கிழக்கில் தமிழ்-முஸ்லிம் உறவு: ஓர் அரசியல் வரலாற்று நிலைப் பார்வை 2

தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்

1965ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கல்முனைத் தொகுதியில் எம்.எஸ்.காரியப்பர் சுயேச்சை வேட்பாளராக நின்று வெற்றிபெற்றார். இத்தேர்தலில் வென்று அரசமைத்த பிரதமர் டட்லி; சேனநாயக்கா தலைமையிலான அரசாங்கத்தில் தமிழரசுக்கட்சியும் பங்காளியாக இணைந்திருந்தது. “தளுகொட பிட்டயவின் லஞ்ச ஊழல் ஆணைக்குழு”வின் அறிக்கையை அமுல்நடத்தும் படி தமிழரசுக்கட்சி அரசாங்கத்தை வற்புறுத்தி அவ்வாறு அமுல்நடத்தியதன் மூலம் எம்.எஸ்.காரியப்பர் அவர்களைப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்து கல்முனையில் 1968 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் ஒன்றிற்கு வழி வகுத்ததன் மூலம் இப்பிரதேச முஸ்லிம்கள் தமிழரசுக்கட்சி மீதான அபிமானத்தை இழந்ததுடன் தமிழர்கள் மீது குரோதத்தையும் வளர்த்தனர். எது எப்படி இருப்பினும் கிழக்கு முஸ்லிம்களுடைய பெருந் தலைவர் என்று அப்போது கருதப்பட்ட எம்.எஸ்.காரியப்பர மீது; இவ்வாறு தமிழரசுக்கட்சி பழிதீர்த்துக்கொண்டமை தமிழ் முஸ்லிம் உறவில் எதிர்மறையான விளைவுகளையே தந்தது. தமிழரசுக்கட்சியின் இவ்வாறான புத்திசாலித்தனமற்ற அரசியல் செயற்பாடுகளும் கூட தமிழ்-முஸ்லிம் பகைக்குக் காரணமாக அமைந்தன.

1967 ஏப்ரலில் கல்முனையில் அப்பகுதி முஸ்லிம் அரசில்வாதிகளினால் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழர்களுக்கு எதிரான வன்முறையினால் கல்முனைத் தமிழர்கள் வெகுவாகப் பாதிக்கப் பெற்றார்கள். தமிழ்க் குடும்பங்கள் பல தங்கள் வாழ்விடங்களிலிருந்து வெளியேறவும் ஏற்பட்டது. அப்போது ஆட்சியிலிருந்த யூ.என்.பி. அரசாங்கத்தின் பங்காளியாக இருந்த போதிலும் தமிழரசுக்கட்சி பாதிப்புற்ற தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லை. கிழக்கு மாகாணத் தமிழர்களின் மீது தமிழரசுக்கட்சிக்கு எந்த அக்கறையும் இருந்ததில்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. இக்கலவரத்தின் பின் கூடிய மூதவைக் (செனட்சபை) கூட்டமொன்றில் செனட்டர் மாணிக்கம் அவர்கள் (மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பா.உ சாம்தம்பிமுத்து அவர்களின் மனைவியான கலாமாணிக்கம் அவர்களின் தந்தையார்) தமிழரசுக்கட்சிச் செனட்டரான மு.திருச்செல்வத்தை நோக்கி கல்முனைக் கலவரத்திற்குக் காரணம் தமிழரசுக்கட்சியின் பிழையான அரசியலே எனக் கூறியிருந்தார். கல்முனைத்தமிழர்களின் இன்றைய அவலமான நிலைக்குத் தமிழரசுக்கட்சியே காரணம் என்பது இன்று எண்பிக்கப் பெற்றுள்ளது.

1972ஆம் ஆண்டின் குடியரசு அரசியலமைப்பு நிறைவேற்றத்தைத் தொடர்ந்து இலங்கைத் தமிழரசுக்கட்சியும் அகில இலங்கைக் காங்கிரஸ் கட்சியும் இணைந்து தமிழர் கூட்டணி ஆகிப் பின்னர் 1976ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியது. 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது கல்முனையில் உருவான முஸ்லிம் ஐக்கிய முன்னணி எனும் பதிவு செய்யப்பெறாத அரசியல் கட்சியொன்றுடன் தேர்தல் கூட்டு ஒப்பந்தமொன்றினைச் செய்துகொண்டு கல்முனை, சம்மாந்துறை, சேருவில, புத்தளம் ஆகிய தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தின் கீழ் முஸ்லிம் ஐக்கிய முன்னணி சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப் பெற்றனர். தமிழீழத் தனி நாட்டுக்கான சர்வஜன வாக்கெடுப்பாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்திருந்த இத்தேர்தலில் அதிகம் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் நோக்கமாயிருந்தது.

