உங்கள் சந்தேகங்களை தீர்த்து வைக்கிறார் டாக்டர் ஞானப்பழம்!

தமிழ்பக்கம் வாசகர்களை வாராந்தம் இனி சந்திக்கவிருக்கிறார் டாக்டர் ஞானப்பழம்.

மேலேயுள்ள படத்தை பார்த்து விட்டு- பலான சந்தேகங்களை கேட்கச் சொல்கிறார்களே என யோசித்து- கலவையான உணர்வுகள் ஏற்படுமென்பது எமக்கு தெரியும்.

ஒரு பகுதியினர் திடீர் கலாசார காவலர்களாக உருமாறி, அறக்கத்தியை சுழற்ற ஆரம்பிப்பார்கள். நான்கு சுவருக்குள், இருட்டுக்குள் நடக்க வேண்டிய சங்கதிகளை இப்படி பகிரங்கமாக கடை விரித்தா கொட்டுவது என காலங்காலமாக கேட்கும் கேள்வியை கேட்பார்கள். அதற்கு காலங்காலமாக சொல்லப்படும் பதிலையே நாமும் சொல்ல முடியும்.

ஆனால், கூடுதலாக இன்னும் சில விசயங்களையும் சொல்லி வைக்கிறோம். இணைய உலகத்தில் உலாவும் எல்லோருமே, மிகுந்த பொறுப்புணர்வுள்ளவர்களாக கருதிக் கொள்வார்கள். அவர்கள் கருதும் பொறுப்புணர்வை விட எந்த விதத்திலும் தமிழ்பக்கத்தின் சமூகப்பொறுப்புணர்வு குறைந்ததல்ல என்பதை அது செயலில் காண்பித்து வருகிறது. அதனால் எது எல்லை, எதை பேச வேண்டும் என்பது தமிழ்பக்கத்திற்கு தெரியும்.

அதையெல்லாம் விட முக்கியமானது, நமது சமூகத்தில் அவசியமென தெரிந்தும், எப்படி ஆரம்பிப்பதென தெரியாமல் திண்டாடும் பாலியல் கல்வி குறித்த ஒரு விழிப்புணர்வையும் இது ஏற்படுத்தும். குழந்தைகளிற்கு தமது உடல் ஒரு புதிராகவும், உடல் தேவைகளும் மாற்றங்களும் மர்மமானவையாகவும், வெட்கம் மற்றும் அவமானமானவையாகவும் பேணப்படும் வரை நமது சமூகத்தில் பெண் உடலுக்கு எதிரான வன்முறையும், இதர பல்வேறு பாதிப்புக்களும் நீடித்தபடியிருக்கும்.

உடல் ஒரு புதிராக இருக்கும் சமூகங்களிலேயே நீலப்படங்களின் புழக்கம் அதிகமாக உள்ளதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நீலப்படம் அதிகமாக பார்க்கும் மனிதர்கள் உடல் மற்றும் உளரீதியாக எதிர்கொள்ளும் பாதிப்புக்களை நாம் தனியாக இங்கு பட்டியல்படுத்த தேவையில்லை.

குழந்தைகளிலேயே பேசாப்பொருளாக பாலியல் விவகாரங்களை கற்பிதம் செய்வதால், வளர்ந்து, மரணிக்கும்வரை அந்த மனநிலையிலேயே பலரும் வாழ்கிறார்கள். இந்த மனநிலைதான், பாலியல் நோய்த்தாக்கங்களிற்கும், அதற்கு சிகிச்சை பெற தாமதிப்பதற்கும் காரணமென்கிறார்கள் வைத்தியர்கள்.

பேசாப்பொருளை பேச முடியாமல் வளர்ந்த தலைமுறை, தமது சந்தேகங்கள், குழப்பங்களுடன் இன்னும் இருக்கிறார்கள். பலர் தீராத சந்தேகங்களுடனேயே இளமையையும், வாழ்க்கையையும் கடந்து விடுகிறார்கள். இதற்கான ஒரு சிறிய தீர்வாக- இந்த சமூகத்தின் மீதான பொறுப்புணர்வுடன்- இந்த பகுதி ஆரம்பிக்கப்படுகிறது.

வாராந்தம் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பகுதி வெளியாகும். உங்கள் சந்தேகங்களை pagetamilmedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 076672221 என்ற வட்ஸ்அப், வைபர் இலக்கத்திற்கோ அனுப்பி வைக்கலாம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here