வைத்திய(ர்) அரசியலும் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களும்

மதுசுதன்

வடக்கில் தற்போது தலை(போகும்)யாய பிரச்சினையாக மத்திய சுகாதார அமைச்சு மற்றும் மாகாண ஆளுனர் அலுவலகம் ஆகியவற்றிற்கிடையே நடைபெறும் பனிப்போர் மாறிவிட்டது.

பிறந்து மூன்றே நாளில் உடலில் நீர்ச்சத்து இல்லாது இறந்த குழந்தையினையும் இதய சத்திரகிசிச்சைக்கு ஆளாகுபவர்கள் அடுத்தடுத்து இறந்துபோகும் அவலங்களையும் மேவி மறைத்தபடி இந்தப் பனிப்போர் அம்பு வில்லு கதாயுதம் தாண்டி எறிகணைவீச்சு நிலைக்கு வந்துவிட்டது.

இந்தச் சிக்கல்களுக்கு ஆதிமூலம் எது எனப் பார்த்தால் அதிர்ச்சிதான் எஞ்சுகிறது. இங்கே எவரும் சனங்களுக்காகவோ அல்லது சுகாதார சேவையினை விருத்தி செய்வதற்காகவோ அடிபடவில்லை. மாறாக தத்தமது சுயநலங்களுக்காக காய் நகர்த்தி தேரை இழுத்துத் நடுத்தெருவில் விட்டு வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள்.

தமது உறுப்பினர்கள் இருவரை அவர்களது வருடாந்த இடமாற்றக் கட்டளையின் பிரகாரம் விடுவித்த யாழ்ப்பாணப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு ‘பாடம் படிப்பிக்க’ என்றே ‘பஸ்ஸோ ரயிலோ’ பிடித்து கொழும்பு சென்று சுகாதார அமைச்சரது வீட்டில் இரவு விருந்துண்ட ஒரு வடமாகாண வைத்தியர் குழுவே இந்தப் பனிப்போருக்கான பிள்ளையார் சுழியினை எழுதி வைத்தது.

இதில் சம்பந்தப்பட்டுள்ள பிரதான பாத்திரங்களது கடந்த கால வரலாறுகளை ஆராய்ந்து பார்ப்பதே இந்தப் பொம்மலாட்டத்தின் சூத்திரங்கள் மசபாசுகளை விளங்கிக் கொள்ள உதவும்.

யாழ்ப்பாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தேவநேசன்

தொடர்ச்சியாக பணியாளர்களது எதிர்ப்புகள் காரணமாக தான் வகிக்கும் நிர்வாகப் பதவிகளிலிருந்து மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மருத்துவ நிர்வாகசேவை அதிகாரி எனப் பெயரெடுத்தவர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையில் இருந்தவேளையில் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்புகளை அடுத்து 2010ம் ஆண்டின் ஆரம்பத்தில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக மத்திய சுகாதார அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டவர்.

கிளிநொச்சியில் கடமையாற்றிய நிலையில் அங்கும் சுகாதாரத் திணைக்களத்தின் பணியாளர்களது அதிருப்தியினைச் சம்பாதித்த நிலையில் குறுகிய கால விடுமுறையில் வெளிநாடு சென்றிருந்தார். அத்தருணத்தில் கிளிநொச்சி மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட சுகாதார சேவைப் பணியாளர்கள் அப்போதிருந்த ஆளுனர் சந்திரசிறியிடம் மேற்கொண்ட முறைப்பாடுகளை அடுத்து தமது வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பியவருக்கு பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம் ஆளுனரால் வழங்கப்பட்டு மத்திய அரசிற்குத் தெரியப்படுத்தப்பட்டது.

அன்றிலிருந்து வடமாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்தியர் தேவநேசனுக்கு வருடாந்த மருத்துவ நிர்வாக பிரதிப் பணிப்பாளர்களுக்கான இடமாற்றத்தின் மூலம் 2016ம் ஆண்டிலிருந்து மத்திய சுகாதார அமைச்சினால் யாழ்ப்பாண பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமனம் வழங்கப்பட்டது.

