கட்சித் தலைவர்கள்தான் இப்போதுள்ளனர்: சிறந்த தலைவர் நாட்டிலில்லை!

ஜக்கிய தேசிய கட்சிக்கு அந்த கட்சியை நேசிக்கும் தலைவர் இருக்கின்றார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அதனை முன்னேற்றுவதற்கு ஒரு தலைவர் இருக்கின்றார். அதேபோல ஏனைய எல்லா கட்சிகளுக்கும் அந்த கட்சியை நேசிக்கின்ற தலைவர்கள் இருக்கின்றார்கள்.

ஆனால் இந்த நாட்டை நேசிக்கின்ற, இந்த நாட்டைப்பற்றி சிந்திக்கின்ற ஒரு தலைவன் இல்லை. எனவே அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்த நாட்டை நேசிக்கின்ற இந்த நாட்டைப்பற்றி சிந்திக்கின்ற ஒரு தலைவன் தெரிவு செய்யப்பட வேண்டும். அதற்காக இந்த மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று (11) காலை கொட்டகலையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கின்ற பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டிற்கு அண்மைக்காலங்களில் இந்த நாட்டைப்பற்றி சிந்திக்கின்ற இந்த நாட்டை நேசிக்கின்ற ஒரு தலைவர் உருவாகவில்லை. சுதந்திரத்தின பின்பு பல தலைவர்கள் உருவானார்கள். ஆனால் மறைந்த முன்னால் ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாசவிற்கு பின்பு அப்படி ஒரு தலைவர் உருவாகவில்லை. அவர் இந்த நாட்டைப்பற்றி சிந்தித்ததோடு இந்த நாட்டையும் நேசித்தார். அதே நேரத்தில் கீழ்மட்ட மக்களின் வாழ்வை உயர்த்துவதற்கு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். ஆனால் அவருக்கு பின்பு அப்படி ஒரு தலைவர் உருவாகவில்லை. எனவே அடுத்த நடைபெறவுள்ள தேர்தலில் ஒரு சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு இந்த மக்களிடம் இருக்கின்றது.

அதே நேரத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு தின சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தெரிவுக்குழு தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் இந்த குழு தொடர்பாக சந்தேகம் எழுப்பியிருக்கின்றார். எனவே இந்த தெரிவுக்குழு விசாரணைகளை முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இல்லாவிட்டால் இந்த தெரிவுக்குழு தொடர்பாக மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். எனவே இந்த தெரிவுக்குழுவின் விசாரணைகள் தடையின்றி முன்னெடுக்க வேண்டும்.

மீண்டும் இந்த நாட்டில் ஜனாதிபதி பிரதமருக்கு இடையிலான ஒரு முறுகல் நிலை ஏற்பட்டிருப்பதை உணர முடிகின்றது. இது ஆரோக்கியமான ஒரு செயற்பாடு அல்ல. இதனை முடிவிற்கு கொண்டு வந்து இருவரும் இணைந்து செயற்படுவதற்கு முன்வர வேண்டும் .இல்லாவிட்டால் மீண்டும் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here