நீரிழிவு ரகசியங்களும்… தீர்வும்- நீரிழிவு பற்றிய முழுமையான விளக்க தொடர் 02

என்.கே.நாராயணன்

நீரிழிவு நோய் மற்றும் நாளமில்லா சுரப்பி நிபுணர்

அப்பலோ வைத்தியசாலை

 

நேர்மறை எண்ணம்

மருத்துவத்தை பொறுத்தவரையில் நேர்மறை எண்ணம் மிகவும் முக்கியம்.

சிலர் பத்திரிக்கைகள், தொலைகாட்சிகள், இணையம் போன்றவற்றில் சில நோய்கள் குறித்து படித்துவிட்டு, அதில் சொல்லபடும் அறிகுறி தனக்கும் இருக்குமோ எனப் பயந்து மன அழுத்தத்தில் புழுங்குகிறார்கள்.

மன அழுத்தம் தான் மோசமான வியாதி. மன அழுத்தம் இருப்பதால் தான் பல்வேறு நோய்கள் வருகிறது. நீரிழிவுக்கும் மறைமுக காரணம் மன அழுத்தம் தான்.

அறிகுறிகள் இருப்பது தெரிந்தால் கவலைபடாமல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

நீரிழிவு நோய் முதல் புற்றுநோய் வரை எந்தவொரு நோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் நோய்களை எளிதில் கட்டுக்குள் வைக்க முடியும்.

நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ, தேவையற்ற பயத்தையும், மன அழுத்தத்தையும் தவிர்ப்பது நல்லது.

சந்தேகமும் தீர்வும்...

இன்சுலின்

டைப் 2 நீரிழிவு நோயாளிகள், மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன் மூலம், கணையத்தைத் தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்யலாம்.

மாத்திரை சாப்பிட்டும் இன்சுலின் போதுமான அளவு சுரக்கவில்லை எனில், ஊசி மூலம் செயற்கை இன்சுலின் எடுத்துகொள்ள வேண்டியிருக்கும்.

நீரிழிவு நோயாளிகள் முடிந்த வரை நீர், கொசு, உணவு மூலமாக வரும் காய்ச்சல் போன்றவற்றிலிருந்து வருமுன் காப்பது மிகவும் நல்லது.

ஒருமுறை இன்சுலின் ஊசி எடுத்துக்கொண்டால், அதன்பின் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி போட வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. பொதுவாக, நீரிழிவு நோயாளிகளுக்கு வேறு ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டால், இன்சுலின் அதிக அளவு தேவைப்படும். அதற்காகத்தான் இன்சுலின் ஊசி பரிந்துரைக்கப்படுகிறது.

எந்த நோய் வந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்குரிய சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு, பாதிப்பை முழுமையாகக் குணப்படுத்திவிட்டால், மீண்டும் இன்சுலின் அதிக அளவில் தேவைப்படாது. அப்போது, இரண்டு மூன்று வருடங்கள் ஆனாலும்கூட மீண்டும் மாத்திரைக்குத் திரும்பி விடலாம். எந்த நோயும் தாக்கவில்லை ஆனால், மாத்திரை சாப்பிட்டும் சீனி அளவு குறையவில்லை எனில், இன்சுலினை ஊசி மூலம் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கும்.

இன்சுலின் பம்ப்

டைப் 1 நீரிழிவு நோயாளிகள் வாழ்நாள் முழுக்க தினமும் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும்.  இவர்கள், தினசரி ஊசி போடுவதைத் தவிர்க்க, தற்போது நவீன தொழில்நுட்பத்தில் இன்சுலின் பம்ப் இருக்கிறது. மொபைல் அளவுக்கு இருக்கும் இதனை வயிற்றில் பொருத்திக்கொண்டால், கணையத்தின் செயல்பாட்டை அறிந்து, அதற்கு ஏற்ப இன்சுலினை உடலுக்குத் தரும்.

கிளைசமிக் குறியீட்டு எண்

நாம் உட்கொண்ட உணவு, செரிமானம் ஆகி எவ்வளவு வேகமாக ரத்தத்தில் கலக்கிறது என்பதைக் குறிப்பதுதான் கிளைசமிக் குறியீட்டு எண்.  பொதுவாக, நார்ச்சத்துள்ள உணவுகளுக்குத்தான் கிளைசமிக் குறியீட்டு எண் மிகக் குறைவாக இருக்கும்.

