போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐந்தில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு: ஐ.நா புதிய ஆய்வில் தகவல்

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐந்து பேரில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நாவின் அண்மைய தகவல் தெரிவிக்கின்றது.

லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு வெளியாகும் The Lancet என்ற மருத்துவ இதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது.

போர், மருத்துவ நெருக்கடி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஐந்தில் ஒருவர் மனஅழுத்தம், மனப்பதற்றம், இருதுருவ மனப்பிறழ்வு, மனச்சிதைவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் மனநல பாதிப்பு மற்றும் போதைவஸ்துகள் பாதிப்பு தடுப்புப் பிரிவில் (Department of Mental Health and Substance Abuse) பணியாற்றும் மார்க் வேன் ஓம்மர்மேன் இந்த ஆய்வை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இவருடன் ஒரு குழுவும் இந்த ஆய்வில் பணியாற்றியுள்ளது.

புதிய ஆய்வின் முடிவுகள் ஏற்கெனவே மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமலில் உள்ள நடைமுறைகளுக்கு வலு சேர்ப்பதாக அமைந்திருப்பதாக ஓம்மர்மேன் தெரிவித்திருக்கிறார்.

இதனால், போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதியிலோ இல்லை வேறு இயற்கை நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலோ மனச்சோர்வு உள்ளிட்ட மனநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சமூக மனநல பாதுகாப்பு உதவிகளை செய்ய இயலும் என ஓம்மர்மேன் கூறுகிறார்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் வேறு சில நெருக்கடி காலங்களில், உலக சுகாதார அமைப்பு, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மனநலன் சார்ந்த உதவிகளை மதிப்பிட்டு ஒருங்கிணைக்கிறது. ஏற்கெனவே களத்தில் இருக்கும் உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதில் கிடைப்பதை உறுதி செய்கிறது. சிற்சில மனநல பயிற்சி மூலமாக உதவி செய்கிறது. இப்போதைய ஆய்வு முடிவுகள் இந்த உதவிகளை மேலும் வலுசேர்ப்பதாக அமைந்திருக்கிறது.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மொத்த மக்கள் தொகையில் 9% பேர் சாதாரணமான அழுத்தம் முதல் தீவிர மன அழுத்தத்துக்கு ஆளாவதாக அந்த அறிக்கை கூறுகிறது. இது உலகளவில் சாதாரணமான சூழலில் வசிக்கும் மக்கள் மனநோய்களுக்கு ஆளாவதைவிட மிக மிக அதிகம் எனக் கூறப்படுகிறது.

அதேபோல் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனஅழுத்தம் மற்றும் மனப்பதற்றம் போன்ற பாதிப்புகள் வயதுக்கேற்ப வித்தியாசப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. வயது ஏற ஏற பாதிப்பும் அதிகமாக இருக்கிறது எனத் தெரிவிக்கிறது. அதேபோல் மனஅழுத்தம் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிவதாகவும் கூறுகிறது.

இந்த ஆய்வுக்காக ஓம்மர்மேன் 1980 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட போர், இயற்கை பேரிடர்கள், மருத்துவ அவசரநிலை ஆகியவற்றை கணக்கில் கொண்டுள்ளார்.

39 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அண்மையில் ஆபிரிக்காவில் எபோலா நோய் தொற்று ஏற்பட்டபோது எந்த மாதிரியான மனஅழுத்தம் மக்கள் மத்தியில் ஏற்பட்டது என்பதுவரை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் முக்கிய ஆய்வாளரான அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஃபியோனா சார்ல்சன் கூறும்போது, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எந்த மாதிரியான மனநோய்கள் தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பது குறித்து எங்களது இந்த புதிய ஆய்வறிக்கை துல்லியமான தகவல்களைப் பிரதிபலிக்கிறது என தான் நம்புவதாகக் கூறியுள்ளார். இதற்கு முந்தைய ஆய்வறிக்கைகளில் இப்பகுதிகளில் ஏற்படும் மனபாதிப்புகளை குறைத்து மதிப்பிட்டிருப்பதாகவும் தங்களது அறிக்கையே தீவிர அழுத்தமே அதிகமாக இருக்கிறதி என்பதை வெளிப்படுத்துவதாகவும் ஃபியோனா குறிப்பிட்டிருக்கிறார்.

2016ல் உலகம் முழுவதும் 37 நாடுகளில் பல்வேறுவிதமான போர், உள்நாட்டு கலவரங்கள், கிளர்ச்சிகள், தீவிரவாதம் போன்ற பாதிப்புகள் இருந்தன. அப்படியென்றால் 12% மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்தனர் என்று அர்த்தம். இவர்களில் சர்வதேச அளவில் 69 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக வேறு இடங்களுக்கு புலம்பெயர செய்யப்பட்டுள்ளார்கள்.

இறுதியாக ஆராய்ச்சியாளர் ஓம்மர்மேன், என்னதான் மோசமான சூழல் ஒரு போர் பிரதேசத்தில் இருந்தாலும் அங்கு அரசியல் ரீதியான உதவிகள் இருந்தால் மக்களின் மன அழுத்தத்தை போக்க சர்வதேச அமைப்புகளால் சிறப்பாக இயங்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here