அழிக்கப்படும் தமிழ் பௌத்த அடையாளங்கள்: கன்னியா பிள்ளையார் ஆலயத்தில் நடப்பது என்ன?

©தமிழ்பக்கம்

திருகோணமலை கன்னியாவிலுள்ள பிள்ளையார் ஆலயத்தின் பீடம் உடைக்கப்பட்டு வருவது கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தமிழர்களின் பழமையான வழிபாட்டிடம் ஒன்றில் நடத்தப்பட்ட இந்த அத்துமீறில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இப்போது அரசியல் தலைமைகளின் கவனம் அதில் குவிக்கப்பட்டுள்ளதால், பிள்ளையார் பீடத்தை உடைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மனோ கணேசன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரிடம் ஆலய நிர்வாகசபை இது குறித்து நேற்று பேசியது. அமைச்சர் மனோ கணேசன், தான் நேரடியாக திருகோணமலைக்கு வருவதாக வாக்களித்துள்ளார்.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம், இப்போது உடைக்கப்படும் பிள்ளையார் பீடத்தை திறந்து வைத்தவர், திருகோணமலை எம்.பி இரா.சம்பந்தன்!

நடந்தது என்ன?

கடந்த 18ம் திகதி கன்னியா வெந்நீர் ஊற்றிற்கு அருகில் உள்ள பிள்ளையார் ஆலய பீடம் உடைக்கப்பட்டது. தொல்லியல் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட அதிகாரியின் அனுமதியுடன்தான் அந்த பணி நடந்தது.

பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள கிணறு ஒன்றின் ஒரு பகுதி உடைந்திருந்தது. கிணற்றை திருத்துவதற்கும், பிள்ளையார் ஆலயத்திற்குள் வர்ணம் பூசுவது உள்ளிட்ட சிறிய திருத்தங்களிற்கும் ஆலய நிர்வாகம், தொல்லியல் திணைக்களத்திடம் விண்ணப்பத்திருந்தது. எனினும், கிணற்றை திருத்த முடியாது, பிள்ளையார் ஆலயத்திற்குள் சிறிய திருத்தம் செய்யுங்கள் என தொல்லியல் திணைக்களம் அறிவித்திருந்தது.

மூடப்படும் கிணறு

அத்துடன், அந்த கிணற்றை மூடப்போவதாகவும் அறிவித்தனர். இதேவேளை, அந்த கிணற்றை திருத்த உப்புவெளி பிரதேசசபை நிதி ஒதுக்கியிருந்தது.

தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் உத்தரவுப்படி, அந்த பிள்ளையார் ஆலயத்தின் பீடம் உடைக்கப்பட்டு, அந்த கற்களை கொண்டே கிணற்றை மூடினார்கள்.

பீடம் உடைக்கப்படும் தகவல் பிரதேசசெயலகம் ஊடாக மாவட்ட செயலரிடம் அறிவிக்கப்பட்டது. மாவட்ட செயலர், அந்த பணியை நிறுத்தும்படி உத்தரவிட்டிருந்தார்.

எனினும், 21ம் திகதி மீளவும் பீடம் உடைக்கப்பட்டது. திருகோணமலை தென்கயிலை பீடம், ஆலய நிர்வாகசபை, இளைஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 22ம் திகதி அங்கு இளைஞர்கள் கூடி, பீடத்தை உடைக்க விட மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், அதை மீறி உடைக்கப்பட்டது.

இதன்போது குச்சவெளி பிரதேச செயலக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பீடம் உடைக்கப்படுகிறதா என்பதை நேரில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட செயலர் உத்தரவிட்டிருந்ததாக அவர்கள் கூறினர். அவர்களின் கண் முன்பாக பீடம் உடைக்கப்பட்டது. அதை அவர்கள் மாவட்ட செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

அந் பகுதி தொல்லியல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட இடம். அங்கு கட்டுமானம் செய்ய முடியாது என்பதை போல, இருக்கும் கட்டுமானங்களையும் உடைக்க முடியாது. அதை மீறியே தொல்லியல் திணைக்கள அதிகார பீடத்தை உடைத்தார். அது குறித்து பொலிஸ் முறைப்பாடு வழங்கும்படி இளைஞர்கள் வலியுறுத்தியும், ஆலய நிர்வாகசபை தயங்கியது. இறுதியில், 23ம் திகதி இளைஞர்களின் கடும் வற்புறுத்தலின் பின்னர், உப்புவெளி பொலிசில் ஆலய நிர்வாகம் முறைப்பாடு பதிவு செய்தது.

