திருமணம் செய்ய பயமாக இருக்கிறது: மனமே நலமா?

உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்

பதிலளிக்கிறார்
கு.நக்கீரன்
உளவள ஆலோசகர்

கோணேஸ்வரி (33)
முருங்கன்

பதில்- 27 வயதில் முதல் முறையாகக் கர்ப்பமடைந்தேன். முதல் குழந்தை வயிற்றில் இருக்கும்போது (5ம் மாதமளவில்) எனக்கு குளுக்கோஸ் மற்றும் இரத்த அழுத்தப் பிரச்சினைகள் ஏற்பட்டன. இப்போதும் அந்த இரண்டும் சிறு அளவில் எனக்கு இருக்கின்றன. இப்போது 2வது குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? இதனால் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படுமா? என்று பயமாக இருக்கின்றது. எனக்கு ஒரு நல்ல பதில் சொல்லுங்கள்?

பதில்- சகோதரி! உங்கள் பயம் நியாயமானதே. இருப்பினும் உங்கள் கேள்வியில் உங்களுக்கு முதலாவது கர்ப்பத்தில் குளுக்கோஸ், இரத்த அழுத்தப் பிரச்சினைகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளீர்களே தவிர தற்போதும் நீங்கள் மேற்படி இரு நோய்களுக்குமான சிகிச்சை பெறுகின்றீர்களா என்பது பற்றிக் குறிப்பிடவில்லை.

பொதுவாகச் சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகாலப் பிரச்சினைகளாகக் குளுக்கோஸ் மட்டம் அதிகரிப்பதும், இரத்த அழுத்தம் அதிகரிப்பதும் உண்டு. அவர்களில் சிலருக்கு இது தற்காலிகமாக இருந்து விட்டுப் போய்விடும். சிலரை நிரந்தரமாகத் தொற்றிக் கொள்ளும். இதில் நீங்கள் எந்த வகை என்பது தெரியவில்லை.

இருந்தாலும் உங்களின் வயது 33 என்பதால் நீங்கள் கர்ப்பமடைய விரும்பின் உடனடியாகச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில் 35 வயதின் பின் ஏற்படும் கர்ப்பங்கள் பொதுவாக ஆபத்தான கர்ப்பமாகவே கருதப்படுகின்றன. இதைவிட உங்களுக்கு சென்ற கர்ப்பத்தில் மேற்படி நோய் நிலைகள் இருந்தமையால் இந்த கர்ப்பத்திலும் அவை ஏற்படுவதற்கான ஏதுநிலைகள் மிக அதிகமாகவே உள்ளது. இருப்பினும் அவைகளால் கருவில் உள்ள சிசுவுக்குப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கக் கூடிய சிறந்த மருத்துவப் பராமரிப்பு தற்காலத்தில் நிறையவே உள்ளது.
எதற்கும் நீங்கள் உங்கள் நோய்நிலை தொடர்பான பதிவேடுகளுடன் ஒரு பொது மருத்துவ நிபுணர் மற்றும் மகப்பேற்று மருத்துவ நிபுணர் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு உங்கள் கர்ப்ப காலத்தைத் திட்டமிடுவது பொருத்தமானதாக இருக்கும்.


காயத்திரி (26)
பருத்தித்துறை

பல்கலைக்கழக படிப்பை முடித்து விட்டேன். வீட்டில் நான் தனிப்பிள்ளை. இப்போது எனக்குத் திருமணம் பேசுகின்றார்கள். ஆனால் எனக்குத் திருமணத்தைப் பற்றி நினைத்தாலே பயமாக இருக்கின்றது. திருமணத்தால் எனது சுதந்திரம் பறிபோய் விடுமோ என்று பயப்படுகின்றேன். நான் என்ன முடிவு எடுப்பது?

பதில்- அன்பு மகளே! ஏன் பயம்? இன்றைய காலத்தில் எமது பிரதேசத்தில் திருமணம் செய்து குடும்பங்கள் படும்பாட்டைப் பார்க்கையில் உமக்கு திருமணம் பற்றிய பயம் ஏற்படுவது நியாயமானதே. யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்ற நடவடிக்கைகளில் அரைவாசிக்கு மேலான நேரத்தை விவாகரத்து வழங்குவதிலும் தாபரிப்பு வழங்குவதிலுமே தின்கின்றன. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் எனும் பழமொழி இன்று எமது சமுதாயத்திற்குச் சரியாகப் பொருந்துகின்றது.

அப்படிப் பார்க்கையில் தனிப்பிள்ளையாகப் பிறந்து எதுவித கஸ்டங்களும் இல்லாமல் தனிக்காட்டு ராஜ்ஜியம் நடத்திய உமக்குத் திருமணம் ஆன பின் எப்படி வாழ்க்கை இருக்குமோ என்று பயப்படுவதும் நியாயமானதே.

இருந்தாலும் மனித வாழ்வில் பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், பானபிரஸ்தம், சந்நியாசம் ஆகிய 4 படிநிலைகளையும் கடந்து போனால்தான் அது பூரணமாகும். கல்வி கற்றுப் பட்டமும் பெற்று விட்டீர். இனி திருமண வாழ்வுதான் அடுத்த படி. குடும்ப சாகரத்தினுள் துணிந்து இறங்கும்.

திருமண பந்தத்திற்குள் போகுமுன் உமக்கு வரப்போகும் கணவன் பற்றியும், அவரது குடும்பம் பற்றியதுமான தகவல்களைப் பெற்றுக் கொண்டு அவர்கள் தொடர்பான ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவ் விழிப்புணர்வு உங்கள் எதிர்காலப் பயணம் பற்றிய சில அறிவுறுத்தல்களை உங்களுக்குத் தரும். சில வேளைகளில் உங்களுக்கு இனப்பெருக்கம் மற்றும் பாலியல் தொடர்பான ஏதாவது பிரச்சினைகள் கூட இருக்கலாம். அப்படி ஏதாவது இருப்பின் சரியான உளவள ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

புதிய பகுதி, மிஸ் பண்ணாதீர்கள்: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

குடும்ப வாழ்க்கையில் இறங்குவதற்கு முன் உமக்கு சில ஆலோசனைகள்….. குடும்ப வாழ்வு என்பது இரட்டை மாட்டு வண்டில் போன்றது. இரு மாடுகளும் புரிந்துணர்வோடு தியாகங்களை வரவேற்றுக் கொண்டு “நான்” எனும் ஆணவத்தை (முக்கியமாகக் கணவனிடம்) வெளிக்காட்டாமல் சேர்ந்து ஓட வேண்டும். வாழ்க்கை வண்டில் ஓடும்போது சில வளைவுகளில் ஒரு மாட்டுக்கும் (உமக்கும்) சில வளைவுகளில் உமது கணவனுக்கும் (மற்ற மாட்டுக்கும்) சுமை அதிகமாக இருக்கும். ஏற்றுக் கொள்ளுங்கள். குடும்ப வாழ்வில் அடிப்படையே அன்பும் தியாகமும் மட்டுமே. இவை இரண்டிலும் எப்போதும் கரிசனையாக இருந்தால் வாழ்க்கை மகிழ்வாக இருக்கும். பயம் வேண்டாம்.

ஒரு பழைய பாடல் உண்டு. “புருசன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே, தங்கச்சி கண்ணே” என்ற அந்தப் பாடலை மறக்காமல் ஒரு தடவை கேளுங்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here