ஹொங்கொங் குலுங்கியது: இலட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்!

கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹொங்கொங்கில் இலட்சக்கக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தினர்.

ஹொங்கொங் முதலில் இங்கிலாந்தின் கொலனி நாடாக இருந்து வந்தது. 1997ம் ஆண்டு, அது சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறியது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது.

இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகளுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஹொங்கொங் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால் சீனாவுடன் மட்டும் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை.

கடந்த 20 ஆண்டுகளாக இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஹொங்கொங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹொங்கொங் நிர்வாகம் முடிவு செய்தது.

இது தொடர்பாக ஹொங்கொங் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் விவாதம் நடந்தபோது வன்முறை தாண்டவமாடியது. உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இப்போது இந்த உத்தேச கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

ஆனால் சட்டசபையில் இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் பெற்று விட வேண்டும் என்பதில் ஹொங்கொங் நிர்வாகத்தலைவர் கேரி லாம் உறுதியாக உள்ளார். 12ம் திகதி இது வாக்கெடுப்புக்கு விடப்படுகிறது.

இந்த சட்ட திருத்தத்துக்கு ஆதரவானவர்கள், இதில் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்கள், சீனாவின் பலத்த குறைபாடுள்ள நீதி அமைப்பின்கீழ் ஹொங்கொங் தள்ளப்படும் நிலை உருவாகும், கூடவே ஹொங்கொங் நீதித்துறையின் சுதந்திரம் மேலும் கெட்டுப்போகும் என்கின்றனர்.

இந்த நிலையில் அந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக ஹொங்கொங்கில் நேற்று பல்லாயிரக் கணக்கானோர் வீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் வெள்ளை நிற உடை அணிந்திருந்தனர்.

அவர்கள் உத்தேச சட்ட திருத்தத்துக்கு எதிராக ஆவேசமாக குரல் கொடுத்தனர். இந்த போராட்டத்தால் ஹொங்கொங் குலுங்கியது.

ஹொங்கொங்கை சீனாவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1998இல் நடந்த பிரமாண்ட எதிர்ப்பு பேரணிக்கு பின்னர், இந்த பேரணியே பிரமாண்டமானது என குறிப்பிடப்படுகிறது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here