2015ம் ஆண்டில் மூத்த மருத்துவ நிர்வாகிகளுக்கான வருடாந்த இடமாற்றத்தின் மூலம் வைத்திய கலாநிதி நந்தகுமாரன் யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளராக நியமனம் பெற்ற பொழுது அவரைக் கடமையேற்க விடாது வைத்தியர் தேவநேசன் தடுத்தமைக்காக அவர் மத்திய சுகாதர அமைச்சின் ஒழுக்காற்று விசாரணைக்கு உள்ளாகி எச்சரிக்கப்பட்டார்.

மீண்டும் 2018ம் ஆண்டில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால் தம்மை வைத்தியர் தேவநேசன் தகாத வார்த்தைகளால் தூசித்து மரண அச்சுறுத்தல் விடுத்ததாக சுகாதார அமைச்சிற்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து மத்திய சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையினை அடுத்து இரண்டாவது தடவையாகவும் வைத்தியர் தேவநேசன் எச்சரிக்கைக்கு உள்ளானார்.

மேலும் இவர் கல்வி பயின்ற கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவராக 2014ஆம் வருடகாலத்தில் பதவிவகித்தபோது கல்லூரிச் சமூகத்தின் அதிருப்திகளையும் சம்பாதித்துக் கொண்டார் என தெரியவருகிறது. அதுமட்டுமல்லாது தனது கல்லூரித் தொடர்புகள் ஊடாக வடமாகாண சுகாதாரத்துறையில் பல்வேறு குழப்பங்களை காலத்திற்குக் காலம் ஏற்படுத்துவதில் இவர் வல்லவர் என்றும் குறித்த ஒரு பொதுச் சுகாதாரத் தொழிற்சங்கத்திற்கு ஆலோசகராக செயற்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் வைத்தியர் தேவனேசன் மீது வைக்கப்பட்டு வருகிறது.

யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி

இவர் 2002ம் ஆண்டிலிருந்து 2009 முள்ளிவாய்க்காலின் இறுதி நாளான மே மாதம் 18ம் திகதி வரை கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்க மருத்து நிர்வாகியாவார். இவ்வேளையிலே மருத்துவ நிர்வாக சேவையின் முதுமாணிப் பரீட்சையிலும் இவர் சித்திபெற்றுள்ளார்.

2010 ஆம் ஆணடு ஆவணி மாதம் வடமாகாண பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இப்பதவியுடன் இதே ஆண்டில் செட்டிகுளத்தில் தங்கியிருந்த வன்னி மக்களது சுகாதார ஒருங்கிணைப்பு பொறுப்பதிகாரியாகவும் மாகாண ஆளுனரால் இவர் நியமிக்கப்பட்டார். இவற்றின் மத்தியிலும் தனது மேற்படிப்பினை விடாது தொடர்ந்த வைத்தியர் சத்தியமூர்த்தி மருத்துவ நிர்வாக சேவை கலாநிதிப் பரீட்சையிலும் சித்தியடைந்தார்.

2011ம் ஆண்டில் வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட இவர் இப்பதவியுடன் மாவட்டத்தின் டெங்கு ஒழிப்பு செயலணியின் தலைவராக ஆளுனரால் நியமிக்கப்பட்டார். வவுனியா மாவட்டத்தில் கடுமையாகப் பரவிய டெங்கு நோய் இவரது தலைமைத்துவத்தின் கீழ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதுடன் இவர் மேற்கொண்ட டெங்கு தடுப்பு உத்திகள் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படலாயின.

2015ம் ஆண்டில் சிறிது மீண்டும் காலம் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றிய இவர் 2015ம் ஆண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மத்திய அரசினால் நியமிக்கப்பட்டார். 2019ம் ஆண்டிலிருந்து அதே வைத்தியசாலையில் நிரந்தரப் பணிப்பாளராக இவர் பதவி உயர்வு பெற்றார்.

