உங்கள் காதலை இணையிடம் பகிருங்கள்… சமூக ஊடகங்களில் அல்ல!


சமூக ஊடகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வேளையில் எல்லா வயதினரும் அதன் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். ஆர்வமிகுதியால் சின்னச் சின்ன விஷயங்களைக்கூடப் பதிவு செய்வதுடன் சமூகத்துக்குத் தேவையில்லாதவற்றைப் பகிர்கின்றனர். அவர்களின் முழுக் கவனமும் சமூக ஊடகங்களைச் சுற்றியே இருக்கிறது. இது வாழ்வில் உறவுமுறையிலான சிக்கல்களுக்கு வழி வகுக்கிறது. சிரிப்பு, மனம் விட்டுப் பேசுதல் என அனைத்தையும் மறந்து முகம் தெரியாதவர்களுடன் நேரத்தைச் செலவிடுகின்றனர்.

இதன் விளைவு, சமூக விரோதிகள் மூலம் இணையத்தில் அச்சுறுத்தல், புகைப்படத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், தகவல்களைத் திருடுதல் எனப் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இப்படி ஏற்படாமல் இருக்க அந்த மாய உலகிலிருந்து மீள வேண்டும். உறவுகளிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். முகம் தெரியாதவர்களிடம் பேசிப் பழகுவதைவிட சம்பந்தப்பட்டவரிடம் சொல்ல வேண்டிய விஷயங்களை நேரடியாகச் சொல்ல வேண்டும். அதுதான் அந்த உறவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகும். இதில் அதிகம் பாதிக்கப்படுவது கணவன்- மனைவி உறவுதான் என்கிறது சமீபத்திய ஆய்வு.

மகிழ்ச்சியான ஓர் உறவை உருவாக்க நினைக்கும், வாழ நினைக்கும் தம்பதிகள் என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக் கூடாது?

* உங்கள் காதலை நேருக்கு நேராக அன்பான வார்த்தைகளில் வெளிப்படுத்துங்கள். அதுதான் உங்கள் இருவருக்குமான இடைவெளியைக் குறைத்து அன்பையும், காதலையும் அதிகரிக்கும். மாறாக, சமூக ஊடகப் பொதுவெளியில் மாறி மாறி காதலை வெளிப்படுத்திக்கொண்டிருக்காதீர்கள்.

* ‘நாங்கள் இருவரும் சந்தித்து இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது’, எனத்தொடங்கி `எங்களின் முதல் சண்டை இந்த தினத்தில்தான் நடந்தது’ என்பதுவரை அனைத்தையும் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம். அதற்குப் பதிலாக, குறிப்பிட்ட அந்த நாளில், அந்த நினைவுகளை இணையரிடம் சொல்லி அவரோடு சிறிது நேரம் செலவழியுங்கள். அவர் நீண்ட நாள்களாகக் கேட்ட பொருளை வாங்கிப் பரிசளியுங்கள். அது காதலை வளர்க்கும்.

* இருவரும் சேர்ந்திருப்பது போன்ற படத்தை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யும் தம்பதிகள், எந்த எதிர்பார்ப்பும் இன்றி மன திருப்திக்காக மட்டும் அதைப் பகிருங்கள். இதை யாரெல்லாம் பார்க்க வேண்டும், யாரெல்லாம் புகைப்படத்தைப் பார்த்து உங்களின் அன்பையும், நெருக்கத்தையும் பாராட்ட வேண்டும் என்பது போன்ற எதிர்பார்ப்புகளோடு பகிரவேண்டாம். முடிந்தவரை, உங்கள் இருவரின் மிகச்சிறந்த புகைப்படத்தை உங்கள் அறையில் ஃபிரேம் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களின் நினைவுகளைச் சேமித்து வைத்து, வரும் நாள்களில் உறவை மேம்படுத்த உதவும்.