முஸ்லிம் ஐக்கிய முன்னணி தமிழீழத்தை ஏற்றுக்கொண்டிருந்தது என்பதைவிட கல்முனை, சம்மாந்துறை ஆகிய தொகுதிகளில் தமிழ் வாக்குகளைப்பெற்று தங்கள் வேட்பாளர்களை வெற்றியீட்டச் செய்வதே முஸ்லிம் ஐக்கிய முன்னணியின் குறியாக இருந்தது. முஸ்லிம் ஐக்கிய முன்னணியின் சார்பில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் நடவடிக்கைக் குழுவில் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களும் இடம் பெற்றிருந்தார். முஸ்லிம் ஐக்கிய முன்னணி வேட்பாளர்கள் எவரும் இத்தேர்தலில் வெற்றி பெறவில்லை. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து எம்.எச்.எம்.அஸ்ரப் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது தமிழீழத் தனிநாட்டுக் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். இதே அஸ்ரப்தான் கல்முனைத் தொகுதியிலே நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசும்போது எதிர்காலத்தில் அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டால்கூட அதனைத் தான் தலைமை தாங்கிக் கொண்டு செல்வேன் என்று சூளுரைத்திருந்தார்.

பின்னர் 1981 ஆம் ஆண்டில் மாவட்ட அபிவிருத்திச்சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பட்டியலில் தலைமை தாங்கிப் போட்டியிடுவதற்கான வேண்டுகோளொன்றினை தமிழர் விடுதலைக்கூட்டணியிடம் அஸ்ரப் விடுத்திருந்தார். தமிழர் விடுதலைக்கூட்டணியின் நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்றிருந்த அஸ்ரப்பை முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த அம்பாறை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணிப் பட்டியலின் தலைமை வேட்பாளராக நிறுத்தும்படியான அஸ்ரப்பின் கோரிக்கை நியாயமானதே. ஆனால் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை குறித்துப் பேசும் தமிழர் விடுதலைக் கூட்டணி அதற்கு மறுத்துவிட்டது. அஸ்ரப் பின்னாளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியினூடாகத் தனியான அரசியல் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்குத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இம் மறுப்பும் ஒரு காரணமாகப் பேசப்பட்டது.

இத்தகைய பின்னணியிலே விடயங்களை வைத்துப் பார்க்கும் போது கிழக்கிலே தமிழ் முஸ்லிம் உறவின் விரிசலுக்குக் காரணம் முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் தமிழரசுக்கட்சி-தமிழர்விடுதலைக்கூட்டணி-தமிழத் தேசியக் கூட்டமைப்பினதும் சந்தர்ப்பவாத அரசியல் செயற்பாடுகளே என்பதைச் சாதாரண தமிழ் மக்களும் முஸ்லிம்களும் புரிந்து கொள்ளும் போதுதான் உண்மையான தமிழ் – முஸ்லிம் ஒற்றுமை உருவாக முடியும்.

இனி கிழக்கின் இன்றைய அரசியல்கள நிலையை நோக்கலாம்.

1987 யூலை 29 இல் கைச்சாத்திடப்பெற்ற இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் வாயிலாகத் தற்காலிகமாகவேனும் இணைக்கப் பெற்றிருந்த இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஜே.வி.பி தொடர்ந்த வழக்கு ஒன்றின் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர் கிழக்கிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளின்-அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாயினும் சரி உளவியல் என்னவென்றால் வடக்குமாகாணம் தமிழருக்கு உரியது: கிழக்குமாகாணம் முஸ்லிம்களுக்கு உரியது என்பதாகும். இந்த உளவியலைச் சாதாரண முஸ்லிம் மக்களுக்கும் இவ் அரசியல்வாதிகள் ஊட்டி வளர்த்துள்ளனர். வடகிழக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம்களும் அவ்வாறுதான் எண்ணுகிறார்கள்.

