கிழக்கில் தமிழ்-முஸ்லிம் உறவு: ஓர் அரசியல் வரலாற்று நிலைப் பார்வை 1


தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்

அண்மைக் காலமாகக் கிழக்கிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் கிழக்கில் தமிழ்-முஸ்லிம் உறவு பற்றிச் சற்று உரத்து ஓதத் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. நியாயபுத்தி படைத்த எவரும் தமிழ்-முஸ்லிம் உறவின் முக்கியத்துவம் குறித்து எந்த மாற்றுக்கருத்தும் உரைக்கமாட்டார்கள். ஆனால் கிழக்கிலே தமிழ்-முஸ்லிம் உறவு என்பது ஒருவழிப்பாதையல்ல; அது இருவழிப்பாதையாகும். மட்டுமல்ல அத்தகைய உறவு என்பது தமிழ்மக்களுடைய நியாயமான சமூக பொருளாதார அரசியல் அபிலாசைகளுக்கு முஸ்லிம்களும் முஸ்லிம்களின் நியாயமான சமூக பொருளாதார அரசியல் அபிலாசைகளுக்குத் தமிழர்களும் ஆதரவு அளிக்கின்ற ஒரு “இருவழிப்பாதைக்“ கலாசாரத்தைக் கட்டி வளர்ப்பதினூடாகத்தான் மேற்கிளம்ப முடியுமே தவிர சிங்களவர்களுக்கு எதிரான மனோநிலையில் அத்தகைய உறவு ஏற்படுவது ஆரோக்கியமானதல்ல. கிழக்கிலே தமிழ்-முஸ்லிம் உறவு எத்தகைய முக்கியமானதோ அதே போல் தமிழ்-சிங்கள உறவும், முஸ்லிம்-சிங்கள உறவும் மொத்தத்தில் தமிழ்-முஸ்லிம்-சிங்கள முத்தரப்பு உறவும் முக்கியமானவை.

எது எப்படியிருப்பினும் இன்று கிழக்கிலே தமிழ்-முஸ்லிம் உறவு விரிசல் கண்டிருப்பது உண்மை. வரலாற்றில் இந்த விரிசலின் வேர்களைக் கண்டறிவதினூடாகத்தான் தமிழ்-முஸ்லிம் உறவை மீண்டும் ஒட்டவைக்க முடியுமே தவிர வாக்குப்பெட்டி அரசியல்வாதிகளின் எழுந்தமானமான ஊடக அறிக்கைகளினால் அல்ல. எனவே கிழக்கில் தமிழ்-முஸ்லிம் உறவு உடைந்து போன வரலாற்றை கூறுவதும் இக்கட்டுரையின் நோக்கங்களில் ஒன்று. நோயைக் கண்டறிந்தாலே சிகிச்சை அளிக்கலாம்.

போதனாமொழி தமிழைக் கொண்டிருந்த தமிழ் மொழி மூலப் பாடசாலைகளைத் தமிழ்ப்பாடசாலைகள் என்றும் முஸ்லிம் பாடசாலைகள் என்றும் தனித்தனியாக வகைப்படுத்து முன்னர் ஒரே பாடசாலையில் தமிழ் மாணவர்களும் முஸ்லிம் மாணவர்களும் கல்விகற்றுவந்த சூழ்நிலை தமிழ்-முஸ்லிம் உறவுக்கு நீர்ப்பாய்ச்சிக் கொண்டிருந்தது. இதனை இல்லாமல் செய்தவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளே.