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டியவை...

நார்ச்சத்து மிகுந்த உணவுகளில் முதல் இடம் கீரைக்குத்தான். தினமும் ஏதாவது ஒரு கீரையை எடுத்துக்கொள்ள வேண்டும். கிழங்கு வகைகளைத் தவிர மற்ற காய்கறிகள் அனைத்தையும் சாப்பிடலாம். மீன், கோழி இறைச்சியை எண்ணெயில் பொரிக்காமல் நீராவியில் வேகவைத்தோ, குழம்பு வைத்தோ சாப்பிடலாம்.

மருத்துவர் பரிந்துரைப்படி பாதாம் முதலான நட்ஸ் சாப்பிடலாம். அப்பிள், கொய்யா, பேரிக்காய், ஒரேஞ்ச், பப்பாளி ஆகியவற்றைச் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். புரதச்சத்து நிறைந்த பயறு வகைகள், கடலை வகைகள், முட்டையின் வெள்ளைப் பகுதியைச் சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு, அன்றாடம் சராசரியாக 1,500 கி.கலோரி போதுமானது.

சிறுதானியம் சாப்பிடுங்கள்

அரிசி, கோதுமை ஆகியவற்றைவிட சிறுதானியம் மிகவும் சிறந்தது. சிறுதானியத்தில் வெறும் மாவுச்சத்து மட்டும் இன்றி நார்ச்சத்து, புரதச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் அதிக அளவு நிறைந்திருக்கின்றன. எனவே, நீரிழிவு நோயாளிகள் கம்பு, கேழ்வரகு ஆகியவற்றைப் பிராதன உணவாக ஏதாவது ஒரு வேளையாவது தினமும் சாப்பிடுவது நல்லது.

நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டியவை...

எண்ணெயை அளவாக உணவில் சேர்க்க வேண்டும். கரட் தவிர மற்ற கிழங்கு வகை உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சிப்ஸ், கோலா பானங்கள், குளிர்பானங்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், ஜங்க்புஃட், அப்பளம்,  ஐஸ்க்ரீம், சாட் உணவுகள், மைதா சேர்க்கப்பட்ட பூரி, பரோட்டா, இனிப்பு வகைகள், மாவுச்சத்து, கொலஸ்ட்ரோல் மிகுந்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

ஓர்கானிக்குக்கு மாறுங்கள்!

பூச்சிக்கொல்லிகளால் எண்ணற்ற பக்கவிளைவுகள், பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, முடிந்தவரை இயற்கை விவசாயத்தில் விளைந்த, ஓர்கானிக் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துங்கள். ஓர்கானிக் பொருட்கள் விலை அதிகமாக உள்ளதாகக் கருதுபவர்கள்  வீட்டிலேயே ஓர்கானிக் முறையில் சிறு தோட்டம் அமைத்து, காய்கறிகள் பயிரிட்டு அவற்றைச் சமையலுக்குப் பயன்படுத்திச் சாப்பிடலாம்.

அரிசிகோதுமை

வெள்ளை அரிசி அதிகம் பயன்படுத்துவது நீரிழிவு நோய்க்கு வித்திடும் என்பது உண்மையே.  தற்போதைய பொலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியில் வெறும் மாவுச்சத்து மட்டுமே இருக்கிறது. அரிசி அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு இன்சுலின் அதிகமாகத் தேவைப்படும். எனவே, அரிசியை ஏதாவது ஓர் உணவு வேளையில் மட்டும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கலவை சாதம், பிரியாணி போன்றவற்றைச் சாப்பிடுவதைக் குறைத்து, அரிசியுடன் காய்கறிக் கூட்டு, முட்டை, மீன் ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது  சிறந்தது. இதனால், ரத்தத்தில் சீனி அளவு பெரிய அளவு அதிகரிக்காது.