*இருவரும் ஒன்றாகச் செலவழிக்கும் நேரங்களை, சமூகவலைதளத்தில் பதிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டாம். ஒவ்வொரு நிகழ்வின்போதும் அப்படிச் செய்வது, உங்களின் அடுத்தடுத்த கட்ட சந்திப்புகளின்போது, சந்திப்பின் அடிப்படை நோக்கத்தையே மாற்றிவிடும். உதாரணத்துக்கு, `இன்று நாம் எப்படி நேரம் செலவிடப்போகிறோம்’ என்ற எண்ணத்தை முறித்துவிட்டு, `இந்த முறை எந்தப் புகைப்படத்தைப் பதிவேற்றலாம், `அதற்கு எந்த வாசகங்களைப் பயன்படுத்தலாம்’, என்ன கமென்ட் செய்யலாம்’ என்ற எண்ணங்களையே உருவாக்கும்.

* தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் தம்பதிகள், செல்லும் இடங்களை ரசியுங்கள். அந்தத் தருணத்தை அனுபவியுங்கள். மாறாகப் புகைப்படங்களை பகிர்வதில் மட்டுமே கவனம் செலுத்தாதீர்கள். பயணத்தின் போதோ, பயணத்துக்குப் பின்னரோ புகைப்படங்கள் பகிரும்போது, குறிப்பிட்ட அந்தப் பயணம் உங்கள் இருவருக்கும் எதைக் கற்றுத்தந்தது அல்லது உங்களின் எந்த இடைவெளியைக் குறைத்தது என்பது போன்ற கேள்விகளை நீங்களே ஒருமுறை மனதுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். முக்கியமாக, `நாம் எதற்காக இணைந்து பயணப்பட்டோம், அந்த நோக்கம் நிறைவேறியதா’ என்பதற்கான பதிலைத் தெரிந்துகொள்ளுங்கள்.

* மொபைல் போன்களின் வளர்ச்சி, ஒவ்வொரு நாளும் செல்ஃபி மீதான மோகத்தை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அதன் நீட்சியாக, ஒரு நாளுக்கு பத்து செல்ஃபிக்கள் கூட இருவரும் சேர்ந்து எடுத்திருக்கலாம். அதற்காக அனைத்தையும் சமூக ஊடகங்களில் அப்படியே பதிவேற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.

* எந்த ஓர் உறவும், சந்தோஷமான நிகழ்வுகளால் மட்டுமே உருவானதில்லை. மகிழ்ச்சி, துக்கம், கோபம், வெறுப்பு என அனைத்தும் கலந்துதான் இருக்கும். எல்லா உணர்வுகளுக்குப் பின்னும்கூட, ஏதோவொரு விஷயம் உங்களை அந்த உறவை விட்டுப் பிரிக்காமல் வைத்திருக்கும். அந்த ஏதோவொரு விஷயம்தான் அன்பு. இப்படியான அன்பு, நிர்பந்தத்தின் அடிப்படையில், அதிலும் பதிவேற்ற வேண்டும் என்ற நிர்பந்தத்தால் நிகழ்ந்ததாக இருக்கக்கூடாது. ஒரு வேளை அப்படியிருந்தால், குறிப்பிட்ட அந்த உறவு எளிதில் பாதிக்கப்பட்டுவிடும்.

* மகிழ்ச்சியைத் தவிர்த்து வேறெந்த நிகழ்வு உங்கள் வாழ்வில் ஏற்பட்டாலும் அது உங்களின் உறவுக்குள் தேவையில்லாத சந்தேகங்களை எழுப்பும். எனவே, உங்களுக்குள்ளான நிகழ்வுகளை ரசியுங்கள், கொண்டாடுங்கள். உறவின் புனிதத்தை, நினைவுகளாகச் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்படி அழகியல் ரீதியாக உங்கள் உணர்வுகளைப் பிரதிபலியுங்கள், அது நீண்ட கால சந்தோஷத்துக்கு உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here