1949 இல் இலங்கைத் தமிழரசுக்கட்சி எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) தலைமையில் தோற்றம் பெற்ற பின் “தமிழ்பேசும்மக்கள்“ எனும் வார்த்தைப் பிரயோகத்தினூடாக முஸ்லிம்களையும் தமிழர்களோடு சேர்த்துத் தங்கள் அரசியல் தேவைகளுக்காகத் தமிழர்களாக அடையாளப்படுத்தியமை அக்கட்சி இழைத்த மாபெரும் அரசியல் தவறு ஆகும். முஸ்லிம் அரசியல் தலைவர்களான ரி.பி.ஜயா காலத்திலிருந்து இன்றைய றவூப் ஹக்கீம் காலம் வரை எவருமே முஸ்லிம்களைத் தமிழர்களோடு அடையாளப்படுத்த விரும்பியிருக்காதபோது அவ்விருப்பத்திற்கு மாறாக முஸ்லிம்களை வில்லங்கமாகத் தமிழர்களோடு அடையாளப்படுத்தும் வகையில் “தமிழ்பேசும்மக்கள்“ எனும் அடைமொழியை வைத்துக்கொண்டு அரசியல் செய்யப் புறப்பட்ட தமிழரசுக்கட்சியின் புத்திசாலித்தனமற்ற நடவடிக்கையே வரலாற்றில் தமிழ்-முஸ்லிம் உறவில் விரிசலுக்கு வித்திட்டது. அதனைப் பின்வரும் அரசியல் நிகழ்வுகளுக்கூடாக விளக்கலாம்.

1956 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது கிழக்கில் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இரு மாவட்டங்களும் பொத்துவில், கல்முனை, பட்டிருப்பு, மட்டக்களப்பு, கல்குடா, திருகோணமலை ஆகிய ஆறு தேர்தல் தொகுதிகளுமே நடைமுறையிலிருந்தன. இவற்றில் பொத்துவில் மற்றும் கல்முனை தொகுதிகளிலே முறையே எம்.எம்.முஸ்தபா மற்றும் எம்.எஸ்.காரியப்பர் ஆகியோரைத் தமிழரசுக்கட்சி வேட்பாளர்களாக நிறுத்தி தமிழர்களின் வாக்குகளின் மூலம் அவர்களை வெற்றிபெற வைத்தனர். இவர்கள் தமிழரசுக்கட்சியின் கொள்கைகளை மனதார ஏற்றுக்கொண்டு அல்லது தமிழ்த்தேசியத்தின் பால் உள்ள ஈர்ப்பினால் தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிட்டவர்கள் அல்ல. தேர்தலில் தமிழர்களின் வாக்குகளைப் பெறும் ஒரே நோக்கத்துடன் மட்டும்தான் தமிழரசுக்கட்சியில் இணைந்து போட்டியிட்டார்கள்.

இவர்களில் எம்.எஸ்.காரியப்பர் அவர்கள் 1947இல் நடைபெற்ற இலங்கையின் சோல்பரி அரசியலமைப்பின் கீழான முதலாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் கல்முனைத்தொகுதியில் ஐக்கியதேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டிப் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா அரசில் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கிராம அபிவிருத்தி பிரதி அமைச்சராகப் பதவி வகித்தவர். மட்டுமல்ல, அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்திருந்த ‘பட்டிப்பளை’ ஆற்றுப்படுக்கைப் பிரதேசத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து சிங்களவர்கள் குடியேற்றப்படக் காரணமாயிருந்த ‘கல்லோயா’ நீர்ப்பாசனத் திட்டத்தின் பிரதான கூறாகிய சேனநாயக்கா சமுத்திரத்தை உருவாக்கக் காரணமாயிருந்து இத்திட்ட நிறைவேற்றத்திற்குப் பாரிய பங்களிப்புச் செய்தவருமாவார். இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட எம்.எஸ்.காரியப்பரைத் தேடிப் பிடித்துத்தான் தமிழரசுக்கட்சி 1956இல் கல்முனைத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது.

இத் தேர்தலில் வெற்றிபெற்ற இவர் ஆறு மாதங்களின் பின்னர் பிரதமர் பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி அரசில் இணைந்து பிரதி நீதியமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டு தமிழர்களுக்குப் பாரபட்சமான பல செயற்பாடுகளையும் மேற்கொண்டார். இதற்கு முன்னர் 1952இல் நடைபெற்ற கல்முனை பட்டினசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று அதன் தலைவராகவும் பதவிவகித்து அப்பதவிக் காலத்திலும் கல்முனைப் பிரதேசத் தமிழர்களுக்குப் பாரபட்சமான பல செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தவராவார். தமிழரசுக்கட்சி யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு கட்சியின் சின்னமான வீட்டுக்கே வாக்களிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.

‘தந்தை (செல்வா) சொல் மிக்க மந்திரமில்லை’ என்பதே அரசியலில் தமிழர்களின் தாரக மந்திரமாக இருந்தது.

