பாளர் நாயகம்.

“நீங்கள் அனைவரும் ஒரு விடயத்தினை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் எல்லோரும் மத்திய அமைச்சின் கீழேயே வருகிறீர்கள். நீங்கள் வடமாகாணத்திலோ அல்லது தென் மாகாணத்திலோ அல்லது சப்பிரகமுவ மாகாணத்திலோ பணியாற்றலாம். ஆனால் வைத்தியர்களான நீங்கள் அனைவருமே மத்திய சுகாதார அமைச்சின் கீழேயே நிர்வகிக்கப்டுகிறார்கள். நான் அதிகாரப் பகிர்வினை ஆதரிப்பவன். அவ்வாறாயின் முதலில் நாங்கள் எல்லோரும் எவ்வாறு (சுகாதாரத் துறையினை) இயக்குவது என்பது குறித்தும், மருத்துவ சேவைத்துறையை மாகாணங்களிடம் கையளிப்பதா என்பது குறித்தும் அடிப்படை முடிவினை எடுக்கவேண்டும். எதிர்காலத்தில் ஒருநாள் அனைத்துக் குறைபாடுகளும் களையப்பட்டு தன்னிறைவு நிலை எட்டப்பட்டதும் நீங்கள் எல்லோரும் மாகாணசபைகளின் கீழ் நியமிக்கப்படலாம். மருத்துவர்களுக்கு உள்ள தட்டுப்பாடு காரணமாகவும் மருத்துவர்கள் இலகுவாக தமது நியமனங்களை விரும்பிய இடங்களில் பெறும் வகையிலும் மருத்துவ சேவை நியமனங்களை மத்தியே கையாண்டு வருகிறது” என்று விளக்கிய ராஜித அதைத் தொடர்ந்து கூறியவைதான் அக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தவர்களுக்கு புருவங்களை உயர வைத்ததாம்.

“உங்களுக்குத்தெரியுமா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் நான் தங்கியிருந்தபோது என்னை வந்து சந்தித்தார்கள் (அமைச்சர் ராஜித தம்மைச் சந்தித்த கூட்டமைப்பினரது பெயர்களைக் கூறியிருந்தாலும் அவற்றினை இங்கு குறிப்பிடுவது இவ்விடயத்தை மேலும் அரசியலாக்கி இடியப்பச் சிக்கலாக மாற்றிவிடும் என்பதால் அவற்றினை இங்கு நாம் குறிப்பிடவில்லை). அவர்கள்கூட என்னிடம் சொன்னார்கள். நாங்களும் அதிகாரப் பகிர்வையே ஆதரிக்கிறோம். ஆனால் இந்த விடயத்தில் 50:50 தான் எமது நிலைப்பாடு. ஏனெனில் உங்களைப்பற்றி (தேவனேசன்) அவர்களுக்கும் முறைப்பாடுகள் உண்டு. எனவே என்ன முடிவானாலும் என்னையே எடுக்குமாறு கூறிவிட்டனர்”என்று அமைச்சர் ராஜித போட்டுடைத்திருக்கிறார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் “ நாங்கள் இன்னும் ஒரு விடயத்தினையும் பார்க்க வேண்டும். “வைத்தியர் தேவனேசனுக்குப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியினைப் பெறுவதற்குரிய தகமைகள் கிடையாது. அவர் தற்போது உள்ள பிரதிப் பணிப்பாளர் தரத்திலேயே தமது சேவையினைத் தொடரமுடியும். நாங்கள் அறிந்ததெல்லாம் தேவனேசன் எந்த ஒருவரையும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக (யாழ்ப்பாணத்தில்) கடமையைச் செய்ய விடமாட்டார் என்பதுதான். இதைச் சொல்வதற்கு தேவனேசன் மீண்டும் என்னை மன்னிக்க வேண்டும் இல்லையேல் நீங்கள் ஏமாற்றுவது எங்களுக்குத் தெரியாது என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பீர்கள்” என்று கூறிக் கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட வைத்தியர் தேவனேசன் “ நான் அப்படியானவன் அல்லன். வைத்தியர் நந்தகுமாரை நியமிக்கும்போது எனக்கான பதவி அல்லது எங்கு நான் செல்லவேண்டும் என்ற எந்த உத்தரவும் தரப்படவில்லை. எனக்கு எந்தப் பதவியையும் தராமல் அவர்கள் என்னைத் துரத்தினார்கள். அவ்வேளையில் தான் நான் அவ்வாறு செயற்பட நேரிட்டது.” எனத் தன்னிலை விளக்கத்தினை தெரிவித்தாராம்.

