பதினாறு இலட்சம் பணம்… செங்கலடியில் கூட்டாக கொள்ளையடித்த அதிகாரிகள்!

தமிழ் பக்கத்தின் விசேட புலனாய்வு தொடர்- 02

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த சமுர்த்தி மோசடிகள் தொடர்பான ஆதாரபூர்வமான தகவல்களை வெளியிடும் இந்த தொடரில், இந்தவாரம் குறித்த பிரதேசமொன்றில் நடந்த மோசடியை அம்பலப்படுத்துகிறோம். சமுர்த்தி வங்கி கிளையொன்றில் மட்டும் பல இலட்சம் ரூபா பணத்தை சில அதிகாரிகள் மோசடி செய்திருக்கிறார்கள்.

வறுமையை போக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சமுர்த்தி திட்டம், அதன் உண்மையான பலனை எட்டியுள்ளதா? அப்படி எட்ட முடியாமல் போனதற்கு காரணம் என்ன? சமுர்த்தி திட்டம் வெற்றியடையாமல் போக காரணமாக இருந்த அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் தண்டிக்கப்பட்டார்களா? என்பது பற்றி கடந்தவாரம் விலாவாரியாக குறிப்பிட்டிருந்தோம். அரசியல்வாதிகளின் துணையுடன் இயங்கும் உத்தியோகத்தர்களே அதிகமாக இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சமுர்த்தி ஊழல்களை அம்பலப்படுத்தும் இந்த தொடரில், நாம் முதலாவதாக வெளியிடவுள்ள மோசடிகள்- ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசசெயலர் பிரிவில் இடம்பெற்றவை. இந்த பகுதியில் நாம் வெளியிடும் தகவல்களிற்கான அனைத்து ஆவணங்களும் தமிழ் பக்கத்திடம் உள்ளன என்பதை ஆரம்பத்திலேயே பொறுப்புணர்வுடன் குறிப்பிடுகிறோம்.

ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரடியனாறு சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியில் பெருமளவு ஊழல் மோசடிகள் நடந்துள்ளன. அவற்றை இந்த வாரம் பட்டியல்படுத்துகிறோம். 2013- 2017 வரை இந்த கிளையில் பெருமளவு மோசடி நடந்துள்ளது. இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான உள்ளக கணக்காய்வாளரின் அனுமதியுடன் மட்டக்களப்பு மாவட்ட உள்ளக கணக்காய்வாளர்கள் கடந்த பெப்ரவரி மாதம் கணக்காய்வில் ஈடுபட்டு, அங்கு மோசடி நடைபெற்றதை உறுதிசெய்துள்ளனர்.

அந்த வங்கியில் கடமையாற்றும் கோபாலப்பிள்ளை திபாகரன் (முகாமையாளர்), அரசரெட்ணம் ஜெயசீலன் (உதவி முகாமையாளர்), அருந்ததி விக்னநாதன் (இலிகிதர்), செவ்வராணி தில்லையம்பலம் (காசாளர்) ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது கணக்காய்வு அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.

இவர்கள் மிக நூதனமாக திட்டமிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டதை கணக்காய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த மோசடி திட்டமிடப்பட்ட விதம் குறித்து, கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டதை இங்கு தருகிறோம்

1.கையிருப்பு காசு 2017.11.30 ஆம் திகதி ரூபா 1,100,000.00 (1.1 மில்லியன்) காசாளராக கடமைபுரிந்த திருமதி அருந்ததி விக்னநாதனால் காப்பு பெட்டகத்தில் வைப்பு செய்யப்படாமல் எடுத்து செல்லப்பட்டுள்ளது.

2.இந்த தொகையை சீர்செய்ய வாடிக்கையாளர்கள் வாடிக்கையாளர்கள் மூன்று பேருக்கு கடன் வழங்கப்பட்டதாக நாளாந்த பெறுவனவு கொடுப்பனவு விபரங்களை பதிவுசெய்யும் எட்டில் காட்டப்பட்டமை.

3.வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து வாடிக்கையாளர்களின் கணக்குகள் ஊடாக வாடிக்கையாளர்களுடன் இணைந்து அருந்ததி விக்னநாதன் கடன் மோசடியில் ஈடுபட்டமை.

4.பெற்ற கடனை மீள செலுத்துவதற்காக வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெற்று உரிய வடிக்கையாளரின் வைப்பு புத்தகம், கடன் ஆள்சார் பேரேட்டு தாள்கள் என்பவற்றில் மட்டும் பதிந்து பணமோசடியில் ஈடுபட்டமை.

5.மேலுள்ள மோசடியை மறைப்பதற்காக கணனியில் தயாரிக்கப்பட்டிருந்த கடன் ஆள்சார் பேரேட்டு பரீட்சை மீதியில் அரசரெட்ணம் ஜெயசீலனின் உதவியுடன் உரிய கணக்கிலக்கங்களை மாற்றி மோசடியை மறைத்தமை.

இப்படியாக கரயனாறு சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியில் இருந்து அதிகாரிகள் ஆட்டையை போட்ட மொத்த பணம்- 1,610, 881.00 ரூபா!

கையிருப்பு பணத்தில் ரூபா 1,100,000.00, வங்கி வாடிக்கையாளர்களுடன் இணைந்து ரூபா 225,000.00, கடனை மீளச்செலுத்த ஒப்படைத்ததில் ரூபா 285,881.00 என மொத்தமாக ரூபா 1,610, 881.00 மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடியை மறைப்பதற்காக ஆவணங்களிலும் மோசடியான முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடன் ஆள்சார் பேரேட்டு தாள்கள் மூன்று காணாமல் போயுள்ளது. 2017.11.20 தொடக்கம் 2017.12.04 ஆம் திகதி வரை தயாரிக்கப்பட்ட நாளாந்த பெறுவனவு கொடுப்பனவு விபரங்களை பதிவுசெய்யும் புத்தகத்திற்கு பதிலாக புதிய புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2017.11.23ஆம் திகதி தொடக்கம் 2017.11.30 ஆம் திகதி வரை புதிய பணச்சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வறுமையில் மூன்றாமிடத்தில் பட்டியல்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பில்- ஒரு சமுர்த்தி வங்கியில்- ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்- மோசடி செய்யப்பட்டுள்ள பணத்திற்கான விபரம் இது. இந்த மோசடி நடவடிக்கை குறித்த ஆதாரபூர்வ கணக்காய்வு விபரங்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களங்களிடம் உள்ளன. அந்த அறிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை என்னவென்று நாம் கேள்வியெழுப்புகிறோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்தகாலங்களில் நடந்த பெரும் ஊழல் மோசடிகள் பற்றிய பல தகவல்களை- அரசஅதிபராக கடமையாற்றிய பி.எம்.சாள்ஸ் தொடர்புபட்டிருந்த மோசடிகளையும்- தீபம் வெளியிட்டிருந்தது. அவை தொடர்பான எந்த ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. முன்னைய மோசடி நடவடிக்கைகளால் மகக்ளிற்கு கிடைக்க வேண்டிய பல உதவித்திட்டங்களிற்கான பணம், அதிகாரிகளின் வங்கி கணக்கை நிரப்பியது. புதிய அரச அதிபர் பதவியேற்ற பின்னர், அவருக்கு முன்னாலிருந்த முதன்மையான சவால்.

அது நடக்குமா?

(இன்னும் சொல்வோம்)

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here