மேலும்இ 1960இல் எம்.எஸ்.காரியப்பர் “அகில இலங்கை இஸ்லாமிய ஐக்கிய முன்னணி” எனும் அரசியல்கட்சியை நிறுவி 1960 யூலைப் பொதுத்தேர்தலில் கல்முனைத் தொகுதியில் அக்கட்சியில் போட்டியிட்டார். ஆனால் வெற்றிபெறவில்லை. அவர் கட்சி தொடங்கியதும் போட்டியிட்டதும் பிழையென்று கூறமுடியாது. ஆனால் அக்கட்சி வெளியிட்ட கொள்கைப் பிரகடனத்தில்,

“கடந்த பல வருடங்களாக முஸ்லிம்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்து வருகிறார்கள். எனினும் ஒத்திக்குடிசையில் வசிப்பது போன்றும், இரவல் வீட்டில் குடியிருப்பது போன்றும் தமிழர்களின் கட்சி நிழலிலும் சிங்களவர்களின் கட்சி நிழலிலும் வாக்குரிமை(வோட்)களை எடுத்துக் கொண்டு போய், குறித்த கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்ந்து அக்கட்சித் தலைவர்களின் கட்டுப்பாடுகளுக்கு அமைந்தே கடமையாற்றி வந்துள்ளார்கள். இவ்விதம் அரசியல் அநாதைகளாக முஸ்லிம்களுக்கென ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சி இல்லாமையால் அதிகமான அவமானங்களுக்குள்ளாக்கப்பட்டார்கள். அதுமட்டுமா? சிங்களவர்களின் கட்சியிலிருப்போர்களைச் சிங்கள முஸ்லிம்கள் என்றும் தமிழர் கட்சியிலிருப்போர்களைத் தமிழ் முஸ்லிம்கள் என்றும் தமக்குள் வேற்றுமைகள் உண்டாக்கப்பட்டும் பிரித்துவிடும் சூழ்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் நமக்கென ஒரு அரசியல் கட்சி இல்லாதிருந்ததால் தமிழரசுக்கட்சி முஸ்லிம்கள் தங்கள் சாதியில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் மதத்தால் மட்டுமே வேறுபட்டிருக்கின்றோம் என்றும் பொய்ப்பிரச்சாரத்தை நடத்திக்கொண்டு வருகிறார்கள்…”
என்று தொடரும் அறிக்கையின் இறுதிப்பகுதி பின்வருமாறு முடிகிறது.

“…..சிங்களவர்களுக்குச் சிங்கள நாடும் தமிழர்களுக்குத் தமிழ் நாடும் எனப் பிரிவினை ஏற்படின் “இஸ்லாமிஸ்தான்” எனும் முஸ்லிம் இராட்சியம் ஒன்றைப் பிரித்தெடுத்து இங்குவாழ் ஏழு இலட்சம் இஸ்லாமியர்களுக்கு ஒரு தாயகத்தை ஏற்படுத்திக் கொளல்” இது கட்சியின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்டும் இருந்தது.

1956ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் அப்போதைய பொத்துவில் தொகுதியில் தமிழரசுக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற எம்.எம்.முஸ்தபாவும் பின்னர் அரசாங்கக் கட்சிக்கு மாறினார். திருக்கோவில் பிரதேசத்தில் தேர்தல் வெற்றியின் பின் அப்பகுதிக்கு வருகைதந்த எம்.எம்.முஸ்தபாவுக்குக் ‘காசுமாலை’ அணிவித்து வரவேற்ற அப்பிரதேசத் தமிழ்மக்கள் அவர் கட்சி மாறிய பின் அப்பிரதேசத்தில் அவரின் வாகனத்தை மறித்து அவரைப் பலாத்காரமாக இறக்கி அவருக்குச் செருப்புமாலை போட்ட நிகழ்வும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளதை மூத்தோரிடமிருந்து அறிய முடிகிறது. அதைச் சரியென்று நியாயப்படுத்துவது இப்பத்தியின் நோக்கமல்ல. ஆனால் அவர் தமிழரசுக்கட்சியில் வேட்பாளராக நின்று தமிழர்களின் வாக்குகளினால் வெற்றியீட்டிய பின் அரசாங்கக்கட்சிக்குத் தாவியதால் முஸ்லிம்களின் மீது தமிழர்கள் குரோதம் கொள்ளவும் பின்னர் அவரை மறித்துத் தமிழர்கள் அவருக்குச் செருப்புமாலை போட்டதால் தமிழர்கள் மீது முஸ்லிம்கள் குரோதம் கொள்ளவும் ஆன நிலை ஏற்பட்டது. இதற்கு மறைமுகமான காரணியாக இருந்தது தமிழரசுக்கட்சியின் அரசியல் ஆகும்.

