எடுத்ததற்கு எல்லாம் கோபம் வருகிறது… என்ன செய்யலாம்?: மனமே நலமா?

உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்

பதிலளிக்கிறார்
கு.நக்கீரன்
உளவள ஆலோசகர்

ஜெய்ஸி (25)
முல்லைத்தீவு

திருமணமாகி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளேன். தற்போது எனக்குள்ள பிரச்சினை என்னவென்றால், எனது பிரசவத்தை நான் இயற்கையாகப் பிரசவிப்பதா? அல்லது சத்திர சிகிச்சை மூலம் குழந்தை பெறுவதா? எது சுலபமானது? ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை கூறுகின்றார்கள். நான் முடிவெடுக்க முடியாமல் குழம்பிப் போயுள்ளேன். நான் என்ன முடிவெடுப்பது?

பதில்- அன்புச் சகோதரி! உமது மனக்குழப்பம் எனக்குத் தெளிவாகப் புரிகின்றது. உண்மையில் இதில் குழம்புவதற்கு ஒன்றுமில்லை. கடவுள் என்னும் பொறியியலாளன் மிகச் சிறந்த முறையிலேயே உயிர்களைப் படைத்துள்ளான். அவரின் படைப்பிலே நூற்றிற்கு தொண்ணுர்ற்றொன்பது சதவீதம் எந்தக் குறைபாடும் இருப்பதில்லை. எஞ்சிய ஒரு சதவீதத்திலேயே ஏதாவது சிக்கல் இருக்கும். அந்த வகையில் ஆண்-பெண் கவர்ச்சி, உடலுறவு, கருத்தரிப்பு, கர்ப்பகாலம், பிரசவம், பாலூட்டல் எல்லாம் இயற்கையின் விந்தை.

உண்மையில் ஒரு ஆரோக்கியமான பெண்ணிற்கு இயற்கையாகப் பிரசவிப்பதற்குரிய அனைத்து இயல்புகளும் சாதாரணமாகவே இருக்கும். ஏதாவது நோய்கள், குறைபாடுகள் இருப்பின் மட்டுமே வைத்திய நிபுணரின் ஆலோசனையின் பேரில் சத்திர சிகிச்சை செய்ய வேண்டி ஏற்படுகின்றது. மற்றபடி சத்திர சிகிச்சை என்பது தேவையற்ற ஒன்று.

இன்னொரு விடயம் இதில் உள்ளது. இயற்கையான பிரசவத்தின் போதுதான் தாய்க்கும் சேய்க்குமான பாதுகாப்பும் கவர்ச்சியும் அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏன் வீணாண பிரசவ வலி என்று சத்திர சிகிச்சை மூலம் பெறப்படும் பிள்ளைகள் சிலவேளைகளில் வயோதிப காலத்தில் தமக்கு ஏன் வீணான சுமை என்று தான் பெற்றோரை முதியோர் இல்லங்களில் விடுகின்றார்களோ என்னவோ?

தாட்சாயிணி (24)
அச்சுவேலி

தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கின்றேன். வீட்டிலும் சரி, வேலை செய்யும் இடத்திலும் சரி எனக்கு முற்கோபம் ரொம்பவே அதிகமாக வருகின்றது. தேவையில்லாத விடயங்களுக்கு எல்லாம் அதிகமாகவே கோபப்படுகின்றேன். இதனால் சில நல்ல நண்பர்களையும் இழந்துள்ளேன். எவ்வளவு முயற்சி செய்தும் என்னால் இதனை மாற்ற முடியவில்லை. எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள்?

பதில்- அன்பான சகோதரி! கோபப்படுவது மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் உண்டான இயல்பே. மனதில் ஏற்படும் உணர்வுகளுக்கேற்ப துலங்கலை வெளிப்படுத்துவது ஆரோக்கியமான மனிதனுக்குரிய இயல்பு. அதேபோல் பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டியதும் மனிதனின் இயல்பே. நம்மில் பலர் பகுத்தறிவைப் பயன்படுத்துவது மிகக் குறைவு. அப்படிப் பயன்படுத்தியிருந்தால் சிறைச்சாலைகளும், நீதிமன்றங்களும் தேவையில்லாமல் போயிருக்கும். உம்மைப் போன்ற முற்கோபக்காரர்களே அதிகளவில் சிறைக் கைதிகளாகவும் உள்ளனர்.

நீதி, தர்மம் மறுக்கப்படும் போது அல்லது எதிர்பார்ப்பு ஏமாற்றம் ஆகும் போது எமக்கு கோபம் வருகின்றது. ஆனால் இந்தக் கோபம் எனும் உணர்வை அளவோடு பயன்படுத்திப் பழக வேண்டும். நான் முற்கோபக்காரன் என்று எல்லோருடனும் எல்லாவற்றுக்கும் சண்டை போட முடியாது. அப்படியானவர்களை ஒருவித மனநோயாளிகளாகவே சமூகம் கருதுவதுண்டு. எனவே உங்களை மனநோயாளி என்று மற்றவர்கள் கூறும் அளவிற்குப் போகாமல் உங்கள் பகுத்தறிவின் பயன் கொண்டு உங்களைச் சற்று மாற்ற முயற்சி செய்யுங்கள்.

இன்னொரு விடயம். அதிகளவு முன்கோபப்படுபவர்கள் பொதுவாக நீதிக்கும், தர்மத்துக்கும் மிகவும் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். நீங்கள் எப்படி என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். முற்கோபம் என்பது எம்மில் நாமே ஏற்படுத்திக் கொண்ட இயல்பே. எனவே அவ் இயல்பை மாற்றும் சக்தி எம்மிடம் தான் இருக்கின்றது என்பதை மறந்து விட வேண்டாம்.


சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் உங்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் உள்ளதா? உடனே எமக்கு எழுதி அனுப்புங்கள். மனநல நிபுணர்கள் உங்கள் பிரச்சனைகளிற்கான தீர்வை தர தயாராக இருக்கிறார்கள்.

pagetamilmedia@gmail.com 
அல்லது
0766722218

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here