மேலும் “ வைத்தியர் நந்தகுமார் பின்னர் என்னுடன் பணியாற்றிய வைத்தியர் உமாசங்கரன் உட்படப் பலர் என்னோடு வேலைசெய்தார்கள். அவர்களது பணிக்கு நான் எந்த இடையூறும் செய்யவில்லை. இப்போதுகூட நான் இந்தப் பதவியைக் கையளிக்கத் தயாராகத்தான் இருக்கிறேன். எனக்குத் தேவை (உங்களது) கடிதம்தான். நாளைக்கே அவர்கள் முறைப்படியாகக் கடிதத்தை வழங்கினால் நான் உடனடியாக பதவியைக் கையளிக்கத் தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

யுத்தகாலத்தில் பணியாற்றிய சத்தியமூர்த்தி உள்ளிட்ட வைத்தியர்கள்

அதற்கு பதிலளித்த பணிப்பாளர் நாயகம்“உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் நாங்கள் உங்களுக்கு வேறொரு பதவியை வழங்கலாம். ஆனால் உங்களுக்கு விருப்பம் என்றால் மட்டுமே அதனை நாம் செய்யமுடியும். நிறைய வைத்திய அத்தியட்சகர் பதவிகள் வெற்றிடமாகவே உள்ளன. (உதாரணமாக) ஊர்காவற்துறை ..? என்று சொல்லிக்கொண்டுபோக இடைமறித்த வைத்தியர் தேவனேசன் “ஊர்காவற்துறைக்கு என்னால் போய்க்கொள்வது சிரமம்.” என்று கூறியதும் பணிப்பாளர் நாயகம் “ எங்காக இருந்தாலும் சரி. உங்களுக்கு விருப்பமான வைத்தியசாலைக்கு நாங்கள் உங்களை (பணிப்பாளராக) நியமிக்கலாம். ஆனால் தகுதிவாய்ந்தவர்கள் பணிப்பாளராக இல்லாத வைத்தியசாலையாக அது இருக்க வேண்டும்” என்று பதிலளித்திருக்கிறார்.

அத்துடன் தனது தொனியினைக் குறைத்த வைத்தியர் தேவனேசன் “அனேகமான அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தகுதிவாய்ந்தவர்கள் நியமிக்கப்பட்டு விட்டார்கள். எங்குமே வெற்றிடங்கள் இல்லை. நீங்கள் தயவுசெய்து நான் செய்த பிழை என்ன என்று சொன்னால் அதை ஏற்றுத் திருத்திக்கொள்ள நான் தயாராகவே உள்ளேன்”என்று பவ்வியமாகக் கூறிக்கொண்டிருக்கையில், இடையிட்ட சுகாதார அமைச்சர் “ இல்லை இல்லை நீங்கள் (இங்கு) ஏற்றுக்கொள்வதாக கூறிவிட்டு பின்னர் அங்கு போய்ப் பிரச்சினைகளை உருவாக்குவீர்கள். அதனால்தால் ஏனையவர்கள் அங்கு வர விருப்பமில்லாமல் உள்ளனர். அதாவது நீர் அங்கிருக்கும்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பொறுப்பேற்க மற்றையவர்கள் பின்னடிக்கிறார்கள். எனக்கு உண்மையில் நீர் நல்லவரா கெட்டவரா எனத் தெரியாது. ஆனால் ஒரு முறைப்பாடல்ல பல முறைப்பாடுகள் (உமக்கு எதிராக) என்னிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று கூறிக் கொண்டிருக்கும்போது, வைத்தியர் தேவனேசன் “ இல்லை. இல்லை. வைத்தியர் நந்தகுமார் பதவி ஏற்றபோதுதான் அந்தப் பிரச்சினை நடந்தது. அதன் பின்னர் இரண்டு வருடங்கள் நாம் ஒன்றாகவே பணியாற்றினோம். வைத்தியர் நந்தகுமாரிடம் கேட்டுப்பாருங்கள். பின்னர் வைத்தியர் உமாசங்கரன் பணியாற்றியிருக்கிறார். அவரிடம் கேட்கலாம்” என கூறியிருக்கிறார். இருப்பினும் அருகிலிருந்த வைத்தியர் நந்தகுமாரோ அல்லது உமாசங்கரனோ எவ்வித சலனமும் காட்டாது இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தனராம்.