மறுநாள்- 24ம் திகதி- இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட செயலர் ஒரு கலந்துரையாடல் நடத்தினார். ஆர்வமுடையவர்கள் வருமாறு அழைப்பும் விடுத்திருந்தார். ஆலய நிர்வாகம், இளைஞர்கள், அந்த காணி உரிமையாளரான பெண்மணி ஆகியோர் சென்றிருந்தனர். கன்னியா வெல்கம் விகாரை விகாராதிபதியும் வந்திருந்தார்.

அந்த பகுதி பௌத்தர்களிற்குரியது என அவர் அங்கு சச்சரவில் ஈடுபட்டார். காணி உரிமையாளரான பெண்மணியுடனும் தர்க்கத்தில் ஈடுபட்டார். தொல்லியல் திணைக்களத்திற்கும், ஆலய நிர்வாகத்திற்குமான பிரச்சனையில் எதற்கு நீங்கள் மூக்கை நுழைக்கிறீர்கள் என பிக்குவின் வாயை அடைத்தார் பெண்மணி.

பீடம் உடைப்பதை நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட செயலர் தெரிவித்தார்.

காணி உரிமையாளரான பெண்

கன்னியா வெந்நீர் ஊற்று, மாரியம்மன் ஆலயம், பிள்ளையார், சிவன் ஆலயங்கள் அமைந்துள்ள 8 ஏக்கர் காணி தனியாரான பெண்மணி ஒருவருக்கு சொந்தமானதாக இருந்தது. சுமார் 3 தலைமுறைகளாக அந்த புராதன சின்னங்களை அவர்கள் பராமரித்து வந்தனர்.

அவர்களிடம் அதற்கான உரித்து சென்ற கதை சுவாரஸ்யமானது.

திருகோணமலையிலிருந்த ஆங்கிலேய அதிகாரியொருவர் திடீரென நோய்வாய்ப்பட்டிருந்தார். பல சிகிச்சை செய்தும் அவர் குணமாகவில்லை. இறுதியாக கன்னியா வெந்நீர் ஊற்றில் நீராடி, அருகிலிருந்த பிள்ளையார் ஆலயத்தில் வழிபட்டு குணமடைந்தார். அப்போது அந்த ஆலயத்தை நிர்வகித்து வந்தவரிடம், வெந்நீர் ஊற்று உள்ளிட்ட 8 ஏக்கர் காணியை ஆங்கிலேய அதிகாரி வழங்கினார். அவர்களின் பரம்பரையே அதை நிர்வகித்து வந்தது. பின்னர், தொல்லியல் பிரதேசமாக அது பிரகடனப்படுத்தப்பட்டு, அரசு அதை பொறுப்பேற்றுள்ளது. எனினும், அதற்கான மாற்று காணி அந்த பெண்மணிக்கு வழங்கப்படவில்லை.

கன்னியாவின் வரலாறு

கன்னியாவின் வரலாறு நெடியது. சுமார் 1000 வருடங்களாக அங்கு தமிழர்கள் தமது மூதாதையர்களிற்கு பிதிர்க்கடன்களை செய்து வருகிறார்கள் என நம்பப்படுகிறது. ஒல்லாந்தர் கால குறிப்புக்களிலும் அது உள்ளது.

இராவணன் தனது தாய்க்கு பிதிர்க்கடன் நிறைவேற்றிய இடமென்ற ஐதீகமும் உள்ளது.

இதேவேளை, இந்த பகுதிக்கு சமீபமாக கி.பி 2ம் நூற்றாண்டில் கட்டப்பட ராஜராஜ பெரும்பள்ளியென்ற (வெல்கம் விகாரை) தமிழ் பௌத்த பல்கலைகழகமும் அமைந்துள்ளது. இன்று உலகிலேயே எஞ்சியுள்ள ஒரேயொரு தமிழ் பௌத்த பல்கலைகழகம் அதுதான். கி.பி 10ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் அதை புனரமைத்து, அதற்கு பல கல்வெட்டுக்களை பரிசளித்திருந்தான்.