இந்த உளவியலின் அடிப்படையில் முழுக் கிழக்கு மாகாணத்தையும் இஸ்லாமியப்படுத்துகின்ற விடயம் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் ஒரு ‘பாரியவேலைத்திட்டம்’ ஆக கிழக்கின் முஸ்லிம் அரசியல்வாதிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ் வேலைத்திட்டம் பல கூறுகளைக் கொண்டுள்ளது. தமிழர்களைக் குடும்பமாகவும் தனிநபராகவும் இஸ்லாம் மதத்திற்கு மாற்றுவது-தமிழர்களின் அசையாச் சொத்துக்களை ‘நல்ல’ விலை கொடுத்துக் கொள்வனவு செய்வது (இது யூதர்கள் பலஸ்தீனத்தில் நிலங்களைக் கொள்வனவு செய்தமைக்கு ஒப்பானது)-அரசியல் செல்வாக்கினாலும் அபரிதமான பொருளாதார வசதி மூலமும் அதிகாரிகளை வளைத்துப் போட்டும் தமிழ் பிரதேசங்களிலுள்ள அரசகாணிகளைக் கையகப்படுத்துவது-நன்கு திட்டமிட்ட வகையிலே தமிழர்களிடையே ஊடுருவிப் பொருளாதார நலிவையும் கலாசாரச் சீரழிவுகளையும் ஏற்படுத்துவது- தமிழ்ப்பிரதேசங்களிலுள்ள மொழி இன பண்பாட்டு அடையாளங்களைச் சிதைத்து அங்கு எல்லாம் இஸ்லாம் மத அடையாளங்களை நிர்மாணம் செய்வது-முஸ்லிம் பெரும்பான்மைத் தேர்தல் தொகுதிகளையும் முஸ்லிம் பெரும்பான்மை நிர்வாக அலகுகளையும் முஸ்லிம் பெரும்பான்மை உள்ளூராட்சி அலகுகளையும் முஸ்லிம் பெரும்பான்மைக் கல்வி வலயங்களையும் உருவாக்கி அவற்றின் ஆளுகையின் கீழ் வருகின்ற தமிழர்கள் மீது சமூக பொருளாதார அரசியல் மற்றும் பண்பாட்டு ஆக்கிரமிப்புச் செய்வது- இப்படிப் பல கூறுகளாக இவ்வேலைத்திட்டம் மிகத்துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இப்படியே இன்னும் இருபத்தைந்து வருடங்கள் போனால் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் இருப்பு காணாமலே போய் விடக் கூடிய ஆபத்து இருக்கிறது. இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான பாரிய வளங்கள் கடல்கடந்து முஸ்லிம் அரசியல்வாதிகளின் கைகளுக்கு வந்து சேர்கின்றனவோ என்ற சந்தேகங்களும் தமிழர்களிடையே எழாமல் இல்லை. இந் நிகழ்ச்சி நிரலைக் கொண்டு செல்வதற்கு அரசாங்க உயர்மட்டத்தினதும் அரச இயந்திரத்தினதும் அனுசரணை தேவை. அவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடிய உயர் மட்ட அரசியல் செல்வாக்கும் அபரிதமான பொருளாதார வளமும் முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் உண்டு. மேலும் இந் நிகழ்ச்சி நிரலைத் தமிழர்களின் எதிர்ப்பின்றிக் கொண்டு செல்வதற்கு வசதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கிழக்கின் முஸ்லிம் அரசியல்வாதிகள் நன்கு ‘தாஜா’ பண்ணி வைத்துள்ளனர். பொருத்தமான சன்மானங்களைப் பெற்றுக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் நலன்களைக் கிழக்கின் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குத் திரைமறைவில் தாரைவார்த்துக் கொடுப்பதாகவே கதை அடிபடுகிறது.

‘நெருப்பில்லாமல் புகைய மாட்டாது’. அதன் ஒரு உச்ச கட்டமே பதினொரு ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏழு ஆசனங்களைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குக் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்த அரசியல் நிகழ்வு ஆகும். ஏன் அவ்வாறு அரசியல் தவறு செய்தீர்கள் என்று கிழக்குத் தமிழர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைமையிடம் தட்டிக்கேட்டால் வடகிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுதேவை அதனால்தான் இவ்வாறு விட்டுக்கொடுத்தோம் என்கிறது.