இதே போன்று பின்னாளில் 1960 ஜுலை பொதுத்தேர்தலில் அப்போதைய கல்முனைத் தொகுதியில் தமிழரசுக்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழர்களுடைய வாக்குகளால் வெற்றியீட்டிய எம்.சி.அகமட் அவர்களும் பின்னர் எம்.எஸ்.காரியப்பர் மற்றும் எம்.எம்.முஸ்தபா ஆகியோரைப் பின்பற்றி அரசாங்கக் கட்சிக்குத் தாவினார். முஸ்லிம் அரசியல்வாதிகளின் இச் சந்தர்ப்பவாத அரசியல் போக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் மீது தமிழர்களை ஆத்திரம்கொள்ள வைத்தது. கிழக்கிலே தமிழ்-முஸ்லிம் உறவின் விரிசலுக்கு அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியாகவிருந்ததும் பின்னாளில் அம்பாறை மாவட்டமாக உருவானதுமான பிரதேசத்தின் அரசியல் நிகழ்வுகளே அதிகம் பங்களித்தன. அதனைப் பின்வருமாறு விளக்கலாம்.

இலங்கையின் சோல்பரி அரசியலமைப்பின் கீழான முதலாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 1947 ஓகஸ்ட்-செப்டம்பரில் நடைபெற்றது. சோல்பரி ஆணைக்குழுவின் சிபார்சுக்கமையப் பாராளுமன்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக 1946 இல் இலங்கை 89 தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பெற்றன. இத்தேர்தல் தொகுதிகளின் அடிப்படையிலேயே இலங்கையின் முதலாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அப்போது அம்பாறைமாவட்டம் உருவாகி இருக்கவில்லை. தற்போதைய அம்பாறை மாவட்டம் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தினுள் அடங்கியிருந்தது. அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதி துண்டாடப்பெற்று 1962 இல் ‘அம்பாறை’ என்றொரு புதிய மாவட்டம் தனியான நிருவாக மாவட்டமாக உருவாக்கப்படும் வரை தற்போதைய அம்பாறை மாவட்டமும் மட்டக்களப்பு மாவட்டமும் இணைந்த நிலப்பரப்பே முன்னைய ‘மட்டக்களப்பு’ நிருவாக மாவட்டமாக இருந்தது. இதன் எல்லைகள் வடக்கே வெருகல்ஆறு: தெற்கே குமுக்கன்ஆறு: கிழக்கே வங்காள விரிகுடாக்கடல்: மேற்கே வடமத்திய மற்றும் மத்திய ஊவா மாகாண எல்லைக் கோடுகள் ஆகும். மேற்கெல்லையைப் பொதுவாக ஊவா மலைக் குன்றுகள் எனவும் கூறலாம்.

அப்போதைய மட்டக்களப்பு மாவட்டமானது 1947 இல் நடந்த இலங்கையின் பாரளுமன்றப் பொதுத் தேர்தலின் போது கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்முனை, பொத்துவில் ஆகிய ஐந்து தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியிருந்தது. அப்போது அம்பாறை என்றொரு தேர்தல் தொகுதி கூட உருவாகி இருக்கவில்லை.