“நாங்கள் பொதுச்சேவை அலுவலகங்களை இயக்கிக்கொண்டிருக்கிறோம். அதில் எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை நாம் காட்டமுடியாது. தனிப்பட்ட முறையில் எவரையும் துன்புறுத்துவதோ அல்லது எமது தனிப்பட்ட உணர்ச்சிகளை நிர்வாகத்தில் பிரதிபலிப்பதோ ஏற்றுக்கொள்ள முடியாது” என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தபோது அதனை ஆமோதிக்கும் வகையில் சுகாதார அமைச்சர் “ உண்மைதான். இல்லையெனில் யாழ்ப்பாணத்தில் நான் தங்கியிருந்தபோது என்னிடம் வநது உம்மைப்பற்றிய முறைப்பாடுகளை உமது பணியாளர்கள் என்னிடம் சொல்லியிருப்பார்கள்?. உதாரணமாக ஒரு அலுவலரது உத்தியோபூர்வ வாகனத்தை எவ்வாறு கட்டாயப்படுத்திப் பிறிதொருவருக்கு உம்மால் கொடுக்கமுடியும்” என்று கேட்டிருக்கிறார்.

இதற்குப் பதிலளித்த வைத்தியர் தேவனேசன் ‘ நான் யாருடைய வாகனத்தையும் அவ்வாறு பலோத்காரமாகப் பறிக்கவில்லை. எமது பணிமனையில் இரண்டு பிராந்திய தொற்றுநோய் விஞ்ஞான வைத்தியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு வாகனம் இல்லை என்பதால்தான் எழுத்துமூலம் இரண்டு தினங்கள் ஒரு வாகனத்தை அவர்களுக்கு வழங்குமாறு பணித்தேன்’ என்று பதில் கூற மீண்டும் புன்சிரிப்புடன் ‘ நான் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோது இரண்டு வைத்தியர்கள் என்னிடம் வந்து உங்களது பழிவாங்கல்கள் குறித்து முறையிட்டார்கள். மலேரியா தடை இயக்கத்தினால் அவர்களது வைத்திய அதிகாரி பாவிப்பதற்காக வழங்கிய வாகனத்தை பறித்தெடுத்து பிறிதொருவருக்கு வழங்கும் அதிகாரம் உங்களுக்கு கிடையாது. வேண்டுமானால் மலேரியா தடுப்பு வேலைகள் நடைபெறாத நாட்களில் அந்தப் பொறுப்பு வைத்தியரது சம்மதத்துடன் வாகனத்தைப் பிற தேவைகளுக்கு பாவிக்கலாம். மலேரியா தடுப்பு என்பது மிகவும் முக்கியமானது என்பதை தயவுசெய்து விளங்கிக்கொள்ளுங்கள் என்று ஆலோசனை கூறியிருக்கிறார் அமைச்சர் ராஜித. இவ்வேளையில் குறுக்கிட்ட பணிப்பாளர் நாயகம் “ நீர் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்தானே. இது மாதிரியான முடிவுகளைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை எடுப்பதற்கு விடலாமே” என்று தெரிவித்தாராம்.

