தெரிவுக்குழு நிறுத்தப்படும்வரை அமைச்சரவை கூட்டம் நடக்காது; பிணைமுறியில் பலரை சிறையில் அடைப்பேன்: அமைச்சரவையில் கொதித்த மைத்திரி

நேற்று நடந்த அவசர அமைச்சரவை கூட்டத்தில், காரசாரமாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால, இடைநடுவில் கூட்டத்திலிருந்து வெளியேறிச் சென்றதாக கூறப்படுகிறது.

நேற்று (7) இரவு 7.30 மணிக்கு அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். திடீரென விடுக்கப்பட்ட இந்த அழைப்பால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பாக ஜனாதிபதி அதிருப்தி தெரிவிப்பார் என்ற ஊகங்களும் கிளம்பியிருந்தன. நேற்றைய கூட்டத்தில் இந்த விவகாரம்தான் பேசப்பட்டது.

கூட்டத்தின் ஆரம்பத்திலேயே தெரிவுக்குழு தொடர்பாக காரசாரமாக ஜனாதிபதி கருத்து தெரிவித்தார். தெரிவுக்குழு விசாரணை உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென அழுத்திக் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பாக 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன, நான் ஆணைக்குழுவை நியமித்துள்ளேன், இந்த நிலையில், தெரிவுக்குழு விசாரணை அதனை குழப்பும் விதமாக அமைந்துள்ளதாக சட்டமா அதிபர் தன்னிடம் தெரிவித்ததாகவும், அதனை சபாநாயகரை அழைத்து தெரியப்படுத்தியதாகவும் கூறிய ஜனாதிபதி, சபாநாயகர் அதை சபைக்கு தெரியப்படுத்தவில்லையென மைத்திரி கடும் அதிருப்தி தெரிவித்தார்.

தெரிவுக்குழுவை தொடர்வது மகிந்த அணிக்கே வாய்ப்பாக அமையும், தேர்தல் நெருங்கும் நிலையில் இப்படி செயற்படுவது யாருக்கு வாய்ப்பாக அமையுமென்பதை நீங்களே தீர்மானியுங்கள் என ஜனாதிபதி தெரிவித்தார்.

பதவியில் இல்லாதவர்களைத்தான் இதுவரை தெரிவுக்குழு சாட்சியத்திற்கு அழைத்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்களின் சாட்சியம் நாட்டிற்கு எதற்கு அவசியம் என கேள்வியெழுப்பினார். அத்துடன், பதவியிலுள்ள அதிகாரிகள் யாரையும் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அனுமதியேன் என்றும் அடித்து சொன்னார்.

தெரிவுக்குழுவை தொடர்ந்தால், நாம் ஒன்றாக செயற்பட முடியாத நிலைமையேற்படும், நீங்கள் தனித்து செயற்பட வேண்டியேற்படும், இப்படித்தான் செயற்பட போகிறீர்கள் என்றால் நீங்கள் விலகிச் செல்லுங்கள்.

தெரிவுக்குழுவை இடைநிறுத்தும் வரை மீண்டும் அமைச்சரவை கூட்டம் நடக்காது. அமைச்சரவை பத்திரங்களிலும் நான் கையொப்பமிட மாட்டேன். இதனால் என்ன பிரச்சனை வந்தாலும் நானே அதற்கு பொறுப்பேற்பேன் என மைத்திரி காரசாரமாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட பிரதமர், தெரிவுக்குழுவை நிறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

இதனால் மேலும் கோபமடைந்த ஜனாதிபதி, தெரிவுக்குழுவை தொடர்ந்து முன்னெடுத்தால் மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் பலரை சிறையில் தள்ளுவேன் என்றும் எச்சரித்தார்.

இதன்போது ஐதேகவினர் மௌனமாக உட்கார்ந்திருந்தனர். மத்திய வங்கி எச்சரிக்கையை விடுத்து விட்டு, ஜனாதிபதி கூட்டத்திலிருந்து கோபமாக வெளியேறி சென்றதாக கூறப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை திங்கட்கிழமை கையளிக்கப்பட்டதும், தெரிவுக்குழுவின் விசாரணைகள் இடைநிறுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கருத்திற்கு கணிசமான அமைச்சர்கள் சாதகமான கருத்தை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டதும், தெரிவுக்குழுவை இடைநிறுத்தலாமென அமைச்சர்கள் சிலரும் அபிப்பிராயம் தெரிவித்தனர். எனினும், இதில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இலங்கை வரலாற்றின் மிகப்பெரிய மோசடியான மத்திய வங்கி பிணைமுறி மோசடியை இந்த ஆட்சிக்காலத்தில் ஐ.தே.க அரசு மேற்கொண்டமையும், அது குறித்த விசாரணைகள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here