1947க்கு முன்னர் சட்டசபைக்காலத்தில்(1931-1947) பட்டிருப்பு, கல்முனை, பொத்துவில் தேர்தல்தொகுதிகளை உள்ளடக்கிய முழுநிலப்பபரப்பும் ‘மட்டக்களப்புத் தெற்கு’ என அழைக்கப்பெற்ற தனித்தேர்தல் தொகுதியாக இருந்தது. சட்டசபைக் காலத்தில் ‘மட்டக்களப்புத் தெற்கு’ தேர்தல் தொகுதியை முறையே ஜனாப் எச்.எம்.எம்.மாக்கான் மாக்கார் (1931); எஸ்.ஓ.கனகரட்ணம்1936); எஸ்.தர்மரட்ணம் (1938); வி.என்.நல்லையா(1943) ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
சட்டசபைக் காலத்திலிருந்த இந்த ‘மட்டக்களப்புத் தெற்கு’ தேர்தல்தொகுதியே 1946 தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின் போது பட்டிருப்பு, கல்முனை, பொத்துவில் ஆகிய மூன்று தொகுதிகளாகின. 1947, 1952, 1956 ஆம் ஆண்டின் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்கள் 1946ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின்படி உருவாக்கப்பெற்ற தேர்தல்தொகுதிகளின் அடிப்படையிலேயே நடைபெற்றன. அதன்படி ‘அம்பாறை மாவட்டத் தமிழர்கள்’ என இன்று அடையாளப்படுத்தப் பெறுவோர் அன்று கூடுதலாக வாழ்ந்த அன்றைய (1947-1959) கல்முனை, பொத்துவில் ஆகிய இரு தொகுதிகளையும் பாராளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களே பிரதிநிதித்துவப் படுத்தினர்.

இம்முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் இப்பிரதேசத்தமிழர்களைப் பாரபட்சமாகவே நடத்தினர். இந்த அனுபவத்தினால் எதிர்காலத்தில் இப்பிரதேசத் தமிழர்கள் தங்களுக்கென்று தமிழ்ப்பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஒன்றினை அவாவி நின்றனர். அது அவர்களுடைய நியாயமான அரசியல் அபிலாசையாக நீண்ட காலம் நிலவியது.

1946ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின் போது அப்போதைய மட்டக்களப்புமாவட்டமானது கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்முனை, பொத்துவில் ஆகிய ஐந்து தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பெற்றன என்பதையும், இத்தேர்தல் தொகுதிகளின் அடிப்படையிலேயே 1947, 1952, 1956ஆம் ஆண்டின் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்கள் நடைபெற்றன என்பதையும் இன்று ‘அம்பாறை மாவட்டத் தமிழர்கள்’ என அடையாளப்படுத்தப் பெறுவோர் அன்று பிரதானமாக வாழ்ந்த கல்முனை, பொத்துவில் ஆகிய இரு தேர்தல் தொகுதிகளையும் இம் மூன்று தேர்தல்களிலும் பாராளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களே பிரதிநிதித்துவப்படுத்தினர் என்பதையும் மேலே பார்த்தோம்.

1946ஆம் ஆண்டிற்குப் பின்னர் அடுத்த தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயம் 1959ஆம் ஆண்டு நடைபெறிறது. 1959ஆம் ஆண்டின் தேர்தல்தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின் போது அப்போதைய மட்டக்களப்பு மாவட்டமானது கல்குடா, மட்டக்களப்பு (இரட்டை அங்கத்தவர் தொகுதி), பட்டிருப்பு, அம்பாறை, கல்முனை, நிந்தவூர், பொத்துவில் ஆகிய ஏழு தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பெற்றன.

தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசமான பட்டிப்பளையாற்றுப் பிரதேசத்தில் கல்லோயாத் திட்டத்தின் கீழ் வெளிமாவட்டங்களிலிருந்து குடியேற்றப்பெற்ற சிங்களவர்கள் பல்கிப்பெருகி அவர்களின் நன்மை கருதி அவர்களுக்குப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை எதிர்காலத்தில் வழங்கும் வகையில் சிங்களப் பெரும்பான்மைத் தொகுதியாக ‘அம்பாறை’ எனும் புதிய தேர்தல் தொகுதி உருவாக்கப்பெற்றது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ‘நிந்தவூர்’த் தொகுதியும் புதிதாக உருவாக்கப்பெற்றது.

அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியை அதாவது 1947-1959 வரை அப்போதைய கல்முனை, பொத்துவில் தொகுதிகளை பிரதிநிதித்துவப் படுத்திய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆட்சியில் உள்ளோரிடமிருந்த அரசியல் செல்வாக்கினைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் தங்கள் தேர்தல் வெற்றிகளை உறுதி செய்யும் வகையிலேயும் இப்பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்காத வகையிலேயும் புதிதாக 1959 இல் உருவான கல்முனை, நிந்தவூர், பொத்துவில் தொகுதிகளின் எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்பெற்றன.

அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய தேர்தல் தொகுதிகளை விட நிலப்பரப்பில் கூடியதாக அரசினால் ‘அம்பாறை’ சிங்களப் பெரும்பான்மைத் தொகுதி புதிதாக உருவாக்கப்பெற்ற அதேவேளை புதிய கல்முனை, நிந்தவூர், பொத்துவில் ஆகிய தொகுதிகள் இப்பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகளினால் திட்டமிட்டு முஸ்லிம் பெரும்பான்மையாக வரக்கூடியவாறு எல்லைகள் வகுக்கப்பெற்றன. இத்தொகுதிகள் யாவும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வரக்கூடியவாறு உருவாக்கப்பெற்றமை இப்பிரதேசத் தமிழ்மக்களுக்கு இப்பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகளினால் இழைக்கப்பெற்ற அரசியல் பாரபட்சமாகும்.

1959 தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின் போது மட்டக்களப்பில் தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பெறக் கூடியவாறு புதிய மட்டக்களப்புத் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பெற்றது. அதேபோல் முஸ்லிம் உறுப்பினர் ஒருவரும் தமிழ் உறுப்பினர் ஒருவரும் தெரிவுசெய்யப் பெறக்கூடியவாறு திருகோணமலை மாவட்டத்தில் மூதூர்த்தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பெற்றது. ஆனால் இதே வாய்ப்பு அப்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் வாழ்ந்த தமிழர்களுக்கு அதாவது தற்போதைய அம்பாறைமாவட்டத் தமிழர்களுக்கு வழங்கப்பெறாது அரசியல் ரீதியாகப் புறக்கணிக்கப் பெற்றார்கள். இப்பிரதேசத் தமிழ்மக்களுக்கு எனப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்காத வண்ணம் 1959இல் புதிய பொத்துவில், நிந்தவூர், கல்முனை தேர்தல் தொகுதிகளின் எல்லைகளைத் தங்கள் வசதிக்கேற்றவாறு வகுத்துக் கொள்வதில் இப்பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகள் வெற்றி கண்டனர்.

இதற்குக் காரணம் இப்பிரதேசத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக்கூடியவாறு தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணய யோசனைகளை இப் பிரதேச தமிழ்ப் பிரமுகர்களான முன்னாள் மல்வத்தை கிராம சபைத் தலைவர் காலஞ்சென்ற செல்லத்துரை, கல்முனையைச் சேர்ந்த காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை மாஸ்ரர் ஆகியோர் தமிழரசுக் கட்சியிடமும் தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணய ஆணைக்குழுவிடமும் சமர்ப்பித்திருந்த போதிலும்கூடத் தங்கள் கட்சி அரசியல் நலன்களுக்காகவும் பாராளுமன்ற அரசியல் நலன்களுக்காகவும் இப்பிரதேச முஸ்லிம் அரசில்வாதிகளுடன் முகத்தை முறித்துக் கொள்ள விரும்பாத தமிழரசுக்கட்சி இப்பிரதேசத் தமிழ்ப்பிரமுகர்கள் சமர்ப்பித்த யோசனைகளை ஆதரிக்காது இப்பகுதி முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அனுசரணையாகவே நடந்து கொண்டதுதான். தமிழரசுக்கட்சியின் யாழ்மையவாத அரசியல் குணாம்சமே இதற்கு அடிப்படைக் காரணம்.

