காரைநகர் அம்மாச்சி உணவக வழக்கு: பிரதம செயலரை விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!


பெண் குடும்பத் தலைவர்களை கொண்ட குடும்பங்களிற்கும், போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாகாண நிதியில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகத்தை, தனியார் நிறுவனமொன்றிடம் வழங்கலாமா என்பது தொடர்பில் வடமாகாண பிரதம செயலர் விளக்கமளிக்க வேண்டுமென ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன், காரைநகர் பிரதேச செயலக பிரிவில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களின் விபரங்களை சமர்ப்பிக்கும்படி பிரதேச செயலருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், மக்களின் வாழ்வாதார திட்டங்களில் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென காரைநகர் பிரதேசசபை தலைவர், செயலாளரை கடுமையாக எச்சரித்தது.

காரைநகர் அம்மாச்சி உணவகத்தை தனியார் ஹொட்டல் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டது தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மாகாணசபை நிதியில் காரைநகர் கசூரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகத்தை, காரைநகரில் குடிதண்ணீர் விநியோகம் செய்பவரிற்கு ஒப்பந்த அடிப்படையில் காரைநகர் பிரதேசசபை வழங்கியது. இதற்கு உறுப்பினர்களின்  முழுமையான சம்மதம் இருக்கவில்லை. பின்னர், அந்த குடிதண்ணீர் விநியோகத்தர் யாழ் நகரிலுள்ள ஹொசி உணவகத்திடம் அந்த கடையை வழங்கியதாக கூறப்படுகிறது.

போரால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக உருவாக்கப்பட்ட அ்மாச்சி உணவகத்தை, காரைநகர் பிரதேசசபை எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் தனியாரிடம் வழங்கியது. இது தொடர்பாக காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் கவனம் செலுத்தி, சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது, உரிய அனுமதியில்லாமலும், உரிய சுகாதார விதிமுறைகளிற்கு உட்படாமலும் உணவகம் இயங்கியது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, யாழ் நகரிலுள்ள ஹொசி ஹொட்டல் அன்ட் ரெஸ்ரோரண்ட் சார்பில் சட்டத்தரணி சர்மினி பிரதீபன் முன்னிலையாகினார். சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இந்த விடயத்தில் தலையிட முடியாதென்றும், சுகாதார வைத்திய அதிகாரிகளிற்கு வேலை வழக்குகளை போட்டுக் கொண்டிருப்பதுதான் என்றும், காரைநகரில் இயங்கியது ஹொசி  ரெஸ்ரோரண்ட் மட்டுமே, இதற்கும் தமக்கும் தொடர்பில்லையென்றார்.

எனினும், அங்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் ஆய்விற்கு சென்றபோது, நகரிலுள்ள ஹொசி ஹொட்டல் அன்ட் ரெஸ்ரோரண்ட் உரிமையாளரும் அங்கு இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிவான், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் இதில் தலையிட எந்த தடங்கலும் இல்லையென குறிப்பிட்டது. அத்துடன், உணவன உரிமையாளரை வழக்கிலிருந்து விடுவித்தது.

காரைநகர் பிரதேசத்தில் உணவகத்தில் பணியாற்ற பெண் தலைமைத்துவ குடும்பங்களை கண்டறிய முடியவில்லை, பணியாற்ற யாரும் தயாராக இல்லையென பிரதேசசபை தலைவர் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, காரைநகரிலுள்ள பெண் தலைமைத்துவ, பேரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விபரங்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கும்படி பிரதேசசெயலரிற்கு உத்தரவிட்டப்பட்டது.

அத்துடன், பெண் குடும்பத் தலைவர்களை கொண்ட குடும்பங்களிற்கும், போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாகாண நிதியில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகத்தை, தனியார் நிறுவனமொன்றிடம் வழங்கலாமா என்பது தொடர்பில் வடமாகாண பிரதம செயலர் விளக்கமளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டப்பட்டது.

காரைநபர் உணவகத்தில் உரிமம் பெறாத யாரும் பணியாற்றினால் உடனடியாக கைது செய்யலாமென சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

வழக்கு யூலை 2ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here