இவ்வேளையில் இவை அனைத்தையும் பாரத்துக்கொண்டிருந்த சுகாதார அமைச்சின் ஏனைய மூத்த அதிகாரிகளும் ‘வைத்தியர் சத்தியமூர்த்தி இப்பதவிக்குத் தகுதியானவர். மருத்துவ நிர்வாகத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். வடக்கில் உள்ள சிரேட்ட மருத்துவ நிர்வாகத்துறை அதிகாரிகள் மத்தியில் சேவை மூப்பில் மூன்றாம் இடத்தில் உள்ளவர். அவர் நிறைய சேவைகளை செய்துள்ளார்’ என்று சத்தியமூர்த்தி புராணம் பாடியபோது மீண்டும் குறுக்கிட்ட சுகாதார அமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர் ஒருவரது பெயரினைக்கூறி “அவரும்கூட சத்தியமூர்த்தியை நியமிக்குமாறே கேட்டுக் கொண்டிருக்கிறார். மிகப்பெரிய மாற்றம் யாழ்பாணப் போதனா வைத்தியசாலையில் ஏற்படுத்தப்படுவதற்குச் சத்தியமூர்த்தி கருவியாகச் செயற்பட்டுள்ளார்” எனப்புகழ்ந்தாராம். அத்துடன் இவ்விடயம் குறித்து முற்றுப்புள்ளி வைத்த சுகாதார அமைச்சர் தனது அமைச்சின் உயர் அதிகாரிகளை வடக்கின் உயர் அதிகாரிளுடன் கலந்து பேசி இவ்விடயத்தினை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டுக் கலந்துரையாடலில் பேசப்படவேண்டிய விடயங்களைக் கவனித்திருக்கிறார்.

இவைதான் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமன விடயமாக கொழும்பில் நடந்த கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகள் என அதில் பங்குபற்றிய வடக்கின் உயரதிகாரிகள் பலர் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

இக்கலந்துரையாடலின் பின்னர் வடக்கின் சுகாதாரச் செயலாளர் மற்றும் மாகாணப் பணிப்பாளர் ஆகியோர் மத்தியின் சுகாதாரச் செயலாளருடன் மூடிய அறையில் இவ்விடயம் தொடர்பில் மந்திராலோசனையில்ஈடுபட்டுவிட்டே திரும்பினர் என அவர்களுடன் சென்றிருந்த பிற உயரதிகாரிகள் வாயிலாக அறிய முடிகிறது.

அரசியல் அமைப்பின் 13ம் திருத்தம், மாகாண சபைகள் சட்டமூலம் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் நியதிச் சட்டம்

இந்த வைத்திய அரசியல் தமிழர்களது அதிகாரப்பகிர்வின் எல்லைகள் எவை என்ற சர்ச்சையையும் கிளப்பிவிட்டு சிக்கலை வேறு லெவலுக்குக் கொண்டு போய்விட்டது. இதனால் அதிகாரப்பகிர்வில் வைத்தியர்களது நியமனங்கள் குறித்து சொல்லப்பட்டிருப்பது என்ன என்பதை நாம் தேடிப்பார்த்தபோது ஜே.ஆரின் நரித்தனம் தெளிவாகத் தெரிந்தது. முற்றுமுழுதாக மாகாணத்திற்கு உரித்தான விடயங்கள் அடங்கிய பட்டியல் 1இல் சுகாதாரத்தை உள்ளடக்கிய 13வது திருத்தச் சட்டம் அதேவேளை பட்டியல் 111 என அழைக்கப்படும் ‘ஒப்புதல் பெறவேண்டிய’ விடயங்கள் பட்டியலிலும் சுகாதாரத்தினை உள்ளடக்கியுள்ளது. கொடுப்பது போலக் கொடுத்து தெரியாமல் எடுப்பது என்பது இதுதான் போலும்!.

