11 வருட மர்மம் விலகியது: தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொன்றது கருணா குழுவே: மூவர் கைது

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காணாமல் போன விவகாரத்தில்,  கருணா குழுவின் உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தரை கடத்திச் சென்று அவர்கள் கொலை செய்தது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. மயானமொன்றில் சடலத்தை புதைத்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை நாளை (11) தோண்டி எடுத்து இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த பிரசன்னா என்ற பொலிஸ் உத்தியோகத்தர், கடமை முடிந்து பொலிஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பினார். எனினும், அவர் வீட்டுக்கு சென்று சேரவில்லை. அவர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.  அவர் காணாமல் போனது மர்மமாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில், கருணா குழுவின் உறுப்பினர்களான மகிளன் என்று அழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன், மதன், என்று அழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன் என்று அழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை சந்தேகத்தில் ஓட்டுமாவடி, களுவாஞ்சிக்குடி, கல்லடி, போன்ற இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம் குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை, முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு பிரிவினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து குறித்த சடலத்தை தோண்டி எடுப்பதற்கு குற்றப் புலனாய்வு பிரிவினர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வியாழைக்கிழமை (23) அனுமதி கோரியிருந்தார்.

இதனை அடுத்து சடலத்தை நாளை 11 ஆம் திகதி நீதவான் முன்னிலையில் தோண்டி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்ப நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

இதன் பிரகாரம் நாளை 11 ஆம் திகதி குறித்த மயானத்தில் சடலத்தை நீதவான் முன்னிலையில் தோண்டி எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here