1959இல் உருவான புதிய பட்டிருப்பு மற்றும் கல்முனை ஆகிய தொகுதிகளில் எதிர்காலத்தில் தங்கள் தேர்தல் வெற்றிகளை உறுதி செய்யும் நோக்கில் தமிரசுக்கட்சியைச் சேர்ந்த எஸ்.எம்.இராசமாணிக்கம் (முன்னாள் பட்டிருப்பு தொகுதி பா.உ) மற்றும் எம்.எஸ்.காரியப்பர் (முன்னாள் கல்முனைத் தொகுதி பா.உ) ஆகியோர் ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரணையாக நடந்து கொண்டனரே தவிர இப்பிரதேசத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் அக்கறையோடு கவனிக்கப்பெறவில்லை. இதனையிட்டு அப்போது தமிழரசுக்கட்சி அக்கறை செலுத்தாதது இப்பிரதேசத் தமிழ் மக்களுக்கு அதாவது தற்போதைய அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு அக்கட்சி இழைத்த மாபெரும் அரசியல் தவறாகும். இந்தத் தவறினால் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் இலங்கையில் 1947ஆம் ஆண்டிலிருந்து பின்னாளில் 1976ம் ஆண்டின் தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின்போது உருவான புதிய பொத்துவில் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக உருவாக்கப் பெற்று அதன் அடிப்படையில் நடந்த (12.09.1977) பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் பொத்துவில் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராகக் காலஞ்சென்ற ம.கனகரட்ணம் அவர்கள் தெரிவு செய்யப் பெறும் வரை சுமார் 30 ஆண்டுகள் (1947-1977) தங்களுக்கென்று தங்களால் தெரிவு செய்யப் பெற்ற தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கவில்லை.

1959இல் சுமார் 35000 முஸ்லிம்களுக்காக மட்டக்களப்புத் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதி ஆக்கப்பெற்றது. இந்த வாய்ப்பு அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் வாழ்ந்த தற்போதைய அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு சுமார் 45000 தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. சுமார் 45000 சிங்களவர்களுக்கு ஒரு பாராளுமன்றப் பிரிதிநிதித்துவம் அம்பாறை தேர்தல் தொகுதி மூலமும் சுமார் 90000 முஸ்லிம்களுக்கு மூன்று பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கல்முனை, நிந்தவூர், பொத்துவில் ஆகிய தொகுதிகள் மூலமும் கிடைக்கப்பெற சுமார் 45000 தமிழர்கள் அரசியல் பிரதிநிதித்துவம் இன்றி நிராதரவாக விடப்பெற்றார்கள்.

உண்மையில் என்ன நடந்திருக்க வேண்டுமென்றால் 1959ல் உருவான கல்முனை, நிந்தவூர், பொத்துவில் ஆகிய மூன்று தொகுதிகளில் ஒன்றை இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கித் தமிழர்களுக்கு ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்க ஆவன செய்யப்பெற்றிருக்க வேண்டும். அல்லது இப்பிரதேசத்தில் இருந்து தமிழர் ஒருவர் தெரிவுசெய்யப்படக்கூடியவாறு தமிழ்ப் பெரும்பான்மைத் தேர்தல் தொகுதியொன்றுக்கான எல்லைகள் வகுக்கப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் தமிழரசுக்கட்சி இதில் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. தமிழரசுக்கட்சியைப் பொறுத்தவரை இப்பிரதேசத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் முன்னேற்றங்களை விடத் தங்கள் கட்சிக்கெனப் பாராளுமன்றப் பிரதிநிதிகளைப் பெற்றுக்கொள்வதில்தான் அக்கறையாக இருந்தார்கள். மக்கள் நலனை விடக் கட்சி நலனுக்கே முன்னுரிமை அளித்தார்கள். இப்பிரதேசத் தமிழர்களுக்கு இப்பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகளினால் திட்டமிட்டுப் பாரபட்சம் இழைக்கப்பட்ட வேளைகளிலெல்லாம் தமிழரசுக்கட்சி தமது கட்சி நலன்களுக்காகப் பாராமுகமாக நடந்து கொண்டமை இப்பிரதேசத் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் வேதனையுடன் பதிவுசெய்யப் பெற வேண்டிய கசப்பான அனுபவங்களாகும்.

யாழ் மேலாதிக்க வாத மேட்டுக்குடி அரசியல் சிந்தனைகளால் வார்த்தெடுக்கப்பெற்ற தமிழரசுக்கட்சிக்கு கிழக்குமாகாணத் தமிழர்கள் மீது உண்மையான வாஞ்சை கிடையாது. அம்பாறை மாவட்டத் தமிழர்கள் மீது அக்கட்சிக்கு ஆத்மார்த்தமான அக்கறை கிடையாது. அக்கட்சிக்குத் தேவைப்பட்டதெல்லாம் பாராளுமன்றத்தில் தங்கள் கட்சிக்கான ஆசனங்களின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொள்வதற்காக இம் மக்களின் வாக்குகள் மட்டுமே. இன்றும் கூட இதுதான் தொடர்கதையாகத் தொடர்கிறது.

