ஜேவிபியிடம் ஏமாறாதது ஒன்றுதான் குறை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டம் அண்மையில் கொழும்பில் இரண்டு தடவைகள் கூடியது. பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரை மீதான விவாதம், வாக்கெடுப்புத்தான் இதில் முக்கிய விவகாரமாக ஆராயப்பட்டதென்றாலும், 20வது திருத்தம் பற்றியும் ஆராயப்பட்டது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் நோக்கத்துடன் ஜேவிபி 20 வது திருத்தத்தை சமர்ப்பிக்க தயாராகி வருவதை எல்லோரும் அறிந்திருப்பீர்கள். 20வது திருத்தத்தின் சாரம்- நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது. 20 வது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் தனிப்பட்ட பிரேரணையாக பாராளுமன்ற செயலாளரிடம் இன்று (25) ஒப்படைக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த சட்டவரைவு சமர்பிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரமுறைமையை ஒழிக்க வேண்டுமென்று பல கட்சிகள் விரும்புகின்றன. நீண்ட காலமாக இதே கருத்தை பலரும் சொல்லிவந்திருந்தாலும், இப்படியான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டால், வழக்கமாக ஜனாதிபதியாக இருப்பவரின் கட்சி இதற்கு ஒத்துழைப்பு வழங்காது. ஆனால் இம்முறை எல்லா தரப்பையும்- ஜனாதிபதி, பிரதமர், ஜே.விபி- ஒரே முனையில் வந்துள்ளன. சமகால அரசியல் சூழல் அப்படியான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடந்தால், அது தற்போதைய அரசியல் சூழலை சடுதியாக மாற்றி மஹிந்த அணியின் கையில் நாட்டை கொடுத்துவிடும் என்ற அச்சம் எல்லா தரப்பிடமும் உள்ளது. பொதுவேட்பாளர் உத்தியும் கைகொடுக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இம்முறை ஆட்சி பொதுவேட்பாளரின் ஆட்சி. இந்த ஆட்சியில் மக்களிற்கு -பெரும்பான்மை சிங்களவர்களிற்கு- சலிப்பேற்பட்டுவிட்டது என்பதை நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் தெளிவாக சொல்லிவிட்டது. ஆகவே, அடுத்த முறையும் பொதுவேட்பாளர் உத்தி கைகொடுக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. தவிரவும், அண்மைய அரசியல் வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாதளவு செல்வாக்குடன் அரசுக்கு வெளியில் சக்தியொன்று உள்ளது.

ஒருவகையில் இன்றைய ஆட்சியாளர்களின் பயண வரைபடத்தை அந்த சக்திதான்- மஹிந்த மணி- தீர்மானிக்கிறது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய களமிறங்கினால், ஆட்சியதிகாரம் மீண்டும் மஹிந்த முகாமிற்கு மாறிவிடவே வாய்ப்புண்டு.

இதனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை இம்முறையுடன் ஒழித்தே தீர வேண்டிய தேவை, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய அணிக்கு உள்ளது. அண்மைக்காலமாக இந்த அணிக்குள் குழப்பங்கள் இருப்பதாக தெரிந்
தாலும், ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பில் ஒன்றுபட்டுள்ளனர். ஜேவிபியின் 20வது திருத்தத்திற்கு ரணில், மைத்திரி அணிகளும் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவே தெரிகிறது.

இந்த 20வது திருத்தத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்குமா என்பதே இப்போதைய கேள்வி. சம்பந்தரின் அரசியல் நகர்வுகளிற்கு நன்றாக பழக்கப்பட்டு விட்ட தமிழரசுக்கட்சியின் மூத்த எம்.பியொருவர் அண்மையில் சொன்னார்- ‘அவரது நகர்வுகளை பார்க்கும்போது, 20வது திருத்தத்தை ஆதரிக்கும் முடிவில் இருக்கிறார் போலத்தான் தெரிகிறது’ என. ஆனால் கூட்டமைப்பு இன்னும் எதையும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதை மட்டும் நோக்கமாக கொண்ட 20வது திருத்தத்தை கூட்டமைப்பு ஆதரிப்பது நல்ல முடிவாக அமையாது. புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் இனி முன்னகரவே வாய்ப்பில்லையென்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தமிழர்களிற்கு என்ன அரசியல் நன்மைகளை கொடுக்கப் போகிறது?

ஒட்டுமொத்த இலங்கைக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை பிரச்சனையெனில், இனப்பிரச்சனை தீர்வையும் உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை பேரம் பேசுவதே சரியானதாக இருக்கும்.  ஏனெனில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவின்றி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 20வது திருத்தத்தை நிறைவேற்ற வாய்ப்பேயில்லை.

இந்த இடத்தில் இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அந்த கட்சியின் பல பிரதானிகள் அடிக்கடி சொன்ன ஒரு விசயம்- அரசியலமைப்பில் பகுதிபகுதியாக மேற்கொள்ளப்படும் திருத்தங்களை ஆதரிக்கமாட்டோம் என. அதாவது இனப்பிரச்சனையை தீர்க்கும் முழுமையான அரசியலமைப்பு திருத்தம் ஒன்றையே ஆதரிப்போம் என்பதே அந்த நிலைப்பாடு.

உண்மையில் இதுதான் புத்திசாலித்தனமானதாக இருக்கும்.

கூட்டமைப்பு இப்பொழுது என்ன செய்ய போகிறது?

ஒருவேளை ஏதாவது திரைமறைவு உடன்படிக்கைகளின் பெயரில் இதை ஆதரிக்க முடிவெடுத்தால்- வரலாற்றில் ஒரு கசப்பான அனுபவமே எஞ்சுவதற்கு வாய்ப்புள்ளது. அப்படி ஆதரிக்க முடிவெடுத்தால்- இதுவரை தமிழர்கள் வாய்ப்பாடமாக சொல்லிக்கொண்டிருப்பது- 60 வருடமாக ஐ.தே.க, சு.க இரண்டு கட்சிகளும் தமிழர்களை ஏமாற்றின என. இனி தெற்கின் மூன்றாவது சக்தியாக உருவெடுத்துள்ள ஜேவிபியிடமும் நாம் ஒருமுறை ஏமாந்து பார்க்கலாம்!

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here