இது எவ்வளவு அரசியல் முட்டாள்தனம் என்பது அரசியல் அரிச்சுவடி அறிந்த சாதாரண குடிமகனுக்கும் தெரியும். வடகிழக்கு இணைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோ அல்லது வேறு எந்த முஸ்லிம் கட்சியோ முஸ்லிம் மக்களோ ஒருக்காலும் சம்மதிக்கப் போவதில்லை என்பதை இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகளின் கடந்த கால வரலாற்றினூடாக தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

1983 யூலை இனக்கலவரத்தைத் தொடர்ந்து இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியாவின் தலையீடு ஏற்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனா 1984 ஜனவரியில் சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சி அப்போது உருவாகி இருக்கவில்லை. முஸ்லிம்களின் சார்பாக டாக்டர் எம்.சி.எம்.கலீல் தலைமையில் அகில இலங்கை முஸ்லிம் லீக்கும் (கலீல் யூ.என்.பி யைச் சேர்ந்தவர்) பதியுதீன் மஃமுத் தலைமையிலே அகில இலங்கை முஸ்லிம் கவுன்சில் என்ற அமைப்பும் (பதியுதீன் மஃமுத் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்) பங்குபற்றின. எம்.எச்.எம்.அஸ்ரப் அகில இலங்கை முஸ்லிம் கவுன்சில் உறுப்பினர்களில் ஒருவராகவே சர்வகட்சி மாநாட்டில் பங்கு பற்றினார். தமிழ்த் தரப்பிலே வடகிழக்கு இணைந்த மொழி வாரி மாநில சுயாட்சிக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட வேளை முஸ்லிம் லீக் அப்போது அமுலிலிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபையையே அதிகாரப் பகிர்வு அலகாகக் கோரிநின்றது.

முஸ்லிம் கவுன்சில் இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கும் தனித்தனியான மாகாண சபைகளை அதாவது கிழக்கு மாகாணத்துக்கென தனியான மாகாண சபை ஒன்றினைக் கோரியது. வடகிழக்கு இணைந்த மொழிவாரிமாநில சுயாட்சிக்கு சர்வகட்சி மாநாட்டில் பங்கு பற்றிய எந்த முஸ்லிம் அமைப்பும் ஆதரவாக இருக்கவில்லை. தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை மறுதலிப்பதற்காக எப்போதும் பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளையே பயன்படுத்தி வந்துள்ளன. இச்சர்வகட்சி மாநாடானது எந்த முடிவினையும் எட்டாமலே திடீரென்று ஜனாதிபதி ஜே.ஆரினால் கலைக்கப்பட்டதே வரலாறு.

1981 இல் உருவாகி 1986 இல் எம்.எச்எம். அஸ்ரப் தலைமையில் ஓர் அரசியல் கட்சியாக வெளிப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1988இல் தேர்தல் திணைக்களத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் ஒன்றாகத் தன்னைப் பதிவு செய்து கொண்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்ற ஆரம்ப காலத்தில் இக்கட்சி வடகிழக்கு இணைந்த அதிகாரப் பகிர்வு அலகினையே ஆதரிக்குமாற்போல் கருத்துக்களைத் தெரிவித்தது. பின்னர் அதனில் சிறிது மாற்றம் செய்து வடகிழக்கு வாழ் முஸ்லிம்களின் சமூக பொருளாதார அரசியல் அபிலாசைகளைத் திருப்திப்படுத்தக் கூடிய நிறுவனரீதியான ஏற்பாடுகளை அரசியலமைப்பு ரீதியாக உள்ளடக்கிய வடகிழக்கு இணைப்பை அதாவது வடகிழக்கு இணைப்பை நிபந்தனையுடன் ஆதரிப்பதாகச் ‘சுருதி’யை மாற்றியது. அதன் அடிப்படையில் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரும் பொருட்டு 1989/90 காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவினால் கூட்டப்பெற்ற அரசியல் கட்சிகளின் மாநாட்டுக்கு வெளியேயும் 1991/92 காலப்பகுதியில் மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வெளியேயும் தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கிடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.

இப் பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் ஐக்கிய முன்னணி என்பன கலந்து கொண்டன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் அவர்கள் இப்பேச்சுவார்த்தைகளில் நேரடியாகவே கலந்து கொண்டிருந்தார். இப்பத்தி எழுத்தாளரும் இப் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியிருந்தார். இப்பேச்சு வார்த்தைகளின் போது இணைந்த வடகிழக்கு மாகாண ஆளுகைக்கு உட்பட்டதாக ஒரு முஸ்லிம் உப அலகு ஒன்றினை உருவாக்குவது பற்றியும் இதற்காக வடகிழக்கு மாகாணம் எங்கிலும் இன ரீதியான பிரதேசசபை அலகுகளை ஏற்படுத்துவது பற்றியும் கொள்கையளவில் ஓரளவு இணக்கம் காணப்பட்டிருந்தது.

