இலங்கை- பங்களாதேஷ் பலப்பரீட்சை: இன்றும் மழை விளையாடலாம்!

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் – இலங்கை அணிகள் மோதுகின்றன.

13வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பிரிஸ்டலில் நடைபெறும் 16வது லீக் ஆட்டம் இது.

மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 21 ரன் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தியது. பின்னர் நடந்த ஆட்டங்களில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடமும், 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடமும் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் ஷகிப் அல் ஹசனை தவிர யாரும் சிறப்பாக செயல்படவில்லை. அவர் தற்போது காயமடைந்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடுவாரா என்பது இதுவரை உறுதியாகவில்லை. அந்த அணியின் பந்து வீச்சும் எதிர்பார்த்தபடி அமையவில்லை. அடுத்தடுத்து சந்தித்த தோல்விகளில் இருந்து மீண்டு வர வேண்டிய நெருக்கடி அந்த அணிக்கு இருக்கிறது.

திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் மோசமான தோல்வியை சந்தித்தது. மழையால் பாதிக்கப்பட்ட 2வது ஆட்டத்தில் 34 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இலங்கை அணியின் துடுப்பாட்ட இலட்சணம் ஊர் அறிந்தது. அதைப்பற்றி விசேடமாக சொல்லத் தேவையில்லை. கருணாரத்ன, குசல் பெரேராதான் இதுவரை அணியின் ஸ்கோரை காப்பாற்றி வந்திருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் ஆட முடியாதது இலங்கை அணிக்கு பின்னடைவே.

மொத்தத்தில் சொதப்பலில் சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷகிப் அல் ஹசன் இன்று ஆடி 23 ஓட்டங்களை பெற்றால் ஒருநாள் அரங்கில் 6000 ஓட்டங்களை எட்டுவார். லசித் மலிங்க, உலகக்கிண்ண போட்டிகளில் 50 விக்கெட் மைல்கல்லை எட்ட இன்னும் 4 விக்கெட்டுக்கள் தேவை. 3 விக்கெட் வீழ்த்தினால், சமிந்தவாஸின் 49 விக்கெட்டை சமப்படுத்துவார்.

பிரிஸ்டலில் இன்று மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போட்டி மழையால் பாதிக்கப்படலாம். பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இலங்கை: கருணாரத்ன (கப்டன்), குசல் பெரேரா, திரிமன்ன, குசல் மென்டிஸ், மத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா (அல்லது மிலிந்த சிறிவர்த்தன), திசரா பெரேரா, இசுரு உதனா, சுரங்கா லக்மல், மலிங்க, அவிஷ்க பெர்னாண்டோ.

பங்களாதேஷ்: தமிம் இக்பால், சவுமியா சர்கார், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன், மக்முதுல்லா, மொசாடெக் ஹூசைன், முகமது சைபுதீன், மெஹிதி ஹசன், மோர்தசா (கப்டன்), முஸ்தாபிஜூர் ரகுமான்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here