கோதுமையில் நார்ச்சத்து ஓரளவுக்கு இருக்கிறது. முழு கோதுமையை வாங்கி, மைதா சேர்க்காமல் அரைத்து, எண்ணெய் குறைவாகச் சேர்த்து, சப்பாத்தி செய்து சாப்பிடலாம். பக்கெட் கோதுமை மாவைத் தவிர்க்கவும். மூன்று வேளையில் ஏதாவது ஒரு வேளை சப்பாத்தி எடுத்துக்கொள்ளலாம். ஓட்ஸ் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அசைவம்

அசைவ உணவு விரும்பிகள் ரெட்மீட் எனச் சொல்லப்படும் ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி போன்றவற்றைக் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. ஹார்மோன் ஊசி போட்டு வளர்க்காத கோழி இறைச்சியை வாரம் ஒரு முறை சாப்பிடலாம். மீன், உடலுக்கு மிகவும் நல்லது. கோழி முட்டையின் வெள்ளைப் பகுதியை சாப்பிடலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கான டயட் சார்ட்

மூன்று வேளை உணவை ஆறு வேளை உணவாகப் பிரித்துச் சாப்பிடச் சொல்வார்கள். அது நடைமுறை சாத்தியம் இல்லாதவர்கள், மூன்று வேளை உணவு எடுக்கலாம். கூடவே காலையும் மாலையும் வடை, போண்டா, பஜ்ஜி போன்றவற்றைத் தவிர்த்து பதிலாக ஆரோக்கியம் தரும்  உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

காலை 8:30 மணிக்குள்  (ஏதாவது ஒன்று மட்டும்)

மூன்று சப்பாத்தி + காய்கறிகள் கூட்டு,

மூன்று இட்லி/மூன்று தோசை + புதினா/வேர்க்கடலை/கொத்தமல்லி/தக்காளி சட்னி.

காலை  11:00 – 11:30 (ஏதாவது ஒன்று மட்டும்)

கொய்யா/பப்பாளி போன்ற ஏதாவது ஒரு பழம்/ மோர்/வெஜிடபிள் சாலட்/இரண்டு கோதுமை பிஸ்கட்.

மதியம் 12:00 – 2:00

சோறு ஒரு கப், அரை கப் சாம்பார், ஒரு கப் காய்கறி கூட்டு  இரண்டு கப் வேகவைத்த காய்கறிகள், ஒரு கப் கீரை, ஒரு கப் ரசம்.

குறிப்பு: நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் பாயசம் அல்லது இனிப்பு போன்றவற்றை எப்போதாவது சிறிதளவு சாப்பிடுவதில் தவறு இல்லை.

அப்பளம்/வடை போன்றவற்றைத் தவிர்க்கவும். ஊறுகாய் மிகச் சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம்.

மாலை 4:00-6:00 (ஏதாவது இரண்டு மட்டும்)

கிரீன் டீ, சர்க்கரை சேர்க்காத காபி/டீ, அரைவேக்காட்டில் வேகவைத்த முளைகட்டிய பயறு வகைகள், சுண்டல்.

இரவு 7:00-9:00 (எதாவதொன்று மட்டும்)

கோதுமை உப்புமா, வெஜிடபிள் உப்புமா, கோதுமை தோசை, சப்பாத்தி, இடியப்பம் இதனுடன் காய்கறிகள் அதிகம் நிறைந்த சாம்பார்.

நீரிழிவு  நோயாளிகள் ஆரோக்கியமாக வாழ கடைப்பிடிக்க வேண்டிய 8 வழிகள்!

சிகரெட், மதுவை அறவே தவிர்க்கவும்.

ஆரோக்கியமான சமச்சீர் உணவுகளை உட்கொள்ளவும்.

நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். இரவு படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் சாப்பிட வேண்டும்.

ஏழு மணி நேரம் தடையற்ற தூக்கம் தேவை.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது ஹெச்.பி.ஏ 1சி பரிசோதனை செய்ய வேண்டும்.

ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை அவசியம். உடல் உழைப்பு, நடைப்பயிற்சி இரண்டையும்  கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

தண்ணீர் தேவையான அளவுக்கு அருந்துங்கள்.

மன அழுத்தத்தைத் தவிருங்கள். உடலில் ஒரு குறைபாடு என்றால், அதற்குச் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் அவ்வளவே. எனவே, நீரிழிவு நோயைப் பற்றி எதிர்மறை எண்ணம் வேண்டாம்.