ஆனால் இப்பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது 1992 இல் மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஈ.என்.டி.எல்.எப். கட்சியின் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியால் நியமிக்கப் பெற்றிருந்த முன்னாள் எம்.பி. திரு ஸ்ரீநிவாசன் வடகிழக்கைப் பிரிக்கின்ற அம்சங்களைக் கொண்டதாக ஓர் அரசியல் யோசனையை அப்போதிருந்த யூ.என்.பி அரசாங்கத்தின் மறைமுகமான ஆதரவுடன் முன்வைத்தபோது சகல தமிழ் அரசியல்கட்சிகளும் ஒருமனதாக அதனை நிராகரித்தன. அப்போது அஸ்ரப் ஸ்ரீநிவாசனின் யோசனைகளுக்கு ஆதரவானதோர் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். இந்த யோசனைகளைச் ஸ்ரீநிவாசனுக்குத் தயாரித்துக் கொடுத்ததே அஸ்ரப்தான் என்ற இரகசியம் பின்னர் கசிந்தது. அஸ்ரப் அப்போது எதிர்க் கட்சியில் இருந்த போதிலும் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா அவர்களுடன் திரைமறைவு உறவைக் கொண்டிருந்தார். மங்கள முனசிங்க தலைமையிலான தெரிவுக்குழுவும் தோல்வியிலேயே முடிந்தது.

மேலும் வடகிழக்கு இணைப்பை நிபந்தனையுடன் ஆதரிப்போம் அல்லது வடகிழக்கு இணைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர் அல்ல என்றவாறான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் அக்கட்சியின் முன்னாள் தலைவரான அஸ்ரப்பினதும் கடந்தகாலக் கூற்றுக்கள் அரசியல் தந்திரம் நிறைந்ததாகும்.

வடகிழக்கு இணைப்பை வெளிப்படையாக எதிர்த்தால் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு எதிரானதாகக் கொள்ளப்பட்டுத் தமிழர்களை விரோதித்துக் கொள்ள வேண்டிவருமே என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு தமிழர்களின் எதிர்ப்பை வெளிப்படையாகப் பெறாத வகையில் அல்லது தமிழர்களின் எதிர்ப்பைத் தந்திரமாகத் தவிர்த்துக் கொள்ளும் முறையிலேதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடகிழக்கு இணைப்புக்கு நிபந்தனையுடன் ஆதரவு என்ற அரசியல் சுலோகத்தை முன்வைத்ததே தவிர அக்கட்சியினதும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் அஸ்ரப்பினதும் உள்ளார்ந்த நோக்கம் வடக்கிலிருந்து கிழக்கைப் பிரிப்பதாகத்தான் இருந்தது.

1994 தேர்தல் வரை இணைந்த வடகிழக்கு மாகாண அலகின் ஆளுகைக்கு உட்பட்டதான ஒரு முஸ்லிம் உப அலகு பற்றியே பிரஸ்தாபித்து வடகிழக்கு இணைப்புக்கு நிபந்தனையுடனான ஆதரவளிப்தாகக் கூறி அதற்கான பேச்சுவார்த்தைகளிலும் தமிழ் அரசியல் கட்சிகளுடன் ஈடுபட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1994 ஆகஸ்ட்டுக்குப் பின்னர் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான நிலையிலும்-அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவராக அஸ்ரப் இருந்த நிலையிலும் 1994 தேர்தலுக்கு முன்னர் தான் கொண்டிருந்த நிலைப்பாடுகள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளுடன் நடாத்தப்பெற்ற பேச்சுவார்த்தைகள் யாவற்றையும் புறந்தள்ளிவிட்டு அதுவரை தான் கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து முற்றாக மாறி 02.04.1995 இல் கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 13வது தேசிய மாநாட்டில் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அலகின் ஆளுகைக்கு உட்படாத தனியான முஸ்லிம் பெரும்பான்மை மாகாணமொன்றினைக் கிழக்கிலே அம்பாறை மாவட்டத்திலே பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை அகிய மூன்று தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பை அடிப்படையாக வைத்து ஏற்படுத்தப்படுவதும் இந்த முஸ்லிம் பெரும்பான்மை மாகாணஅலகின் கீழ் மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களும் கொண்டுவரப்படுவதுமான ‘தென்கிழக்கு’ முஸ்லிம் மாகாணக் கோரிக்கையை முன்வைத்தது.

