அவுஸ்திரேலியா- பாகிஸ்தான் பலப்பரீட்சை!

உலகக் கிண்ண கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. டான்டன் நகரில் இந்த ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.

பாகிஸ்தான் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியைப் பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் இரத்தானது. 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது அந்த அணி. இதனால் அவுஸ்திரேலியாவுடனான இந்த ஆட்டம் பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானது.

எனவே பாகிஸ்தானின் பகர் ஸமான், இமாம் உல் ஹக், பாபர் ஆசம், ஷோயிப் மலிக், கப்டன் சர்பிராஸ் ஆகியோர் இந்த ஆட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

அதேபோல் பந்துவீச்சில் ஆமிர், வஹாப் ரியாஸ், அப்ரிடி, ஹசன் அலி ஆகியோர் எதிரணி வீரர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கக்கூடும்.

அதே நேரத்தில் பாகிஸ்தானை விட பலமான அணியாக அவுஸ்திரேலியா உள்ளது. இதுவரை அவுஸ்திரேலியா 3 ஆட்டங்களில் விளையாடி 2ல் வெற்றியும், ஒரு தோல்வியும் பெற்று 4 புள்ளிகளை வைத்துள்ளது.

இந்தியாவுடனான கடைசி ஆட்டத்தில் தோல்வி கண்டபோதும் வெற்றி இலக்குக்கு அருகே அவுஸ்திரேலிய வீரர்கள் வந்தனர். அந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றிருந்தால், அவுஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்கக்கூடும்.

கப்டன் பின்ச், வோர்னர், கவாஜா, ஸ்மித், மக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், கேரே ஆகியோர் அபாரமாக விளையாடி வருகின்றனர். அவர்களிடமிருந்து மேலும் ஒரு அபார இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

தொடக்க ஆட்டக்காரர் வோர்னரிடமிருந்து அதிரடியான ஆட்டம் வெளிப்படக் கூடும் என்று தெரிகிறது. பந்துவீச்சில் ஸ்டார்க், கவுல்ட்டர் நைல், ஸம்பா, கம்மின்ஸ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

இந்த ஆட்டம் அவுஸ்திரேலியாவுக்கும் முக்கியமான ஆட்டமாகக் கருதப்படு கிறது.

அணிகள் விவரம்

அவுஸ்திரேலியா

ஆரோன் பின்ச் (கப்டன்), டேவிட் வோர்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், ஷோன் மார்ஷ், கிளென் மக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரே, கேன் ரிச்சர்ட்சன், பட் கம்மின்ஸ், நதன் கவுல்ட்டர் நைல், மிட்செல் ஸ்டார்க், ஜேசன் பெஹரன்டார்ப், அடம் ஸம்பா, நதன் லயன்.

பாகிஸ்தான்

பகர் ஸமான், இமாம் உல் ஹக், பாபர் ஆசம், ஆசிப் அலி, ஷோயிப் மாலிக், முகமது ஹபீஸ், ஹரிஸ் சோஹைல், ஷதாப் கான், இமாத் வாசிம், சர்பிராஸ் அகமது (கப்டன்), ஷாஹீன் அப்ரிடி, ஹசன் அலி, முகமது ஹஸ்னைன், வஹாப் ரியாஸ், மொகமது ஆமிர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here