1959ஆம் ஆண்டின் தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின் அடிப்படையில் நடைபெற்ற தேர்தல்கள்.

1976ஆம் ஆண்டின் தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின் அடிப்படையில் நடைபெற்ற தேர்தல்கள்.

குறிப்பு:
1977 ஆம் ஆண்டுத்தேர்தலிலேயே பொத்துவில் இரட்டை அங்கத்தவர் தொகுதியிலிருந்து சுதந்திர இலங்கையில் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் முதன் முதல் பிரதிநிதித்துவம் பெற்றனர். 1947 இலிருந்து 1977 வரை முப்பது வருடங்கள் அவர்கள் அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டிருந்தனர்.

1960 யூலைப் பொதுத் தேர்தலில் கல்முனைத்தொகுதியில் தமிழரசுக்கட்சியில் வென்ற எம்.சி.அகமட்டும் பின்னர் அரசாங்கக்கட்சிக்கு மாறினார். முஸ்லிம் அரசியல்வாதிகளின் இத்தகைய கட்சித் தாவல்களும் பாரபட்சமான பக்கச்சார்பு நடவடிக்கைகளும் அவர்களின் வெற்றிக்கு வாக்களித்த தமிழ்மக்களுக்கு அவர்கள் மீதான வெறுப்பையும் குரோதத்தையும் வளர்த்தன. தமிழரசுக்கட்சியும் தனது கட்சியிலே நிறுத்தப்பெற்ற முஸ்லிம் வேட்பாளர்களுக்குத் தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் ஒரு போலித் தமிழ்-முஸ்லிம் உறவையே கட்டி வளர்த்தது.

காசி ஆனந்தன்

1960 யூலைப் பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலே இரட்டை அங்கத்தவர் தொகுதியான மூதூர் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவான ரி.ஏகாம்பரம் அவர்கள் 23.03.1961 அன்று காலமானார். அப்போது மூதூர்த் தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.மஜீத் விளங்கினார். முஸ்லிம் ஒருவரும் தமிழர் ஒருவரும் வரக்கூடியவாறு உருவாக்கப்பெற்ற மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியில் ஏகாம்பரம் அவர்களின் மரணத்தினால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் (28.06.1962) தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை பற்றி வாய்கிழியப் பேசிய தமிழரசுக்கட்சி தமிழர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தி அவருக்கு முஸ்லிம் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து வெல்லப் பண்ணியிருக்க வேண்டும். தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையை இதன்மூலம் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொண்ட தமிழரசுக்கட்சி எம்.இ.எச்.முகமதுஅலியை இடைத்தேர்தலில் நிறுத்தி மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுமே முஸ்லிம்களாக (அப்துல்மஜீத் மற்றும் முகம்மதுஅலி) இருக்க வழி சமைத்த தமிழரசுக்கட்சி கூறும் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை எங்கே போயிற்று?

பின்னர் 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் இதற்கு முரண்பாடாகத் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதன் பங்காளிக் கட்சியான தமிழரசுக்கட்சியும் நடந்து கொண்டன. தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவரும் வரக்கூடியவாறு வகுக்கப்பெற்றிருந்த இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் தமிழர்விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் செ.இராசதுரை அவர்களையும் தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில் கவிஞர் காசி ஆனந்தனையும் அதாவது இரு தமிழ் வேட்பாளர்களை நிறுத்தியதன் மூலம் தமிழரசுக்கட்சி முஸ்லிம்களின் நல்லெண்ணத்தை இழந்தது.

முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தைப் பறித்ததெடுப்பதற்காகவா தமிழரசுக்கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் சேர்ந்து இரு தமிழ் வேட்பாளர்களை நிறுத்தியது. தமிழரசுக்கட்சியின் இத்தகைய சந்தர்ப்பவாத அரசியலே கிழக்கில் தமிழ்-முஸ்லிம் உறவின் விரிசலுக்கு உரம் இட்டது.

(தொடரும்)

(இக்கட்டுரை 21.04.2019 இல் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் எழுதப்பெற்றதாகும்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here