இந்த யோசனையின் சாதக பாதகங்களை அனுபவிக்கப் போகின்ற அம்பாறை மாவட்டத் தமிழர்களைக் கலந்தாலோசியாமல் தமிழர் விடுதலைக் கூட்டணி தென்கிழக்கு அலகுக் கோரிக்கையை நிபந்தனையின்றி ஆதரித்தது. யாழ்மேலாதிக்க மேட்டுக்குடி அரசியல் குணாம்சம் கொண்ட தமிழர்தம் அரசியல் தலைமையான அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணி கிழக்குத் தமிழர்களைக் குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழர்களைக் கைவிட்ட இன்னுமொரு சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த இரட்டை வேடச் சந்தர்ப்பவாத அரசியல்தான் இன்றும்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வரலாற்று நிகழ்வுகளினூடாக நோக்கும் போது கிழக்கில் முஸ்லிம்கள் மீது தமிழர்கள் குரோதம் கொள்வதற்கும் தமிழர்கள் மீது முஸ்லிம்கள் குரோதம் கொள்வதற்கும் பிரதானமான காரணிகள் தமிழரசுக்கட்சியினதும் பின் தமிழர் விடுதலைக்கூட்டணியினதும் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினதும் மக்கள் நலன் சாராத-அறம் சாராத ‘வாக்குப்பெட்டி’ அரசியலாகும்.

இந்தப் பின்புலத்தில் வடக்கு கிழக்கு இணைப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று நம்பி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹகீமின் தோளில் கைபோடுவது கிழக்குத் தமிழர்களை எதிர்காலத்தில் படுகுழியில் தள்ளுகின்ற அரசியல் மதியீனம் ஆகும். அன்றியும், முன்பு தென்கிழக்கு அலகு (மாகாணம்) கேட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இப்போது வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட பின்னர் தென்கிழக்கு அலகை அடக்கி வாசிப்பது அல்லது அதுபற்றி இப்போது அலட்டிக்கொள்ளாதது ஏனென்று இரா.சம்பந்தன் அவர்களுக்குப் புரியவில்லையா? தாங்கள் கேட்ட தென்கிழக்கு அலகை விட அதனிலும் பெரிதான முழுக்கிழக்கு மாகாணமும் தங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்கின்ற உளவியல்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இது குறித்து மௌனம் சாதிப்பதற்குக் காரணம்.

மேலும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிக் கிழக்கின் முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று உரத்துக் குரல் எழுப்புவதற்குரிய காரணத்தையும் ஆராயலாம்.

தங்களைச் சமூக பெருளாதார அரசியல் ரீதியாக கைதூக்கிவிடக் கூடிய எந்த அரசியல் பெறுபேறுகளையும் தமிழரசுக்கட்சியோ தமிழர் விடுதலைக் கூட்டணியோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ வென்று தரப்போவதில்லை என்பதை அனுபவரீதியாகக் கற்றறிந்துகொண்ட கிழக்குத் தமிழர்கள் ‘அழுதும் பிள்ளை அவளே பெற வேண்டும்’ என்பதற்கிணங்க ஏற்கெனவே இக்கட்சிகளின் பின்னால் கண்ணைமூடிக்கொண்டு சென்றதனால் இழந்தவைகள் போக எஞ்சியிருப்பதையாவது காப்பாற்றித் தங்கள் எதிர்கால இருப்பைத் தக்கவைத்துப் பேணி வளர்த்தெடுப்பதற்கான தனித்துவமான ஓர் அரசியல் பொறிமுறையொன்றை-வியூகத்தை-பாதையை வகுத்துக் கொள்கின்ற முனைப்பு அவர்களிடையே கடந்த ஒருவருட காலமாக மேற்கிளம்பி வருவதை (கிழக்குத் தமிழர் ஒன்றியம் மற்றும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு போன்றவற்றின் உருவாக்கங்களின் மூலம்) மோப்பம் பிடித்துக் கொண்ட கிழக்கின் முஸ்லிம் அரசியல்வாதிகள் எங்கே கிழக்குத் தமிழர்கள் அரசியல் விழிப்புணர்வுற்று அறிவுபூர்வமான அரசியலின்பால் திசைதிரும்பிவிட்டால் முழுக் கிழக்கு மாகாணத்தையும் இஸ்லாமியப்படுத்தும் தங்கள் நீண்டகாலத் திட்டத்துக்குக் குந்தகம் வந்துவிடுமோ என்ற அங்கலாய்ப்பிலேதான் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை குறித்து உரத்து ஓதத் தொடங்கியுள்ளார்களே தவிர அந்த ஒற்றுமைக்கான குரல் அந்தரங்க சுத்தியானதல்ல.

