ரஷ்ய ஏவுகணையா, எமது விமானமா?: துருக்கிக்கு திடீர் நிபந்தனை விதித்த அமெரிக்கா!

ரஷ்ய ஏவுகணை வேண்டுமா, எமது விமானங்கள் வேண்டுமா என்பதை ஒரு மாதத்திற்குள் முடிவெடுங்கள் என துருக்கிக்கு திடீர் நிபந்தனை விதித்துள்ளது அமெரிக்கா.

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பட்ரிக் ஷனகன், துருக்கி பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹூலுசி அகாருக்கு எழுதிய கடிதத்தில் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

“அமெரிக்காவின் அதிநவீன எப்-35 போர் விமானங்களையும், ரஷ்யாவின் எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளையும் துருக்கி ஒரு சேரப்பெற முடியாது. இந்த இரண்டில் துருக்கிக்கு எது வேண்டும் என்பதை ஜூலை மாதத்துக்குள் நீங்கள் முடிவு செய்ய வேண்டும்” என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த திடீர் நிபந்தனை துருக்கியை இக்கட்டுக்குள் சிக்க வைத்துள்ளது.

நேட்டோ நேச நாடுகளான அமெரிக்காவும், துருக்கியும் ரஷ்யாவின் எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு பிரச்சினையில் ஏற்கனவே சிக்கலுக்கு ஆளாகி உள்ளன.

ரஷ்யாவின் எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு, நேட்டோ பாதுகாப்பு அமைப்பு முறைகளுக்கு எதிரானது, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று அமெரிக்கா கூறுகிறது. எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புக்கு பதிலாக தனது நாட்டின் பேட்ரியாட் போர் விமான ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு முறையை வாங்குமாறு துருக்கியை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்காவின் 100 அதிநவீன எப்-35 போர் விமானங்களை வாங்குவதற்கு துருக்கி ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதற்காக பெரும் முதலீடும் செய்துள்ளது.

இந்த நிலையில் ரஷ்யாவின் எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளை கையாள்வது தொடர்பாக பயிற்சி பெற துருக்கி தனது வீரர்களை ரஷ்யா அனுப்பி உள்ளது.

இந்த நிலையில்தான் ரஷ்யாவிடம் இருந்து விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்கக்கூடாது என்று அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here