கன்னியாவை பிரதேசசபையிடம் வழங்க பௌத்த பிக்குகள் எதிர்ப்பு: உப்புவெளி பிரதேசசபை குப்பையாம்!

திருகோணமலை கன்னியாவிலுள்ள சைவ வழிபாட்டிடங்களை தொல்லியல் திணைக்களமும், பௌத்த துறவிகளும் உரிமைகோருவது தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று காலை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர் மனோகனேசனின் இந்த கூட்டத்திற்கான ஆலோசனையை வழங்கியிருந்தார். அதன்படி, திருகோணமலை மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர் மனோ கணேசன், வேலுகுமார் எம்.பி, சீ.யோகேஸ்வரன் எம்.பி, மற்றும் பிரதேச செயலர்கள், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர், திருகோணமலை நகரசபை, உப்புவெளி பிரதேசசபை தலைவர்கள், வெல்கம் விகாரை பிக்குகள் கலந்து கொண்டனர்.

பிரதேச சைவ மக்களின் வழிபாட்டிடங்களிற்கு தொல்பொருள் திணைக்களம் இடையூறு விளைவிக்கக்கூடாது என மக்கள் பிரதிநிதிகள் கூட்டாக கோரிக்கை வைத்தனர்.

எனினும், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர், “தொல்பொருள் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட இடத்தில் கட்டுமானங்கள் செய்ய முடியாது“ என்றார். இதன்போது குறுக்கிட்ட யோகேஸ்வரன் எம்.பி, “தொல்பொருள் சட்டங்கள் தனியே தமிழர்களிற்கா? தமிழர்கள் மட்டும்தான் கட்டடம் அமைக்க முடியாதா?“ என்றார். தொல்பொருள் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரும் கன்னியாவில் எப்படி பௌத்த விகாரை அமைக்கப்பட்டது என கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளிக்க முடியாமல் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மௌனமாக உட்கார்ந்திருந்தார்.

இதன்போது பௌத்த பிக்குகள் தலையிட்டு கருத்து தெரிவித்தனர். எனினும், விகாரை இல்லாத இடத்திலேயே நீங்கள் விகாரை அமைத்தீர்கள் என யோகேஸ்வரன் எம்.பி சுட்டிக்காட்டினார்.

கன்னியா சைவ ஆலயம் உள்ளிட்ட பகுதிகளை உப்புவெளி பிரதேசசபையிடம் கையளிக்க வேண்டுமென, மக்கள் பிரதிநிதிகள் கூட்டாக கோரிக்கை வைத்தனர். இதன்போது, குறுப்பிட்ட பிக்குகள், உப்புவெளி பிரதேசசபையிடம் கையளிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். உப்புவெளி பிரதேசசபை தனது பிரதேச பகுதிகளையே குப்பையாக வைத்திருக்கிறது, கன்னியாவை கொடுத்தால் சரியாக பராமரிக்காது என்றார்கள். அந்த இடம் தமது கட்டுப்பாட்டை விட்டு நழுவக்கூடாது என்பதில் பௌத்த பிக்குகள் குறியாக இருந்தனர்.

இறுதியாக, கன்னியா, மற்றும் நீராவிப்பிட்டி விவகாரங்களை ஆராய கொழும்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை இணைத்த உயர்மட்ட கூட்டமொன்றை கூட்டுவதென முடிவானது. இதன்போது, கூட்டமைப்பின் எம்.பி யோகேஸ்வரன் ஒரு கோரிக்கையை வைத்தார். கொழும்பு உயர்மட்ட கூட்டத்தில் பௌத்த பிக்குகளை அழைக்க வேண்டாம் என. இந்த விவகாரம் அரச நிர்வாக மட்டத்தில் பேசி முடிவெடுக்க வேண்டியது. எதற்காக பௌத்த பிக்குகளை அழைக்கிறீர்கள் என்றார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here