உங்கள் பார்ட்னரிடம் இந்த குணாதிசயங்கள் இருந்தால் விலகுவது நலம்!


நீங்கள் பிரச்னையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில் உங்கள் பார்ட்னர் உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிறாரா? அல்லது வேண்டுமென்றே அந்த சூழ்நிலையையும், உங்களையும் தவிர்த்துக்கொண்டு இருக்கிறாரா? உரையாடும்போது, மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகப் பேச முடியாமல், ஒருவித பதற்றமும் அச்சமும் ஏற்படுகிறதா?


வ்வுலகில் குறையில்லாத மனிதர்கள் எவருமில்லை. சில சமயங்களில் நம்முடன் இருப்பவர்களின் பழக்கவழக்கங்கள் பிடிக்காமல், வெறுக்கவும் வைக்கும். சுகாதாரமின்மை, நேரத்திற்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பது, முக்கியமான நாள்களை மறப்பது உள்ளிட்ட பல செயற்பாடுகள் நெருக்கமானவர்களிடம் நீண்ட நாள்கள் நீடித்தால் இருவருக்குமிடையே வீண் விவாதங்கள், மன வருத்தம் சில சமயங்களில் மனஅழுத்தம் ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு. அந்த உறவு முறிவதற்கும் அதிக வாய்ப்புண்டு.

காலப்போக்கில் சரியாகிவிடும் என்று எண்ணி தற்காலிகமாக மனதைத் தேற்றிக்கொண்டாலும், சில குணாதிசியங்களை என்றைக்கும் மாற்றவே முடியாது. இது உறவுகளுக்கிடையே பிரச்னைகளைத்தான் அதிகப்படுத்தும் தவிர தீர்வை நோக்கி நகராது. உங்கள் பார்ட்னருக்கு பின்வரும் பண்புகள் இருந்தால் எச்சரிக்கையாக இருப்பது நலம்!

உணர்வுபூர்வமாக இல்லையா?

நீங்கள் பிரச்னையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில் உங்கள் பார்ட்னர் உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிறாரா? அல்லது வேண்டுமென்றே அந்த சூழ்நிலையையும், உங்களையும் தவிர்த்துக்கொண்டு இருக்கிறாரா?உரையாடும்போது, மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகப் பேச முடியாமல், ஒருவித பதற்றமும் அச்சமும் ஏற்படுகிறதா? இதுபோன்ற எதிர்மறை சூழ்நிலைகளால் சூழ்ந்து இருப்பது நல்லதல்ல. நீண்ட நாள்கள் இந்தப் பிரச்சனை நீடித்தால் நிச்சயம் அவரிடமிருந்து விலகுவதே சிறந்தது. இந்த குணாதிசயம் என்றைக்கும் மாறாது.

அணுகுமுறை பிரச்னை:

கர்வம் அல்லது பிடிவாதம் ஒருவரிடம் அதிகமாக இருந்தால், அவரோடு நீண்ட நாள்கள் பயணிப்பது கடினம். இது அதிகப்படியான மனஉளைச்சலை ஏற்படுத்தும். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்கிற அட்டிடியூட், எதிர்முனையில் இருப்பவரின் தன்னம்பிக்கையை முற்றிலும் உடைத்துவிடும். இந்தப் பண்பு உறவுகளின் திடமான நச்சு. முடிந்தளவு இவர்களிடமிருந்து விலகி இருப்பது நலம்.

பொய்கள்:

எந்த உறவாக இருந்தாலும், அதில் ‘நம்பிக்கையின்மை’ இருந்தால் நிச்சயம் அது ஆரோக்கியமற்ற உறவாகத்தான் இருக்கும். பொய் பேசுபவர்களை யாருக்குத்தான் பிடிக்கும்? இந்தப் பண்பு, உறவுகளுக்கிடையே விவாதங்களையும், சண்டைகளையும் ஏற்படுத்தும். அந்த நபர் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் குறை கண்டுபிடிக்கத் தோன்றும். இது வாழ்க்கையின் நிம்மதியை வேரோடு அழிக்கும் மிகவும் மோசமான பண்பு. ஏன் பொய் சொல்கிறார், எதனால் அந்த சூழ்நிலை அமைந்தது என்பதை ஆராய்ந்து ஓரிரு முறை மன்னிப்பது சிறப்பு. ஆனால், அதற்குமேலும் இந்தச் சூழ்நிலை நீடித்தால் அவரிடமிருந்து விலகுவதே சிறந்தது.

உறவில் இருக்கும் பிரச்சனைகளை தவிர்ப்பது:

ஆரோக்கியமான உறவில் இருப்பவர்களுக்கிடையேயும் சண்டைகள், விவாதங்கள் ஏற்படும். அவற்றை அவர்கள் எளிதாக எதிர்கொள்வார்கள். முடிந்தவரை இருவருக்கும் சாதகமாக இருக்கும் முடிவையே எடுப்பார்கள். ஆனால், பிரச்னையின்போது தன்னிடம் குறை இருப்பது தெரிந்து, அந்தத் தவற்றை ஒப்புக்கொள்ளாமல் அதனை முழுமையாகத் தவிர்த்தால், அவரிடம் கவனமாக இருப்பது அவசியம். அதிலும், எதுவும் நடக்காததைப் போன்ற பிம்பத்தை உருவாக்குபவர்களிடம் சிவப்புக் கொடி காட்டுவதுதான் இந்தப் பிரச்னைக்கான தீர்வு.

கவனத்தைக் கோருவோர்:

கணவன்-மனைவி, காதலர்கள் என எந்த உறவாக இருந்தாலும், தன் பார்ட்னர் தன்மீது கவனம் செலுத்த வேண்டும் என நினைப்பது இயல்புதான். ஆனால், 24 மணிநேரமும் தன்னைப் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும் என நினைப்பது நிச்சயம் ஆரோக்கியமற்ற உறவாகத்தான் இருக்கும். தன்னுடன் எந்நேரமும் பேச வேண்டும், பரிசுப் பொருள்கள் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும், சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பகிர வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகள் இவர்களிடம் அதிகம் இருக்கும். அப்படி நடக்காமல் போகிற சமயங்களில், தேவையற்ற மனஅழுத்தத்திற்கு இருவரும் ஆளாக நேரிடுகிறது. சற்றும் யோசிக்காமல் இவர்களைவிட்டு விலகுவது நலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here