ப்ரீடயாபடீஸ்

ப்ரீடயாபடீஸ் என்பது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை. இந்த நிலையில் இருப்பவர்கள் எந்தக் கட்டுப்பாடுமின்றி வாழ்ந்தால், சில வருடங்களில் நீரிழிவு நோய் வரக்கூடும்.

ப்ரீடயாபடீஸ் நிலையில் இருப்பவர்கள் ஆரம்பத்திலேயே உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடித்தாலே நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும்.

ப்ரீடயாபடீஸ் நிலையில் இருப்பவர்கள் நீரிழிவு நோய் வரும் எனச் சோர்வு  அடையத் தேவை இல்லை. ப்ரீடயாபடீஸ் நிலையில் இருந்து, சாதாரண நிலைக்குத் திரும்பிவிட முடியும்.

இந்த நிலையில் இருப்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நீரிழிவு பரிசோதனை செய்து, அதற்கு ஏற்ப மருத்துவர் அறிவுரை பெற்று வாழ்க்கை முறையைக் கொஞ்சம்  மாற்றிக்கொள்வது நல்லது.

நீரிழிவு நோய் வராமல் தடுக்கும் வழிகள்! 

சிறுவயதில் இருந்தே ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுவது நல்லது. தினமும் ஒரு மணி நேரமாவது நன்றாக விளையாடவும்.

ஐஸ்க்ரீம், கேக், ஹோட்டல் உணவுகள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை சாட் ஐட்டங்கள் வாங்கிச் சாப்பிடுவதை நிறுத்துங்கள்.

மாதம் ஒரு முறை பி.எம்.ஐ பரிசோதனை செய்யுங்கள். உயரத்துக்கு ஏற்ற எடை இருப்பதை எப்போதும் உறுதி செய்யுங்கள். பி.எம்.ஐ நோர்மலைத் தாண்டினால், நல்ல  உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் எடையைக் கட்டுக்குள் வையுங்கள்.

25 வயதைத் தாண்டியவர்கள், வருடம் ஒரு முறை ரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

நொறுக்குத்தீனிகள் அதிகமாகச் சாப்பிடுவதைக் குறையுங்கள். வீட்டில் சமைக்கும் உணவுகளை மட்டும் அளவோடு சாப்பிடுங்கள்.

வெந்தயம் சாப்பிடுவது நல்லது. கொலஸ்ட்ரோலைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுகள் சாப்பிடுவது, உடல்பருமனை மட்டும் அல்ல, நீரிழிவு நோயையும் குறைக்க உதவும்.

பி.எம்.ஐ நோர்மலாக இருந்தாலும் சிலருக்கு  வயிற்றைச் சுற்றி கொழுப்பு அதிகமாகப் படிவதால், லேசாகத் தொப்பை பெரிதாகும். வயிற்றைச் சுற்றி கொழுப்புப் படிவது, கணையத்துக்கு நல்லது அல்ல.  எனவே, தொப்பைபோட்டால் தொப்பையைக் குறைக்கும் பயிற்சிகளைச் செய்யுங்கள்.

தினமும் உடல் உழைப்பு அவசியம். உடல் உழைப்பு குறைவானவர்கள் நடைப்பயிற்சி, ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்; யோகா செய்யலாம்.

சிகரெட் பிடிப்பதைத் தவிர்ப்பது மட்டும் அல்ல, சிகரெட் பிடிப்பவர்களின் அருகில் இருப்பதைக்கூட தவிருங்கள்.

காலை உணவை தவிர்க்காதீர்கள். மாவுச்சத்து நிறைந்த உணவுகள் 50-60 சதவிகிதம் , புரதச்சத்து நிறைந்த உணவுகள் 20 சதவிகிதம், கொழுப்பு சத்து 10-15 சதவிகிதம்,  வைட்டமின்கள், தாதுஉப்புகள், நுண்ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் 5 சதவிகிதம் என்ற விகிதத்தில் உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுங்கள்.

உடல் எடையைக் கட்டுக்குள்வைத்து, ஃபிட்டாக வாழ்ந்தாலே 90 சதவிகிதம் நீரிழிவு நோய் வருவதைத் தடுத்துவிட முடியும். நம்மால் முடியும் என பொசிட்டிவ் மனநிலையுடன் செயல்படுங்கள்.

(முற்றும்)

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here