மாவையின் வாயை எப்படி அடைப்பார் மோடி?

இலங்கைக்கு குறுகிய நேர பயணமாக வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் இன்று மதியம் சந்திக்கிறார்கள்.

மதியம் 2 மணிக்கு ஆரம்பிக்கும் சந்திப்பு, 10 நிமிடங்கள் வரையே நடைபெறும். மிகக்குறுகிய, சம்பிரதாய சந்திப்பாக இது இடம்பெறும்.

மிகக்குறுகிய சந்திப்பென்பதால், அரசியல் விவகாரங்கள் தொடர்பாக அலசப்பட வாய்ப்பில்லை. இலங்கைத்தமிழர்கள் விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டுமென கூட்டமைப்பு தரப்பு ஒரு கோரிக்கை வைக்க, பதிலுக்கு, இந்திா தமிழர்களை கைவிடாது, இனப்பிரச்சனை தீர்விற்கான உரிய நடவடிக்கை எடுக்க இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என மோடி தரப்பில் கூறப்படும். வழக்கமான இராஜதந்திர சந்திப்புக்களில் ஒன்றாகத்தான் இது இருக்கும்.

இன்றைய சந்திப்பில் கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ள மிகக்குறுகிய நேரத்தை எப்படி பயன்படுத்துவார்கள் என்ற சுவாரஸ்ய கேள்வியொன்றும் உள்ளது. வழக்கமாக இராஜதந்திரிகள் மற்றும் கட்சிக்குள்ளான சந்திப்புக்களில் பேச்சை ஆரம்பிக்கும் இரா.சம்பந்தன், “1947 இல்..“ என ஆரம்பிப்பது வழக்கம். எனினும், எதையும் தெளிவாகவும், புரியும்விதத்திலும் சொல்வதில் அவர் கில்லாடி.

மறுவளமாக, மாவை சேனாதிராசாவும் இன்றைய கூட்டத்திற்கு செல்கிறார். மாவை சேனாதிராசா குறித்து கட்சிக்குள் இப்பொழுது நகைச்சுவையாக ஒரு பேச்சுண்டு. குழந்தைகளை நித்திரை கொள்ள வைக்க பல தாய்மார் சிரமப்படுவது வழக்கம். ஆனால், கூட்டத்தில் அனைவரையும் நித்திரை கொள்ள வைக்கும் திறமை மாவை சேனாதிராசா ஒருவருக்குத்தான் உள்ளதென கட்சிக்குள்ளேயே நகைச்சுவையாக பேசுவார்கள்.

ஒரு நிமிடத்தில் பேசக்கூடிய விடயத்தை, எல்லோரையும் தலைசுற்ற வைத்து 10 நிமிடம் பேசுவது மாவையின் ஸ்பெஷல்.

கூட்டங்களில் பேசிப்பேசியே எல்லோரையும் அறுக்க வைக்கிறார் மாவை என்ற அபிப்பிராயம் வந்த பின்னர், கட்சிப் பிரமுகர் ஒருவர் நசூக்காக மாவைக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார். நீங்கள் நீண்டநேரம் பேசுவது பார்வையாளர்களிற்கு அதிருப்தியையும், விமர்சனத்தையும் கொண்டு வருகிறது. அதனால் பேச்சை குறையுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு மாவை மிரட்டல் பதிலொன்றை கொடுத்திருக்கிறார். “நாங்கள் ஒரு மணித்தியாலம் பேசினால்தான், எங்கள் சனங்கள் அதில் 10 நிமிட விசயத்தையாவது எடுப்பார்கள்“ என்றார்.

இன்று கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது 10 நிமிடம். 10 நிமிடத்தையும் பயன்படுத்துவோம் என மாவை முடிவெடுத்தால் என்ன நடக்கும்?

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொள்கின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here