ஆளுனரது செயலாளர் இளங்கோவன்

இலங்கை அரச நிர்வாக சேவையின் 1995ம் ஆண்டு அணியினைச் சேர்ந்தவரான இந்த மூத்த அரச அதிகாரி தமது சேவைக்காலத்தில் யுத்தம் நடந்த பிரதேசங்களை எட்டியும் பார்த்தவரல்லர்.

முதல் நியமனத்தினை தமது சொந்தப் பிரதேசமான தீவகத்தில் பெற்றுக்கொண்டார். திருமணபந்தத்தின் மூலம் வடக்கில் பொதுச்சேவை நியமனங்களை மேற்கொள்ளும் உச்ச அதிகாரம் கொண்ட பதவியில் இருந்தவரது மிகநெருங்கிய உறவினராக மாறிய இவர் திருமலையில் இயங்கிய வடக்கு மாகாணசபையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2010ம் ஆண்டில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராக இவர் திறம்படச் செயற்பட்டார்.

பின்னர் வடக்கின் பிரதம செயலாளர் பதவிக்கான போட்டியில் வெற்றிபெற முடியாத நிலையில் ஆளுநரது செயலாளராக பதவி உயர்வு பெற்று தமது இந்தப் பதவிக்காலத்தில் நான்காவது ஆளுனருக்கு செயலாளராகக் கடமையாற்றி வருகிறார்.

வடமாகாண வைத்தியர் மன்றம்

வைத்தியர்களுக்கான வருடாந்த இடமாற்றக் கட்டளைகள் வருடாந்தம் மத்திய சுகாதார அமைச்சினால் வழங்கப்படும். ஒரு பொதுச்சேவை உத்தியோகத்தர் ஒரு சேவை நிலையத்தில் ஆகக்கூடியது 4 வருடங்கள் மட்டுமே கடமையாற்றலாம் என்ற தாபன விதிக்கோவை நடைமுறைகளுக்கு அமைவாக இது அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இம் முறைமையின் கீழ் வைத்தியர்கள் சேவை மூப்பின் அடிப்படையில் தமது விருப்பத் தெரிவுகளை மேற்கொள்ள இடமளிக்கும் அதேவேளை அவ்வாறு தெரிவு செய்யாதவர்களுக்கு சேவையின் தேவை கருதி ஒரு சேவை நியைத்தினை சுகாதார அமைச்சே ஒதுக்கும். இதன் பிரகாரம் 2013ம் ஆண்டில் வழங்கப்பட்ட வருடாந்த இடமாற்றக் கட்டளைக்கு அமையப் பல்லாண்டுகளாக யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் இடமாற்றங்கள் இன்றிப் பணிபுரிந்து வந்த பல வைத்தியர்களுக்கு யாழ் மாவட்டத்தின் சுற்றயல் வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. மக்களது சுகாதார நலன்களை விருத்தி செய்யும் நன்னோக்குடனும் வைத்தியர்களது குடும்ப சூழ்நிலைகளை பாதிக்காத வகையிலும் குடாநாட்டினுள்ளேயே சேவை நிலையங்களை தெரிவுசெய்து வழங்கி மேற்கொள்ளப்பட்ட இந்த இடமாற்றக் கட்டளைகள் செயற்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்ததால் யாழ் குடாநாட்டின் சுற்றயல் வைத்தியசாலைகள் வைத்தியர்கள் இன்றி மூடப்பட்டுக் கிடந்தன. இதனால் பொதுமக்கள் கடுiமையாகப் பாதிக்கப்பட்டதைத் தெரிந்துகொண்ட சுகாதார அமைச்சானது 2015ம் ஆண்டில் இந்த இடமாற்றங்களை உடனடியாக அமுலாக்குமாறு பணிப்பாளர்களுக்கு கடுமையான உத்தரவினை வழங்கியது.