மேலும் 1987ம் ஆண்டின் 42ம் இலக்க மாகாண சபைகள் சட்டமூலத்தின் பிரகாரம் மாகாணப் பொதுச்சேவைகளின் கீழ்வரும் அலுவர்களது நியமனம், இடமாற்றம், ஒழுக்காற்றுவிசாரணை மற்றும் பதவிநீக்கம் ஆகியவற்றிற்கான அதிகாரம் மாகாண ஆளுனருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலத்தில் அனைத்து இலங்கை சேவையினைச் சார்ந்த உத்தியோகத்தர்களைநியமிப்பதற்கான அதிகாரம் ஆளுனருக்கு அளிக்கப்படவில்லை.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் நியதிச்சட்டம் இலக்கம் 01/ 2015பகுதி ஐ மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தை ஸ்தாபித்தல், அதன் யாப்பு மற்றும் பொறுப்புக்கள்என்ற விடயதானத்தின் கீழ்வரும் பிரிவு 2 இன்“வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தை ஸ்தாபித்தல்” என்பதன் உபபிரிவு (2) இன்பிரகாரம் “திணைக்களத்தினைச் சேர்ந்தஉத்தியோகத்தர்களின் நியமனம் இடமாற்றம் மற்றும் ஒழுக்காற்றுக்கட்டுப்பாடு என்பவற்றின் அதிகாரமானது (அனைத்து இலங்கை சேவையினைச் சார்ந்தஉத்தியோகத்தர்களைத்தவிர) 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க திருத்தம் செய்யப்பட்ட மாகாண சபைகள் சட்டத்தின் பகுதி ஐஏ இற்கிணங்கஆளுநருக்கு உரித்தானதாகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரிவு 4. (1) “மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் இருக்க வேண்டியதுடன் (இதனகத்துப் பின்னர் ”மாகாண பணிப்பாளர்”” எனக் குறிப்பிடப்படும்) அவர் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் தலைவராக இருக்க வேண்டியதுடன் செயலாளரின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்நியதிச் சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்” எனக்குறிப்பிடும் அதேவேளை பிரிவு 5. (1) “யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்காக முறையே ஐந்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் இருக்க வேண்டும்” என குறிப்பிடுகிறது. இங்கு திணைக்களங்களுக்குப் பணிப்பாளர்கள் ‘இருக்கவேண்டும்’ எனச் சொல்லப்பட்டுள்ளதே தவிர ‘நியமிக்கப்படலாம்’ எனக் குறிப்பிடப்படவில்லை என்பதை நாம் அவதானிக்கலாம்.

எனவே வடக்கு மாகாணசபையும் அனைத்து இலங்கைச் சேவையினைச் சார்ந்த உத்தியோகத்தர்களை நியமிக்கும் அதிகாரத்தினை வடமாகாண ஆளுனருக்கு வழங்கவில்லை.

எனவே வைத்தியர்கள் அனைத்து இலங்கை சேவையினைச் சேர்ந்தவர்களாயின் அவர்களது நியமனமானது மாகாண ஆளுனரால் மேற்கொள்ளப்படமுடியாது என்பது இவற்றிலிருந்து தெளிவாகிறது.

25.11.2011 பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் அரசியல் அமைப்பின் பிரகாரம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் 11.10.2014 அன்று பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி அறிவித்தலின்மூலம் வெளியிடப்பட்ட இலங்கை மருத்துவ சேவையினருக்கான சேவைப் பிரமாணக் குறிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை மருத்துவ சேவை ஆளணியினர் அனைத்து இலங்கை சேவையினைச் சேர்ந்த உத்தியோகத்தர்களாகவே வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தத்தில்ஒருசில வைத்தியர்களது வருடாந்த இடமாற்றத்தில் தொடங்கிய முரண்பாடானதுமத்திய சுகாதார அமைச்சு மாகாண ஆளுனரது ஒப்புதலைக் கோராது செய்த வைத்தியர் சத்தியமூர்த்தியின் தற்காலிக நியமனத்தால் தீவிரமiடைந்து,வடக்கில் உள்ள முதுகெலும்பும் தூரநோக்கும் இல்லாத சில உயர் அதிகாரிகளது ஒட்டுமொத்த பலவீனங்கள் மற்றும் குள்ள நரித்தனங்கள் காரணமாக இன்று சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்துள்ளமையானது தமிழினம் தற்போது அடைந்துள்ள இழிநிலைக்கு நல்ல உதாரணமாகும்.

இப்போதாவது வடக்கில் உள்ள உயரதிகாரிகள் மக்களது நலனை முன்னிறுத்தித் தூரநோக்குடன் சிந்தித்து இந்தத் தேவையற்ற சிக்கலிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே உள்விடயங்களை நன்கு அறிந்தவர்களது அபிப்பிராயமாக உள்ளது.

வைத்திய(ர்) அரசியலும் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களும்


குறிப்பு- யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக அண்மையில் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடர்பாக பல்வேறு பார்வைகள் நிலவுகிறது. அதில் ஒரு பார்வையை தமிழ்பக்கம் வெளியிடுகிறது. இதில் மாறுபட்ட கருத்துக்கள், மறுப்புக்கள் இருப்பின், அதை எமக்கு அனுப்பி வைத்தால் அதையும் தமிழ்பக்கம் வெளியிடும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here