கருணாகுழு கொன்று புதைத்த பொலிஸ்காரரின் உடல் மீட்கப்படவில்லை!

மட்டக்களப்பில் கருணா குழு ஆயுததாரிகளால் கடத்திக் கொல்லப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் உடல் இன்று மீட்கப்படவில்லை.

கடந்த 2008 ம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்த நிலையில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தனது இறுதி நாள் கடமையினை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியில் சென்றிருந்த நிலையிலேயே இவர் காணாமல் போயிருந்தார்.

அவர் தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கருணா குழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிளன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன், மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை ஓட்டமாவடி, களுவாஞ்சிக்குடி, கல்லடி ஆகிய இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம் சிஜடி யினர் கைது செய்தனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனையில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக தெரியவந்தது.

இதனையடுத்து சடலத்தை தோண்டி எடுப்பதற்கு சிஜடி உபபொலிஸ் பரிசோதகர் என்.நவரெட்ண மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை (23) அனுமதி கோரியிருந்தார்.

இதனையடுத்து சடலத்தை இன்று 11 ஆம் திகதி மட்டக்கப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த கொலை தொடர்பில் குற்றவாளிகளாக 7 பேர் இனங்காணப்பட்டுள்னர். இதில் கபிலன் எனப்படும் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். இனியபாரதி மற்றும் சின்னத்தம்பி ஆகிய இருவரும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளனர். எஞ்சிய நால்வரில் ஒருவரான மகிழன் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக தோண்டப்படும் இடத்திற்கு இன்று தயானந்தன், மதன், லிங்கன் ஆகியோர் அழைத்து வரப்பட்டனர்.

11 வருட மர்மம் விலகியது: தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொன்றது கருணா குழுவே: மூவர் கைது

மயானத்தின் இரண்டு இடங்களில் அகழ்வு பணிகள் நடந்தபோதும், உடல் மீட்கப்படவில்லை. நாளையும் அகழ்வுப்பணிகள் நடக்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here