இதனையடுத்து பல மூத்த வைத்தியர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து சுற்றயல் வைத்தியசாலைகளுக்கு நியமனம் பெற்றனர். இவ்வாறு சுற்றயல் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்ட வைத்தியர்கள், தாம் அவ்வாறு அனுப்பப்பட்டமைக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கமே காரணம் என்று கருதி அச் சங்கத்திற்குப் போட்டியாக வடமாகாணத்தில் ஒரு அமைப்பினை உருவாக்கினர். இந்த அமைப்பின் முதலாவது கூட்டம் பெருமெடுப்பில் 14.09.2016 அன்று இடம்பெற்றது. இலங்கையில் பல்லாயிரம் பேர் மருத்துவராகப் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறான மருத்துவர்களுக்கென தொழிற்சங்கங்கள், கல்விசார் அமைப்புகள் என இயங்கிவந்தாலும் வடக்குக்கே என உள்ள பல்வேறு பிரத்தியேக மற்றும் தீவிர பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. இந் நிலையில் இப்பிரச்சனைகள் இங்கு பணியாற்றும் மற்றும் வசித்து வரும் வைத்தியர்களின் பணிகள், தனிப்பட்ட மற்றும் குடும்பவாழ்வில் எவ்வாறான தாக்கங்களைச் செலுத்தி வருகின்றன என்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். இதனடிப்படையில் வடமாகாண மருத்துவர் மன்றம் அமைப்பு வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செயற்படும் எனப் பிரகடனப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டது வடமாகாண வைத்தியர் மன்றம். இக்காலப்பகுதியில் இவர்களது உருவாக்கம் மற்றும் செயற்பாடுகளுக்கு பெரும் உறுதுணையாக இருந்தவரே இன்றைய யாழ்ப்பாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தேவநேசன் ஆவர்.

இவ்வாறு ஆரவாரமாக வடக்கின் பொதுமக்களுக்காக என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த வடமாகாணக் வைத்தியர் மன்றத்தினர் ஒருபக்கம் தமிழ்த்தேசிய முகத்தைக் காட்டியபடி மறுபக்கம் தமது நலன்களை தக்கவைப்பதற்காக மத்திய சுகாதார அமைச்சருடன் நெருக்கமான உறவினை ஏற்படுத்திக் கொண்டனர்.

வடமாகாண வைத்தியர் மன்றம் ஆரம்பத்தில் சில மருத்துவ முகாம்களை நடத்தியிருந்தாலும் பின்னரான காலப்பகுதியில் வடமாகாணத்தில் சுகாதார அமைச்சினால் சாதாரணமாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு செயல்பாடுகளும் தமது வேண்டுகோளின் பிரகாரமே நடைபெறுவதாக ‘காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த கதையாக’ ஊடகப் பிரசாரம் புரிந்துகொண்டிருந்தனர். ஆனால் உண்மையில் காலத்திற்குக் காலம் தமக்கு வேண்டியவர்களுக்கான நியமனங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தே மத்திய சுகாதர அமைச்சருடன் விருந்துண்டு வேண்டுதல் நிறைவேற்றி வந்தனர். சாதாரண மருத்துவ அதிகாரியான இந்த மன்றத்தின் தலைவர் வைத்தியர் பசுபதி அச்சுதன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக மத்திய அமைச்சினால் நியமிக்கப்பட்டது இவற்றிற்கெல்லம் சிகரம் வைத்தி செயலாக அமைந்தது.

தாம் ஒரு தொழிற்சங்கம் அல்ல என்று கூறிவரும் இந்த அமைப்பானது சுகாதார அமைச்சரைச் சந்தித்து விருந்துண்பதற்கு தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு அவர்களது தொழிற்சங்கக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காகத் தாபன விதிக்கோவையின் பிரகாரம் வழங்கப்படும் சலுகைகளாக இலவச பிரயாணச் சிட்டை, பிரயாணப்படி, அலுவல் விடுமுறை ஆகியற்றைக் கோரிப் பெற்று வந்திருப்பதாகத் தெரியவருகிறது.

வைத்தியர் தேசநேசன் தற்காலிகமாக யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியை வகிக்கத் தொடங்கியதிலிருந்து தன்னார்வத் தொண்டு நிறுவனப் பதிவில் இயங்கும் இந்த வைத்தியர் மன்றத்திற்கு ஒரு தொழிற்சங்கத்திற்குரிய சலுகைகளை வழங்க முடியாது என நிராகித்து விட்டமையே இந்த இரு தரப்பினரிடையேயும் முதலாவது விரிசலை ஏற்படுத்தியதாம்.

வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது

2017ம் ஆண்டிற்குரிய வருடாந்த இடமாற்றக் கட்டளையின் பிரகாரம் தமது சேவை மூப்பின்படி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு யாழ் மாவட்டத்தில் இருந்த ஒரு வைத்தியர் இடமாற்றத்தினைப் பெற்றுக்கொண்டார். அவரது துணைவியார் அவ்வேளையில் பட்டமேற்படிப்பினை கொழும்பில் மேற்கொண்டுவந்தமையால் மேற்படி வைத்தியர் தாமும் கொழும்பு செல்ல வசதியாக இத்தெரிவினை மேற்கொண்டிருந்தாராம். இருப்பினும் சில பல காரணங்களால் அவர் இடமாற்றத்தில் கொழும்பு செல்லாது யாழ் மாவட்த்திலேயே கடமையாற்றி வந்திருக்கிறார். 2019ம் ஆண்டில் சுகாதார அமைச்சு கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வருடாந்த இடமாற்றங்களில் அமுல்படுத்தப்படாதிருந்த இடமாற்றங்களை உடனடியாகச் செயற்படுத்துமாறு பணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் குறித்த யாழ் வைத்தியரை யாழ்ப்பாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தேவனேசன் விடுவிக்க முற்பட்டபோது சிக்கல் ஆரம்பமானது. ஏனெனில் 2019ம் ஆண்டில் இந்த யாழ் வைத்தியரது துணைவியார் தனது பட்டப் பின் படிப்பினை நிறைவுசெய்து யாழ்குடாநாட்டில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு பணி நியமனம் பெற்றுவிட்டார். இதனால் தம்மைக் கொழும்பிற்கு விடுவிக்காதிருக்குமாறு வேண்டுகோள் கடிதத்துடன் குறித்த யாழ் வைத்தியர் கொழும்பு சுகாதார அமைச்சிற்குச் சென்று தொடர்ந்தும் யாழில் கடமையாற்றத் தற்காலிக அனுமதி வாங்கி வந்தார். இந்த யாழ் வைத்தியர் வடமாகாண வைத்தியர் மன்றத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் யாழ்ப்பாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடாக்கண்டனாக செயற்பட்டு இந்த யாழ் வைத்தியரை கொழும்பிற்கு விடுவித்துவிட்டு செயற்படுத்தப்படாதிருந்த ஏனைய வைத்திய இடமாற்றக் கட்டளைகளையும் மும்முரமாகச் செயற்படுத்தத் தொடங்கிவிட்டார். இந்த இடமாற்றக் கட்டளைகளுக்கு ஆளானவர்களில் பலர் வடமாகாண வைத்தியர் மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் ஆவர்.

இதனையடுத்து தற்போது தமக்கு உவப்பல்லாத இடமாற்றக் கட்டளைகளை நிறைவேற்றினார் என்ற ஒரே காரணத்திற்காக யாழ் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரைத் தூக்கி எறிகிறோம் எனச் சபதமிட்ட வடமாகாண வைத்தியர் மன்றம் மத்திய சுகாதார அமைச்சரிடம் சென்று அவரது காலில் விழுந்து மன்றாடி வைத்தியர் சத்தியமூர்த்தியை யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியையும் மேற்பார்வை செய்யும் உத்தரவினை 17.04.2019 அன்று மத்திய சுகாதார அமைச்சு மூலம் வெளியிட வைத்தனர்.