கிழக்கின் முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரசன்னமும் கிழக்குத் தமிழரிடையே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செல்வாக்குப் பெற்றிருப்பதும் அவர்களுக்குத் தேவையான ஒன்றாக உள்ளது. காரணம் கிழக்கில் தாங்கள் மேற்கொள்ளும் தமிழர்களுக்குப் பாரபட்சமான-விரோதமான நடவடிக்கைகளைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ‘பல்லுக்கழற்றிய பாம்பாகப்’ பார்த்துக் கொண்டிருக்கத் தங்கள் நிகழ்ச்சி நிரலை எந்தவிதமானக் குழப்பங்களும் குறுக்கீடுகளுமின்றிக் கொண்டு செல்லலாம் என்பதே. தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக சமூகமாற்ற அரசியலை அவாவுகின்ற ஓர் அரசியல் அணி கிழக்கில் உருவாகிவிடக்கூடாது என்பதுதான் கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் உடனடி எதிர்பார்ப்பு ஆகும்.

இன்று கிழக்கின் களநிலையைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் பௌத்த சிங்கள பேரினவாதத்தின் பிரதிநிதிகளான சிங்கள அரசியல்வாதிகளினால் தங்களுக்கு இழைக்கப்படும் பாரபட்சங்களைவிட முஸ்லிம் அரசியல்வாதிகளால் தங்களுக்கு இழைக்கப்படும் பாரபட்சங்கள் பாரதூரமானவை எனக் கிழக்குத் தமிழர்கள் எண்ணுகிறார்கள். இத்தகைய மனோநிலை ஆரோக்கியமானதல்ல என்பது மட்டுமல்ல ஆபத்தானதுமாகும். இந்த மனோநிலையை அரசியல்வாதிகளால் மாற்ற முடியாது. தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையை அரசியல்வாதிகளினாலும் ஏற்படுத்த முடியாது. சாதாரண தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் வரக்கூடிய மனப்பக்குவத்தினால் மட்டுமே தமிழ்-முஸ்லிம் உறவை ஒட்டவைக்க முடியும். இருபக்கத்திலுமுள்ள கலை இலக்கியவாதிகளும் ஊடகவியலாளர்களும் கல்விமான்களும் ஆன்மீகவாதிகளும் பொதுமக்கள் அமைப்புகளும் அரசியல்வாதிகளைப் புறந்தள்ளிவிட்டு சாமான்ய மக்களை நெறிப்படுத்த வேண்டும்.

உதாரணமாக இன்று கிழக்கிலே எரியும் பிரச்சினையாக மேற்கிளம்பியுள்ள கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை உருவாக்கித் தருவதற்கு கல்முனைத் தமிழர்களின் முப்பது வருட கால இக்கோரிக்கையிலுள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு இதனை மேலும் காலதாமதமின்றி நிறைவேற்றிக் கொடுப்பதற்குக் கல்முனைப் பிரதேச முஸ்லிம் மக்கள் தாமாக முன்வர வேண்டும். முஸ்லிம் மக்களின் நல்லெண்ணத்தைக் காட்டுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும்.

இப்பிரச்சினைக்கான தீர்வு இருதரப்பு அரசியல்வாதிகளினதும் கைகளிலிருந்து விடுபட்டு சாதாரணமக்களிடம் கைமாற வேண்டும். கிழக்கிலே விரிசல் கண்டுள்ள தமிழ்-முஸ்லிம் உறவு மீண்டும் விகசிப்பதற்கு இதைத் தவிர வேறுவழியில்லை.

(முற்றும்)

கிழக்கில் தமிழ்-முஸ்லிம் உறவு: ஓர் அரசியல் வரலாற்று நிலைப் பார்வை 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here