அந்த பகுதியில் தமிழ் சைவர்களும், தமிழ் பௌத்தர்களும் பண்டைக்காலத்திலேயே வாழ்ந்திருந்தார்கள் என்பது உறுதியாகிறது. எனினும், வாழ்ந்தவர் அனைவரும் தமிழரே!

இதில் துயரம் என்னவென்றால், தற்போதைய வெல்கம் விகாரை, ராஜராஜ பெரும்பள்ளிக்கு அருகில் பின்னாளில் அமைக்கப்பட்டது. முன்னைய ராஜராஜ பெரும்பள்ளியின் மூலக்கட்டடம் இப்பொழுதும் சிதைந்து போயுள்ளது. அதை காப்பாற்ற வேண்டுமென்ற துளியளவு முயற்சியிலும் தொல்லியல் துறை ஈடுபடவில்லை. அந்த மூலக்கட்டடத்தில் இருந்து கற்களை வழிபாட்டிற்காகவும், நினைவாகவும் பலர் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். அதை யாரும் தடுப்பாரில்லை. தமிழ் பௌத்த அடையாளம் என்பதால், அதை அழியவிடும் முயற்சியில் தொல்லியல் துறை ஈடுபடுகிறதா என்ற சந்தேகம் இயல்பாவவே ஏற்படுகிறது.

பிள்ளையார் ஆலயத்தின் கதி

சுனாமியின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணி நிதியில், கன்னியா பிள்ளையார் ஆலயத்தையும் புனரமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ஆலயம் உடைக்கப்பட்டது. பின்னர் மீள்கட்டுமான பணி ஆரம்பிக்கும் சமயத்தில், தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். தொல்லியல் துறையின் பிரதேசத்தில் கட்டுமானம் செய்ய முடியாது என அவர் கோரினார். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, பிள்ளையார் ஆலய பணிக்கு தடை உத்தரவிட்டது. இதனால் இப்பொழுது அங்கு பிள்ளையார் ஆலயம் இல்லை. ஒரு பீடம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அதை இரா.சம்பந்தன் திறந்து வைத்தார். அந்த பீடமே உடைக்கப்பட்டுள்ளது.

சட்டம் நமக்கல்ல

தொல்லியல் பிரதேசத்தில் பிள்ளையார் ஆலயம் அமைக்க முடியாதே தவிர, விகாரை அமைக்கலாம். 2005, 2006 காலப்பகுதியில் கன்னியா தொல்லியல் பிரதேசத்திற்குள் விகாரையொன்று அமைக்கப்பட்டது.

அதாவது, பிள்ளையார் ஆலயத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்த பின்னர் இதன் கட்டுமானப்பணி ஆரம்பித்தது. அப்போது திருகோணமலையிலுள்ள இளைஞர்கள் சிலர், மாவட்டத்திலுள்ள அரசியல், சமூக பிரமுகர்களை சந்தித்து, விகாரை அமைப்பதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடச் சொல்லி கேட்டார்கள். திருகோணமலை எம்.பியாக இருந்த இரா.சம்பந்தனிடமும் இந்த கோரிக்கையை வைத்தார்கள். எனினும், யாருமே அதை கணக்கில் எடுக்கவில்லை. கன்னியாவில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டது.

இதேவேளை, அந்த பகுதியில் தொல்லியல் துறை பௌத்த அடையாளங்களை உருவாக்குவதிலேயே குறியாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்துத்துவ எழுச்சி

யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் இந்திய இறக்குமதி இந்துத்துவ எழுச்சி அதிகரித்து வருகிறது. மத அடிப்படை சிந்தனை தீங்கானது என ஒரு விமர்சனம் உள்ளது. இந்திய தூதரகம், புலனாய்வு அமைப்புக்களின் பின்னணியில் சிவசேனை போன்ற அமைப்புக்கள் தீவிரமாக செயற்பட ஆரம்பிப்பதாக விமர்சனங்கள் உண்டு.

இந்துத்துவ எழுச்சி நன்மையா, தீமையா என்ற விவாதத்திற்குள் நுழைவது நமது நோக்கமல்ல. ஆனால், இப்பொழுது திருகோணமலையில் கன்னியா காப்பாற்றப்பட வேண்டுமென்ற தீவிர நிலைப்பாட்டின் பின்னணியில் இந்த அமைப்புக்களும் உண்டு. அரசியல் தலைமைகளின் பலவீனமே, இந்த அமைப்புக்களின் எழுச்சிக்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here