இரவோடு இரவாக கொழும்பில் அமைச்சர் இல்லத்தில் நடந்த சோமபான விருந்தில் இந்த நியமனம் உறுதி செய்யப்பட்டது என உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிலடித் தாக்குதல்

ஆரம்பத்தில் இந்த நியமனத்தினைச் சாதாரணமாக எடுத்துக்கொண்ட யாழ்ப்பாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் இரண்டொரு தினங்களில் தனது ஆதரவு அணியினர் அவரை உசுப்பேற்றிவிட்டமையால் சினந்தெழுந்தார்.
வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் சிலருக்கு அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தவல்ல ஒருவராக வைத்தியர் சத்தியமூர்த்தி காண்பிக்கப்பட்டு ‘அவர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர் அல்லர் எவ்வாறு முழு யாழ்ப்பாண குடாநாட்டையும் அவரிடம் தாரை வார்ப்பது’ என்பது போன்ற ‘ பிரதேசவாதக் கதைகள்’ கூறப்பட்டன.

ஆளுநர்

தற்போதைய ஆளுநரோ உரிய சட்ட மற்றும் நிர்வாக ஆலோசனைகள் எதையுமே பெற்றுக் கொள்ளாது மத்திய சுகாதார அமைச்சுடன் நேரடித் தொடர்பாடலை மேற்கொள்வதைத் தவிர்த்து கடிதங்கள் வாயிலாகவும் மாகாண அதிகாரிகளைக் கடிவதன் வாயிலாகவும் காரியம் சாதிக்க முயன்றார்.

கடந்த காலங்களில் இருந்த எந்த ஒரு ஆளுனரும் அரச அதிகாரிகளை பொதுவெளியில் கௌரவத்துடன் நடாத்தியதாகதாகவே பலரும் தெரிவிக்கின்றனர். இராணுவ ஆளுனர் என அழைக்கபட்ட சந்திரசிறிகூட எவரையும் நாய்கள் என்றோ குரங்குகள் என்றோ குறிப்பிட்டு பொதுவெளியில் அவமரியாதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கவில்லை. ஆனால் பௌத்தத்தில் பாண்டித்தியம் பெற்ற கலாநிதியாக அறிமுகமான தற்போதைய தமிழ்பேசும் ஆளுனரோ பௌத்தம் போதிப்பதற்கு மாறாக வன்சொற்களையும் வசவுகளையுமே தமது அதிகாரிகள் மீது தாராளமாகப் பிரயோகித்து வருவது காணொளிகளாக அவரது முகநூல் பக்கத்திலேயே பதிவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதாரப் பணியாளர்கள் சிலர் தமது ‘மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் நேர்முகப் பரீட்சையில் நடந்த குளறுபடிகளால் பதவி உயர்வு கிடைக்காமல் போய்வவிட்டது’ என்ற முறைப்பாட்டுடன் ஆளுனரைச் சந்தித்திருக்கிறார்கள். ஒருபுறம் ‘வைத்தியர்களை நியமிக்க மத்திக்கு அதிகாரம் இல்லை’ என்று மல்லுக்கட்டும் ஆளுனர் 12.06.2019 புதன்கிழமை மக்கள் சந்திப்பின்போது தம்மைச் சந்தித்த இந்த வடமாகாண சுகாதாரப் பணியாளர்களுடன்; உரையாடும்போது “ மாகாண சுகாதாரப் பணிப்பாளர் பணிமனை நாய்கள் நேர்முகப் பட்டியலை நேரடியாக மத்திய சுகாதார அமைச்சிற்கு அனுப்பாது ஏன் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு ஊடாக அனுப்பினார்கள்” எனச் சினந்தாராம்.

வைத்தியர்களின் தனிப்பட்ட சிக்கல்களால் குழப்பம் ஏற்பட்ட யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனத்தில், ஆளுனரும் எடுத்தேன் கவிழ்த்தேன் என தலையிட, நிலைமை இன்னும் சிக்கலானது.

(தொடரும்)


குறிப்பு- யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக அண்மையில் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடர்பாக பல்வேறு பார்வைகள் நிலவுகிறது. அதில் ஒரு பார்வையை தமிழ்பக்கம் வெளியிடுகிறது. இதில் மாறுபட்ட கருத்துக்கள், மறுப்புக்கள் இருப்பின், அதை எமக்கு அனுப்பி வைத்தால் அதையும் தமிழ்பக்கம் வெளியிடும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here